🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கௌதம முனிவர் அகலிகையை மணந்த வரலாறு!

பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து கடைந்தபோது பாற்கடலிலிருந்து அமிர்தத்துடன் பிறந்தவள் அகல்யா! பார்த்தவர் பிரமிக்கும் பேரழகி அவள். ஒயிலாய் பாற்கடலை விட்டு வெளியே வந்த அவளை இந்திரன் முதலான தேவர்கள் அப்படியே அவளை விழுங்கி விடுவது போலப் பார்த்துப் பெருமூச்சு விட்டனர்.

அவளுடைய அழகில் மதிமயங்கிய இந்திரன், அவளைத் தன்னுடையவள் ஆக்கிக் கொள்ள விரும்பினான். அதே நேரம் மகா தவசீலரான கௌதம முனிவரும் அகலிகையைத் தன் மனைவியாக்கிக் கொள்ள விரும்பினார்.

இந்த இருவரும் தங்கள் விருப்பத்தைப் பிரம்மதேவரிடம் தெரிவித்தனர். உடனே பிரம்மதேவர், 'ஒரு போட்டியின் மூலமே இதற்குத் தீர்வு காண முடியும். என்று கருதி, இருவரையும் நோக்கி, மகத்தானவர்களே. உங்கள் ஆசை நியாயமானதே ஆனால், உங்களில் ஒருவர் மட்டுமே இந்த கன்னியை அடைய முடியும். நான் கூறும் நிபந்தனையை ஏற்று, யார் அதை முதலில் நிறைவேற்றுகிறீர்களோ அவருக்கே இவள் உரியவள். உங்களில் யார் முன்னும் பின்னும் முகங்கொண்ட பசுவைக் கண்டு, அதை மும்முறை வலம் வந்து வணங்கி, முதலில் என்னிடம் வந்து தக்க ஆதாரத்துடன் கூறுகிறீர்களோ, அவரே இந்த அகலிகைக்கு மாலைசூட்டத் தகுதியானவர்!'' என்றார்.

அதைக் கேட்ட தேவேந்திரன், ''முன்னும் பின்னும் முகங்கள் கொண்ட பசுதானே. இதோ, இப்போதே புறப்படுகிறேன். மூவுலகிலும் அப்படிப்பட்ட பசு எங்கிருந்தாலும் அதைக் கண்டுபிடித்து, வணங்கி இந்த அழகியின் கரம் பற்றுகிறேன்!'' என்று கூறித் தனது மேக வாகனத்தில் ஏறி உலகங்களைச் சுற்றி வரப்புறப்பட்டான். கௌதமரோ பிரம்மனின் நிபந்தனையைக் கேட்டுச் சோர்வடைந்தார்.

முன்புறமும் பின்புறமும் முகங்கொண்ட பசு எங்குள்ளது? அதை இதுவரை நான் கண்டதே இல்லை. நான் எப்படி அதைக் காண முடியும்? என்று எண்ணியவர், சரி நம்மால் ஆவது எது ஈசன் விட்ட வழி என்று தீர்மானித்து ஈஸ்வர தியானத்தில் அமர்ந்தார்.

அப்போது நாரதர் அங்கே வந்தார். கௌதமர் அவரை வரவேற்று உபசரித்தார். அப்போது நாரதர், மகரிஷி தங்கள் உள்ளத்தில் உள்ள ஆசையையும் பிரம்மதேவரின் நிபந்தனையையும் நான் அறிவேன், வாருங்கள். அருகில் ஒரு கோசாலை உள்ளது. அங்கே சென்று முன்னும் பின்னும் முகம் கொண்ட பசு உள்ளதா என பார்க்கலாம்!'' என்றார்.

இதைக் கேட்டு கௌதமர் சந்தோஷமடைந்தார். பசுக்கள் நிறைந்த அந்த கோசாலைக்கு இருவரும் சென்றனர். ஆனால் அங்கு அவர்கள் தேடிய பசு தென்படவில்லை. கௌதமர் மனம் சோர்ந்தார். நாரதரைப் பார்த்து, கர்ப்பத்தில் உண்டாகும் மாற்றங்களினால் அபூர்வமாக ஒன்றிரண்டு பசுக்கள் இரண்டு தலை கொண்ட கன்றை ஈனுவதைக் கண்டுள்ளேன். ஆனால், முன்னும் பின்னும் சிரங்கள் உள்ள பசுவை நான் கண்டதில்லை என்றார் விரக்தியுடன்.

தான் விரும்பிய அகலிகை தனக்குக் கிடைப்பாளோ மாட்டாளோ என்ற ஆதங்கம் ஒரு புறம். போட்டியில் இந்திரன் வெற்றிகண்டால், அதனால் தான் அடையவிருக்கும் சிறுமை மறுபுறம். இதை எண்ணி பெரும் கலக்கத்தில் இருந்தார் கௌதமர்.

அப்போது, கௌதமரே கவலைப்படாதீர். நான்முகன் கூற்று தவறாகாது. அதோ பாருங்கள், முன்னும் பின்னும் முகங்கள் கொண்ட கோமாதா என்று குதூகலத்தோடு ஒலித்த நாரதரின் குரலைக் கேட்ட கௌதமர், அவர் சுட்டிக் காட்டிய திசையில் பார்த்தார்.

அங்கே பசு ஒன்று, கன்றை ஈன்று கொண்டிருந்தது. பசுவின் பின்புறம் வெளிப்பட்ட கன்றின் முகம் பார்ப்பதற்கு பரவசமாக இருந்தது. முன்னும் பின்னுமாக இரு பசு முகங்கள் தெரிவதுபோல் அந்தக் காட்சி சட்டென உணர்த்தியது.

அதைக் கண்டு உளம் பூரித்த கௌதமர், நாரதருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, விரைந்து சென்று அந்தப் பசுவை மும்முறை வலம் வந்து நமஸ்கரித்தார். பின்னர் நாரதர் உடன்வர, பிரம்மதேவரைச் சந்தித்து, முன்னும் பின்னும் முகம் கொண்ட பசுவைத் தான் பார்த்து வந்த விவரத்தைக் கூறினார். நாரதரும் கௌதமரின் கூற்றை ஆமோதித்தார். அதைக் கேட்டு மிகவும் திருப்தியடைந்த பிரம்மன், அகலிகையை கௌதமருக்கு வேதமுறைப்படி மணம் முடித்து வைத்தார்.

அப்போது, மூவுலகைச் சுற்றி வந்தும் பிரம்மன் குறிப்பிட்ட பசுவைக் காண முடியாமல் மனச் சோர்வுடன், பிரம்மனது இருப்பிடத்தை இந்திரன் அடைந்தான். அங்கே கௌதமர், பிரம்மனின் நிபந்தனையைப் பூர்த்தி செய்து போட்டியில் வெற்றி பெற்று அகலிகையின் கரம் பற்றி ஆனந்தமாக இருப்பதைக் கண்டான்.

'எனக்குக் கிடைக்க வேண்டிய இந்த எழிலணங்கு போயும் போயும் மரவுரியணிந்து, தாடியும் மீசையுமாக ரோமக் காடாக இருக்கும் இந்த முனிவருக்கு மனைவியாகிவிட்டாளே! இது எந்த வகையில் நியாயமாகும்? இவள் இருக்க வேண்டியது தேவலோகமல்லவா?’ என்று பொருமினான்.

ஆயினும் அகலிகை மீது இந்திரன் கொண்ட வேட்கை சற்றும் தணியவில்லை. அது அவனுள் கனன்று எரிந்து கொண்டிருந்தது. அதன் விளைவுதான் பின்னர் ஒருநாள் அவன் அகலிகையின் இருப்பிடத்துக்குச் சென்று.

பின்னிரவில் சேவல்போல் கூவ, கௌதமர் வைகறைப்பொழுது என்று எண்ணி நீராடச் செல்ல, கௌதமர் உருவில் இந்திரன் குடிலுக்குள் சென்று அகலிகையை அணைய அவளும் கணவர்தான் திரும்பி வந்திருக்கிறார் என்று எண்ணி உடன்பட. இது எல்லோருக்கும் தெரிந்த மிகப் பிரபலமான கதை.

இன்னும் சரியாகப் பொழுது விடியவில்லை என்பதை உணர்ந்து கௌதமர் குடிலுக்குத் திரும்ப இந்திரன் பூனை வடிவம்கொண்டு நழுவ கௌதமர் விஷயத்தைப் புரிந்துகொண்டு அவனைச் சபிக்க, அகலிகையும் உண்மை உணர்ந்து கௌதமர் காலில் விழுந்து கதற, "கற்பில் உறுதியில்லாத நீ கல்லாகப் போ'' என்று சபித்துப் பின்பு தசரத ராமன் அடிப்பொடி பட்டால் உன் சாபம், பாவம் இரண்டுமே தீரும்'' என்று அருளுகிறார். பின்பு ராமாவதாரத்தின்போது காட்டிற்கு ராமர் சென்றபோது அங்கு கல்லாய்க் கிடந்த அகலிகை மீது அவர் பாதத் துளிபட அகல்யா உயிர் பெற்று ராமர் பாதங்களில் பணிகிறாள். அவள் சாபம், பாவம் இரண்டுமே தீர்ந்தது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved