🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமுதாய தலைவர்கள் - சென்னை-ஆசிரியர். திரு.N.நல்லையா

திரு.ந.நல்லையா அவர்கள் 1942 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா சக்கரப்பநாயக்கனூர் கிராமத்தில் திரு.B.நல்லையா திருமதி.அழகம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு திருமணமாகி திருமதி. N.சுப்புலட்சுமி என்ற மனைவியும், N.துளசிராம், N.துளசி லட்சுமணராஜ் என்ற இரு மகன்களும், N.கீதாஞ்சலி என்ற மகளும் உள்ளனர். 


இயல்பிலேயே சமுதாயப்பணியில் அதிக நாட்டமுள்ளவர், தனது 14-வது வயதில் சமூகப் பெரியோர்களுடன் ஏற்பட்ட தொடர்பால், தீவிர சமுதாயப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தன் கல்லூரி நாட்களில் நண்பர்களுடன் இணைந்து கட்டபொம்மன் மன்றம் தொடங்கியவர்களில் ஒருவர். விருதுநகர் தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியைத் தொடங்கியவர், முதுகலைப் பட்டம் பெற்று, ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டே சமுதாயப் பணியையும் தொடர்ந்தார். தமிழகம் முழுவதும் குக்கிராமம் வரை சுற்றுப் பயணம் மேற்கொண்டு கட்டபொம்மன் கொடியேற்றி அவரது புகழ் பரப்பி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவராதலால், தமிழகம் முழுவதும் சமுதாயத்தினருக்கு நன்கு அறிமுகமானவர்.

அரசு மற்றும் பெருநிறுவனங்களில் பணியாற்றுபவர் சாதிய அமைப்புகளில் பங்கேற்பதற்கு சிரமங்கள் இருப்பதைக் கருத்தில்கொண்டு, அனைவரும் சமுதாயப்பணியில் பங்கேற்க வழிவகை செய்யும் வகையில், 1980-களில் மாவீரன் கட்டபொம்மன் பெயரில் பண்பாட்டுக் கழகம் தொடங்கிய பொழுது அதன் தொடக்ககால முன்னனி தலைவர்களில் ஒருவராக விளங்கினார். 1983-ல் பண்பாட்டுக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்று, நம்மின இளைஞர்களை சமுதாயப் பணியில் ஈடுபடுத்தி ஊக்கப்படுத்தவும், சமுதாயச் செய்திகளை தமிழகம் முழுவதும் கொண்டுசேர்க்கும் வகையில், அமரர் க.சுப்பு Ex M.L.A அவர்களின் ஆலோசனையின் பேரில், “வீரபாண்டியன்” மாத இதழைத் தொடங்கி நடத்தியவர்.

வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தின் தலைவராக இருந்தபொழுது,, மதுரை தமுக்கம் மைதானத்தில், மரியாதைக்குரிய மாண்புமிகு அமைச்சர் K.K.S.S.R.R அவர்கள் தலைமையில் முப்பெரும் விழாவினை (நமது இனமானப் பெருங்கவி கவிராஜ பண்டிதர் ஜெக வீரபாண்டியனாரின் நூற்றாண்டு விழா, க.சுப்பு M.L.A அவர்களின் வெளிநாட்டு பயண வெற்றி விழா, காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றியமைக்காக அண்ணா விருது பெற்ற அமரர் D.S.P வை .ஜெயராஜ் அவர்களுக்குப் பாராட்டு விழா) ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்தியவர். தலைமை நிர்வாகிகள் மூன்றாண்டுகள் மட்டுமே பொறுப்பிலிருக்க வேண்டும் என்ற பண்பாட்டுக் கழகத்தின் விதிகளுக்குப்உட்பட்டு 1987-ல் பொறுப்பிலிருந்து விலகி இளைஞர்களுக்கு வழிவிட்டார்.

1989-ல் இராஜகம்பள மகாஜன சங்கத்தின் மாநிலத் தலைவராக, விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் அமரர் M.சுந்தரராஜன் அவர்களும், பொதுச் செயலாளராக அமரர் வை.பாலுச்சாமி நாயக்கரும் இருந்த கால கட்டத்தில், மகாஜன சங்கத்தின் செயலாளராக இருந்த திரு.நல்லையா அவர்கள்,அப்பெரியோர்களுடன் இணைந்து, மரியாதைக்குரிய அமைச்சர்  திரு.K.K.S.S.R.R அவர்கள் பெருமுயற்சியோடு கட்டபொம்மன் பெயரில் மாவட்டம் அமைய பாடுபட்டார். மகாஜன சங்கத்தின் சார்பில் வெளிவந்த “இராஜ கம்பள முரசு”பத்திரிகை ஆசிரியராக சிலகாலம் பணியாற்றினார்.

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தபால் தலை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மகாஜன சங்கத்தின் மாநிலப் பொருளாளர் திரு.சங்கையா நாயக்கர் அவர்களுடன் டெல்லி சென்று, டெல்லி ம.தி.மு.க அமைப்பாளராக இருந்த நமது இனமான சொந்தம் அமரர் திரு. தேவராஜ் அவர்களின் உறுதுணையோடு, “பாராளுமன்றச் சிங்கம்” கற்கண்டுச் சொற்கோ திரு.வை.கோ அவர்களின் பெருமுயற்சியால், முன்னாள் மத்திய அமைச்சர் திருமிகு ஜக்மோகன் அவர்களைச் சந்தித்து ஒப்புதல் பெற்று, தபால் தலை வெளியிடும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தாபல் தலை வெளீயிட்டை பிரமாண்டமாக நடத்திட வேண்டும் என்ற சமுதாயத்தினரின் எண்ணவோட்டத்திற்கேற்ப, சென்னை  வள்ளுவர் கோட்டத்தில் அன்றைய மாண்புமிகு தமிழக முதல்வர், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் வெளியிட, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெற்றுக் கொண்டு நம்மினத்திற்கு பெருமை சேர்த்ததிட உழைத்திட்டார். அதேவிழாவில் மாவீரன் கட்டபொம்மனின் 200-ஆவது பிறந்தநாளைக்கொண்டாடும் வகையில் விழா மலர் தயாரித்து, வெளியிடும் பொறுப்பில் பணியாற்றி, நம்மினத்திற்கு பெருமை சேர்த்தார்.  


2002 ஆம் ஆண்டில் ஆசிரியர் பணியை நிறைவு செய்து சென்னையில் குடியேறியவர் மீனாட்சி மெட்ரிக்குலேசன் பள்ளியில் முதல்வராகப் பணியாற்றுகிறார். சென்னை வாழ் சமுதாயப் பெரியோர்கள் ஆர்வலர்கள், இளைஞர்கள் ஆகியோரின் முயற்சியோடு 2004-ல் வீரபாண்டிய கட்ட பொம்மன் இராஜ கம்பளசமுதாய நலச்சங்கம் தொடங்கியபோது அதன் மூத்த ஆலோசகர்களில் ஒருவராக இருந்து தன் சமுதாயப் பணியைத் தொடர்கிறார் தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் தான் பணியாற்றும் பள்ளியில் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் நடைபெற அனுமதியைப் பெற்றுத்தந்து, இன்று அச்சங்கம் தலைநகர் சென்னையில் பதினைந்தாயிரம் சதுர அடியில் கட்டிடம் அமைத்து ஆலமரம் போல் வேறூன்றக் காரணமாக இருந்தார் என்றால் மிகையல்ல. இன்றும் முதுமை அவரது முற்றம் வந்தபோதும் சமூக மேம்பாட்டிற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டு செயல்பட்டுவருபவர், சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்திற்கு ரூபாய் இரண்டு லட்சத்திற்கும் அதிகமாக வழங்கிய “பர்பிள் கிளப்” உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. திரு.நல்லையா அவர்களின் சமுதாய சேவை இன்னும் பல்லாண்டு தொடர அன்புடன் வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved