பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 499/500 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார் தங்கமகள் கோபிகா!

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள சதுமுகை, நடுப்பாளையம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர் திரு.இராஜேந்திரன். வேளாண்பொறியியல் துறையில் பொறியாளராக பணியாற்றி வரும் இராஜேந்திரன், மனைவி ஸ்ரீதேவி மற்றும் இரண்டு பெண்பிள்ளைகளோடு சத்தியமங்கலம் அருகேயுள்ள அரசூர் கிராமத்தில் தற்போது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
எம்சிஏ பட்டாதாரியான மூத்தமகள் செல்வி ஸ்ரீநிகா பன்னாட்டு நிறுவனமொன்றில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இளையமகள் செல்வி கோபிகா, கோபி நகரிலுள்ள CKK பழனியம்மாள் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதிவரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்று தேர்வெழுதியிருந்தார் செல்வி கோபிகா. இந்த ஆண்டு 4,107 மையங்களில் நடைபெற்ற பொதுத்தேர்வில் செல்வி கோபிகா உள்ளிட்ட 9,08,000 மாணவ-மாணவிகள் பங்கேற்று தேர்வெழுதி முடிவுக்காக காத்திருந்தனர்.
இதனையடுத்து இன்று காலை 9.30 மணியளவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் நான்கு பேர் முதலிடம் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. அதன்படி மாநில அளவில் முதலிடம் பிடித்தவர்கள் பட்டியலில் செல்வி கோபிகா இடம்பிடித்துள்ளார் என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. தமிழ் பாடத்தில் 100 க்கு 99 மதிப்பெண் பெற்றுள்ள செல்வி கோபிகா மற்ற பாடங்கள் அனைத்திலும் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மாநில அளவில் முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ள மற்றவர்களும் கோபிகா வைப் போன்றே தமிழில் 99 மதிப்பெண்களும், மற்ற பாடங்களில் 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
மாநில அளவில் முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ள செல்வி கோபிகா, கணினிதுறையில் பொறியாளராக சாதிக்கவேண்டும் என்று ஆர்வம் கொண்டுள்ளதாக அவரது தந்தை தொட்டிய நாயக்கர்.காம் இணையதளத்திற்கு அளித்த தகவலில் தெரிவித்துள்ளார். இந்தாண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த ஏராளமான குழந்தைகள் மிக அதிக மதிப்பெண் பெற்று தேர்வாகியுள்ளது சமூக ஊடகங்களின் வாயிலாக தெரிய வருகிறது.
முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ள கோபிகா வுக்கு சமுதாயத் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதேபோல் வெற்றிபெற்ற மற்ற மாணவ, மாணவியருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள தலைவர்கள், தேர்வில் தவறிய மாணவர்கள் நெஞ்சுரத்தோடு மீண்டும் தேர்வெழுதி வெற்றிபெற வாழ்த்தியுள்ளனர்.