தமிழக முதல்வர் மாண்புமிகு திரு.ஜோசப் விஜய் அவர்களின் மேலான பார்வைக்கு....!
கடந்த சில நாட்களுக்கு முன் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் திரு. அன்புமணி அவர்கள், குறிப்பிட்ட அரசியல் கட்சிகளையும், சமூக இயக்கங்களையும் ஒருங்கிணைத்து சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்திக் கூட்டம் நடத்தியுள்ளார். அந்தக் கூட்டத்தின் முடிவின்படி தமிழக முதல்வரையும், அமைச்சர்களையும் சந்தித்துள்ளார். அது குறித்து செய்தியாளர்களுக்கும் பேட்டி கொடுத்துள்ளார். இது வரவேற்கத் தகுந்ததே.
ஆனால் இந்தச் சந்திப்பில் வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை முதல்வர் அவர்களிடமும், மாண்புமிகு ஆதவ் அர்ஜுனா போன்ற முக்கிய அமைச்சர்களிடமும் வலியுறுத்தி இருக்கிறார் என்பதையும் அறிய முடிகிறது.
தமிழக அரசுக்கும், தமிழக முதல்வர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களுக்கும் சில விடயங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ஏற்கனவே திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான அரசு 2021ல் கொண்டு வந்த 10.5% இட ஒதுக்கீட்டுச் சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தீர்ப்புகள் வழங்கியுள்ளன. அந்தச் சட்டத்தை முற்றிலும் நிராகரித்து விட்டன.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் நீதியரசர்கள் இந்தச் சட்டம் அரசமைப்புச்சட்டம் சரத்து 14, 15, 16 க்கு எதிரானது என்று தெளிவாக தமது தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
"....finally on the 2021 act we are the opinion that there is no substantial basis for classified the Vanniyakula kshatriyas into one group to be treated differently from the remaining 115 communities within the MBCs and DNCs, and therefore, the 2021 act is violation of article 14, 15 and 16".
மேலும் அருந்ததியர் உள் ஒதுக்கீட்டு வழக்கின் தீர்ப்பில் தலைமை நீதிபதியாக இருந்த மாண்பமை நீதியரசர் சந்திர சூட் அவர்கள் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான வரையறைகளைத் தனது தீர்ப்பில் கொடுத்துள்ளார்.
பட்டியலிடப்பட்ட சாதி குழுக்களுக்குள் பாகுபாடு இருந்தால் மட்டுமே உட்பிரிவு வகைப்படுத்துதல் சாத்தியமாகும்.
குழுக்களுக்கு இடையேயான பின்தங்கிய நிலை மற்றும் போதிய பிரதிநிதித்துவத்தைக் காட்ட நேரடி விவர அடிப்படையிலான தரவுகள் அவசியம்.
ஒரு குழு மிகவும் பின்தங்கியிருப்பதாக தரவுகள் மூலம் நிருபணமானால் மட்டுமே உட்பிரிவாக வகைப்படுத்துதல் அனுமதிக்கப்படும் என்று தெளிவாகத் தீர்ப்பளித்துள்ளார்.
அதாவது BC/MBC/SC&ST பிரிவில் உள்ள ஒரு சமூகத்திற்கு தனியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றால், மற்ற சமூகங்களைக் காட்டிலும் அந்தச் சமூகம் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பொருட்படுத்தக் கூடிய அளவில் பின்தங்கி உள்ளது என்பதைத் தரவுகளோடு நிரூபிக்க வேண்டும்.
மேலும் மராத்தா வழக்கில், ஒரு சமூகம் போதிய அளவு கல்வி வேலை வாய்ப்புகளில் பலன்களைப் பெற்றிருந்தால் அவர்களுக்கு கூடுதலாக தனி இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்பதையும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் வலியுறுத்தி உள்ளது.
தனி இட ஒதுக்கீடு கேட்கும் வன்னியர், MBCயில் உள்ள மற்ற சமூகங்களான குறவர், மீனவர்,வலையர், தொட்டிய நாயக்கர், ஊராளி கவுண்டர், வேட்டுவ கவுண்டர், கள்ளர், மறவர் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களை விட பொருட்படுத்தக் கூடிய அளவு கல்வி ரீதியாகவும் சமூக நிலையிலும் பின் தங்கிய நிலையிலா உள்ளனர்? குறவர்களை விட, வலையர்களை விட, தொட்டிய நாயக்கரை விட, மீனவர்களை விட வன்னியர்களின் நிலை பின்தங்கியா உள்ளது? தமிழக அரசு இதற்கான புள்ளி விவரங்களை எடுத்து இதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
சுருக்கமாக, ஒரு குறிப்பிட்ட வகுப்புக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றால் அந்த பிரிவில் உள்ள மற்ற சமூக மக்களைக் காட்டிலும் அவர்கள் "பொருட்படுத்தக் கூடிய அளவு பின்தங்கிய நிலையில் உள்ளனர்" என்பதை தரவுகளோடு நிறுவ வேண்டும் என்பதுதான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் சாரம்.
இல்லையென்றால் அரசியல் லாபத்திற்காகவோ அல்லது அரசியல் அழுத்தத்தின் காரணமாகவோ தமிழக அரசு உள் ஒதுக்கீடு சிறப்புச் சட்டம் கொண்டு வர முயன்றால், அது உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிரானது என்பதையும், நீதிமன்றங்களால் அந்தச் சட்டம் நிராகரிக்கப்படும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
எனவே தமிழக அரசு புதிதாக இட ஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு முன் உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றத் தீர்ப்புகளையும், அரசமைப்பு சட்டங்களையும் மீறாத வகையில் செயல்பட வேண்டும். மேலும் எந்த ஒரு பிரிவிலும் உள் ஒதுக்கீடோ அல்லது தனி இட ஒதுக்கீடோ வழங்க அரசு கொள்கை முடிவு எடுப்பதாக இருந்தால், அந்த தொகுப்பில் உள்ள மற்ற சமூக மக்களையும் கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையாக தனி இட ஒதுக்கீடோ, உள் ஒதுக்கீடோ வழங்கக் கூடாது என்பதையும் வேண்டுகோளாக முன் வைக்கிறோம்.
மேலும், புதிதாக இட ஒதுக்கீடோ,உள் ஒதுக்கீடோ வழங்குவதற்கு முன் சாதிவாரிக் கணக்கெடுப்பும், மற்றும் சமூகங்களின் பின்தங்கிய நிலை குறித்த முறையாக தரவுகளும் முதலில் எடுக்கப்பட வேண்டும்.
கல்வி வேலை வாய்ப்புகளில் எந்தெந்த சமூகங்கள் எவ்வளவு பலன் பெற்றுள்ளன என்பன குறித்த வெள்ளை அறிக்கையையும் வெளியிட வேண்டும்.
எனவே தமிழக அரசு இட ஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு குறித்து எந்தவொரு நிலைப்பாடு எடுப்பதற்கு முன்பு, மேற்கூறிய விடயங்களையும், உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம்.
சமூக நீதிக் கூட்டமைப்பு, தமிழ்நாடு.