🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமுதாய தலைவர்கள் – காடல்குடி.திரு.V.பெரியபூசு நாயக்கர்

திரு.V.பெரியபூசு நாயக்கர் அவர்கள் 1940-இல் தூத்துக்குடி மாவட்டம், விளத்திகுளம் தாலுகா, காடல்குடி அருகில் உள்ள குஞ்சையாபுரம் கிராமத்தில் திரு.வால் நாயக்கர் –திருமதி.காளியம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில், பத்துக்குழந்தைகளில் எட்டாவது குழந்தையாகப் பிறந்தவர். இவருக்கு திருமணமாகி திருமதி.பெ.தனலட்சுமி என்ற மனைவியும், Dr.P.மகேஸ்வரன் M.Sc.,B.Ed.,M.Phil.,Ph.D என்ற மகனும், P.மகேஸ்வரி M.Sc., B.Ed., என்ற மகளும் உள்ளனர்.        

எட்டாவது குழந்தையாக பிறந்ததால் என்னவே கிருஷ்ணனைப்போலவே குடும்பத்தில் கலகம் செய்து, மிக இளம் வயதிலேயே பாகப்பிரிவினைப் பெற்று, தனக்கு கிடைத்த சொற்ப விவசாய நிலங்களுடனும், பெரிய கடன்தொகையையும் ஏற்றுக்கொண்டு, நம்பிக்கையுடன் வாழ்க்கையைத் துவங்கினார். மிகக்கடுமையாக உழைத்தவர், தன் இருபதாண்டுகால உழைப்புக்குப்பின் திரும்பிப்பார்த்தவர், தன் சொத்துமதிப்பை ஐம்பது ஏக்கராக உயர்த்தியிருந்தார்.


தன்னம்பிக்கையுடன் உழைத்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டவருக்கு, பொதுவாழ்க்கையில் நாட்டம் ஏற்பட்டது. திராவிட இயக்கத் தலைவர்களின் மேடைப்பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டிருந்தவர், அறிஞர் அண்ணா அவர்களின் மறைவுக்குப்பின் கலைஞரின் தமிழின் மீதான காதலால், 1970 களில் தி.மு.கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். சுதந்திரத்திரத்திற்குப்பின் காங்கிரஸ் பேரியக்கத்தின் தாக்கம் அதிகமாக இருந்த இப்பகுதியில், தன் சொந்தச் செலவில் கட்சியை வளர்க்க அரும்பாடுபட்டார். அவரின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில், கழகத்தின் மாவட்டப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். தன் சொந்த முயற்சியால் திமுகழகத்தின் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்து, தன் தலைமையில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களை பேச வைத்தார். அக்கூட்டத்தில் மிக அதிகப்படியான மக்கள் கூட்டத்தையும், சிறப்பான ஏற்பாடுகளையும் கண்டு மனமகிழ்ந்த கலைஞர் அவர்கள், திரு.பெரியபூசு நாயக்கர் அவர்களை “காடல்குடி போஸ்” என்று அடைமொழி சூட்டி பாராட்டினார். இத்தோடு திருப்தியடையாத கலைஞர் அவர்கள், திரு.பெரியபூசு நாயக்கர் அவர்களை சென்னை, கோபாலபுரத்திலுள்ள தன் வீட்டிற்கு அழைத்து விருந்தளித்து மகிழ்ந்தார். இராஜகம்பளத்தார் வரலாற்றில் ஒரு எம்.எல்.ஏ ஆகவோ, மாவட்டச்செயலாளராகவோ இல்லாத ஒருவர், கட்சித்தலைவரை அழைத்து தன் தலைமையில் பேசவைத்ததும், அத்தலைவர் தன் வீட்டிற்கே அழைத்து விருந்தளித்த பெருமையையும் பெற்றவர் திரு.பெரிய பூசு நாயக்கர் அவர்களாக மட்டுமே இருக்கக்கூடும்.

திமுகழகத்தில் செயல்படும் பொழுது திரு. வை.கோ. அவர்களின் நட்பையும், அன்பையும் பெற்றார். அந்த நட்பின் காரணமாக திரு. வை.கோ அவர்கள் தி.மு.கழகத்தில் இருந்து பிரிந்து 1993-இல் மதிமுக வை தொடங்கிய பொழுது, திரு.வைகோ அவர்களின் நேரடி வேண்டுகோளை ஏற்று, அவர் மீது கொண்ட அன்பால் ம.தி.மு.க வில் இணைந்தார். அப்பொழுது பட்டி-தொட்டி எல்லாம் தன் சொந்த செலவில் ம.தி.மு.கழகத்திற்கு நூற்றுக்கணக்கான கிளைகளை உருவாக்கி, ஆயிரக்கணக்கான இளைஞர்களை மதி.மு.க வில் இணைத்தார். இவர் போன்றவர்களின் செயல்பாட்டால் வை.கோ அவர்கள் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக களமிறங்கும் அளவிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தினர். சரியாக பத்துவருடங்கள் கழித்து உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அரசியலில் இருந்தே ஒதுங்கியவர், தனது முழு கவனத்தையும் மீண்டும் விவசாயத்தின்பால் திருப்பினார்.


சில கால அரசியல் வனவாசத்திற்க்குப்பின், இவரின் உழைப்பையும், தன்னலம் கருதாத கட்சி சேவைகளையும் அஇஅதிமுகழகம் பயன்படுத்திக்கொள்ள விரும்பியபொழுது அதை ஏற்க மறுத்தநிலையில்,  இவரின் மைத்துனரும், அ.தி.மு.க புதூர் ஒன்றியச் செயலாளருமான திரு.ஞானகுருசாமி (இவரைப்பற்றி மேலும் விபரங்களுக்கு, நீலநிறத்திலுள்ள அவரின் பெயர் மீது விரல் வைக்கவும்) அவர்களின் தொடர் வற்புறுத்தலாலும், ஆதரவாளர்களின் வேண்டுகோளையும் ஏற்று ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் அஇஅதிமுக வில் இணைந்தார். தீவிரமான கட்சிப்பணிகளின் மூலம் மிகக்குறுகிய காலத்திலேயே கட்சித் தலைமையின் கவனத்தைப் பெற்ற திரு.பூசு நாயக்கர் அவர்கள் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், அ.தி.மு.க வின் புதூர் பேரூராட்சி தலைவர் வேட்பாளராக புரட்சித் தலைவி அம்மா அவர்களால் அறிவிக்கப்பட்டார். பல சமுதாயங்கள் கலந்து வாழும் புதூர் பேரூராட்சியில், அனைத்து சமுதாயத்தின் நன்மதிப்பை பெற்றதன் காரணமாக, நூற்றுக்கணக்கான வாக்குவித்தியாசத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றார். இதன் மூலம் இராஜகம்பள நாயக்கர் சமுதாயத்தில் முதல் புதூர் பேரூராட்சித் தலைவராக பதவியேற்கும் வாய்ப்பைப் பெற்றார். தனது பதவிக்காலத்தில் அனைத்து வார்டுகளுக்கும், புதிய சாலைகளையும், குடிநீர் இணைப்புகளையும், சாலையோர மின் விளக்குகளையும் ஏற்படுத்தித்தந்தார். புதூர் நகரை குடிநீர் பற்றாக்குறை இல்லாத, சாலைக் குறைபாடுகள் இல்லாத நகரமாக மாற்றினார்.

அரசியல் பொதுவாழ்வைத்தாண்டி சமுதாயத்தின் மீதும் அதிக பற்றுள்ளவர், புதூர் இராஜகம்பள மகாஜன சங்கத்தின் பொருளாளராக பல ஆண்டுகாலமாக பணியாற்றி வருகிறார். இவரின் முயற்சியால், சமுதாய பெரியோர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், சமுதாய மக்களின் ஆதரவோடு பிரதான சங்க கட்டிடத்தின் பக்கவாட்டில் கட்டிடம் கட்டி விரிவுபடுத்தப்பட்டது.


இவரது ஒரே மகன் திரு.மகேஷ்வரன் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்திலுள்ள விவேகானந்தா கல்லூரியில் கணிதத்துறை உதவிப்பேராசிரியாக பணியாற்றி வருகிறார். மருமகள் திருமதி.M.ரஞ்சனாதேவி.M.A.,B.Ed., குடும்ப நிர்வாகத்தை கவனித்து வருகிறார்.

தன் முனைப்பாலும், உழைப்பாலும் உயர்ந்த உத்தமராக, மிக நீண்ட அரசியல் அனுபவமும், பெரிய தலைவர்களோடு நெருக்கமான தொடர்பையும் பெற்றிருக்கும் திரு.பெரியபூசு நாயக்கர் அவர்கள், சமுதாய இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்து, பண்பட்ட சமுதாயத்தை உருவாக்கிட நீடூடி வாழ்ந்து சேவையாற்றிட வேண்டுமாய் அன்புடன் வேண்டி, வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved