Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!

முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!

தமிழ்நாட்டின் 13 வது முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் நிருவன தலைவர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற விழாவில் தமிழக பொறுப்பு ஆளுநர் விஜய் அவர்களுக்கு பதவிப்பிரமாணமும், இரகசியக்காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். இதனைத்தொடர்ந்து திரு.ஆனந்த், திரு.ஆதவ் அர்ஜுனா, திரு.செங்கோட்டையன் உள்ளிட்டவர்களுக்கு தமிழக ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இதன் விவரம் வருமாறு,

17 வது சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மே4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் விஜய் தலைமையிலான தமிழக  வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்தது. ஆட்சியமைப்பதற்குத் தேவையான 118 தொகுதிகள் எந்தக்கட்சிக்கும் கிடைக்காத சூழலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளின் ஆதரவை தவெக நாடும்நிலை ஏற்பட்டது. இக்கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் தன்னிச்சையாக தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் கூட்டணிக்கு தலைமை தாங்கிய திமுக தலைமையுடன் கலந்துபேசி தவெக ஆட்சி அமைக்க வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்தன. இதனைத்தொடர்ந்து கடந்த ஐந்து நாட்களாக நிலவிவந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது.

நேற்று மாலை தவெக தலைவர் விஜய் தமிழக பொறுப்பு ஆளுநரைச் சந்தித்து 118 பேர் கொண்ட ஆதரவுப்பட்டியலை வழங்கியதைத் தொடர்ந்து, விஜய் அவர்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். இதனடிப்படையில் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு விஜய் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்றுக்கொண்டது. விஜய் அவர்கள் முதலமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், வெங்கட்ராமன், கீர்த்தனா, ராஜ்மோகன், அருண்ராஜ், நிர்மல்குமார், பிரபு ஆகியோருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

விஜய் அவர்கள் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டபின் பொதுமக்கள் முன்னிலையில் மூன்று முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டார். அதன்படி முதல் உத்தரவாக 500 யூனிட் வரையிலான மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், இரண்டாவது உத்தரவாக பெண்கள் பாதுகாப்பிற்காக 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' , மூன்றாவது உத்தரவாக மாவட்ட வாரியாக 'போதைப்பொருள் தடுப்பு படை' அமைக்கும் கோப்புகளில் கையெழுத்திட்டார்.

விஜய் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்கும் நிகழ்ச்சியில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநில காங்கிரஸ் தலைவர்கள், இடதுசாரி, விசிக உள்ளிட்ட ஆதரவுக் கட்சியின் தலைவர்கள் கலந்துகொண்டனர். தமிழகத்தின் 13வது முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு.ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர் பெருமக்கள் அனைவருக்கும் தமிழகத்தில் வாழும் இராஜகம்பள சமுதாய மக்களின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Joseph Vijay thottianaicker www.thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண