விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், மேலூர் துரைச்சாமிபுரத்தில் 1970ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்திய சுதந்திரப் போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் திருவுருவச் சிலை, 55 ஆண்டுகளுக்குப் பின்னர் புனரமைக்கப்பட்டு, நாளை (12.09.2026) தீர்த்த உலா மற்றும் யாகசாலை பூஜைகளுக்குப் பின்னர் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. துரை வைகோ அவர்களால் திறந்து வைக்கப்பட உள்ளது. இதையொட்டி சொக்கநாதன்புத்தூர் – மேலூர் துரைச்சாமிபுரம் கிராமங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன. இதுகுறித்த விவரம் வருமாறு:
பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து வந்த இராஜகம்பள வீரர்கள்
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டத்திற்குட்பட்ட கிராமம் மேலூர் துரைச்சாமிபுரம். இக்கிராமம் முன்பு சிவகிரி ஜமீனுக்குட்பட்ட கிராமமாக இருந்துள்ளது.
சிவகிரி ஜமீன்தார் ஆட்சிக் காலத்தில் இப்பகுதியில் கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்ததால், அவர்களை அடக்குவதற்காக பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரிடம் உதவி கோரப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
இதையடுத்து கொள்ளையர்களை அடக்குவதற்காக பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து இராஜகம்பள சமுதாயத்தைச் சேர்ந்த சில வீரர்கள் சிவகிரி ஜமீனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு சென்ற இராஜகம்பளத்தார்கள் கொள்ளையர்களை அடக்கி ஒடுக்கி, சிவகிரி ஜமீனுக்கு உதவியாக இருந்துள்ளனர்.
இதனால் மகிழ்ச்சியடைந்த சிவகிரி ஜமீன்தார், அந்த வீரர்களை மேலூர் துரைச்சாமிபுரத்தில் குடியமர்த்தி, அங்குள்ள இரண்டு கண்மாய்களை நிர்வகிக்கும் பொறுப்பையும் வழங்கியுள்ளார்.
மேலும், இக்கண்மாய்கள் மூலம் பாசனம் பெறும் விவசாயக் குடிகள், அறுவடை முடிந்ததும் தங்களது விளைச்சலில் ஒரு பகுதியை கண்மாய்களுக்குப் பொறுப்பு வகிக்கும் இராஜகம்பள வீரர்களுக்கு வழங்கும் வகையிலும் வழிவகை செய்துள்ளார்.
அன்று தொடங்கிய இந்தப் பழக்கம் இன்றுவரை பல நூறு ஆண்டுகளாக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போதும் ஆண்டுதோறும் இவ்விரண்டு கண்மாய்களும் இராஜகம்பள சமுதாயத்தினரின் மேற்பார்வையிலேயே திறக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், இக்கண்மாய்கள் மூலம் பாசனம் பெறும் விவசாயிகள் நெல்மணிகளை இன்றும் கம்பளத்தாருக்கு வழங்கி வருகின்றனர்.
தற்போது குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அந்தப் பங்கு உரிமையாளர்களுக்கு சுழற்சி முறையில் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இது ஆண்டுதோறும் ஒரு குடும்பத்திற்கு சுமார் 50 மூட்டைகள் அளவுக்கு வழங்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
மேலும், கண்மாயிலிருந்து நீர் வெளியே செல்லும் சுமார் ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள வாய்க்கால்கரையின் மொத்த அனுபவ உரிமையும் கம்பளத்தாருக்கே உரியதாக உள்ளது. இந்தக் கண்மாயின் கரையில்தான் கம்பளத்தார்கள் அடக்கம் செய்யப்படுவதற்கான மயானமும் அமைந்துள்ளது.
பூர்வீக மண்ணின் நினைவாக கட்டபொம்மன் சிலை
இவ்வாறு மேலூர் துரைச்சாமிபுரத்தில் குடியேறிய கம்பளத்தார்கள், திருமண உறவுகள் மூலம் மக்கள் தொகை அதிகரித்து, இன்று நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
தங்களது பூர்வீக மண்ணான பாஞ்சாலங்குறிச்சியுடனான தொடர்பின் நினைவாகவும், தங்களது மண்ணின் பெருமையை நிலைநிறுத்தும் வகையிலும், பாஞ்சாலங்குறிச்சியின் கடைசி பாளையக்காரரும் மாவீரருமான வீரபாண்டிய கட்டபொம்மனாருக்கு 1970ஆம் ஆண்டு முழு உருவச் சிலையை அமைத்து, ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.
இதற்காக அன்றைய காலகட்டத்தில் சிலை வடிக்கும் சிற்பியை குதிரை வண்டியில் மதுரைக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள கட்டபொம்மன் சிலையை மாதிரியாகக் கொண்டு புதிய சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலையை வடிவமைத்த சிற்பிக்கு சம்பளமாக நெல்மணிகள் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு சுமார் அரைநூற்றாண்டுக்கும் மேலான பழமை வாய்ந்த கட்டபொம்மன் சிலை அமைந்திருந்த பீடம் அருகிலுள்ள சாலை உயர்த்தப்பட்டதால், பீடம் இருந்த பகுதி தாழ்வான நிலைக்குச் சென்றது.
இதையடுத்து மேலூர் துரைச்சாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த கம்பளத்தார்கள் ஒன்றுகூடி, கட்டபொம்மன் சிலை அமைந்துள்ள பீடத்தை உயர்த்த முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, சிலையை முழுமையாக அகற்றி புதிதாகக் கட்டுவது அனுமதி பெறுவதில் சட்டச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏற்கனவே இருந்த கட்டிடத்தின் மீதே மீண்டும் ஒரு தளம் அமைத்து, அதில் புதிய பீடம் கட்டி, கட்டபொம்மன் சிலையை மீண்டும் நிறுவியுள்ளனர்.
க. சுப்பு அவர்களின் நினைவாக திருவுருவப்படம்
கட்டபொம்மன் சிலை மீண்டும் திறப்பு விழா காணும் அதே நாளில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் சமுதாயத் தலைவருமான திரு. க. சுப்பு அவர்களின் திருவுருவப்படமும் திறந்து வைக்கப்பட உள்ளது.
திரு. க. சுப்பு அவர்கள் இராஜபாளையம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, இராஜகம்பளத்தாரின் அனுபவத்திலுள்ள கண்மாய்க் கரையில் அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பும், அந்த இடத்தை ஆக்கிரமிக்கவும் சிலர் முயற்சி செய்துள்ளனர்.
இந்தப் பிரச்சினையை அன்றைய நாளில் தமிழக சட்டமன்றத்தில் எழுப்பி, கம்பளத்தாருக்கான அதிகாரத்தை அரசின் மூலம் உறுதி செய்து கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.
அந்தச் சம்பவத்தை நினைவுகூரும் வகையிலும், நன்றி தெரிவிக்கும் வகையிலும், திரு. க. சுப்பு அவர்களின் திருவுருவப்படம் கட்டபொம்மன் பீடம் அருகே வைக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட உள்ளது.
மூன்று நாட்கள் நடைபெறும் விழா
இவ்வாறு பல்வேறு வரலாற்று நினைவுகளைத் தாங்கியுள்ள மேலூர் துரைச்சாமிபுரத்தில் அமைந்துள்ள மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் சிலை, மீண்டும் புதுப்பொலிவுடன் உயிர்ப்பிக்கப்பட்டு நாளை மாலை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. துரை வைகோ அவர்களால் திறந்து வைக்கப்பட உள்ளது.
இன்று காலை கணபதி ஹோமத்துடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளன. தொடர்ந்து யாகசாலை பூஜைகளும், அன்னதானமும் நடைபெறுகின்றன.
இன்று மாலை வீரசக்கதேவிக்கு பூஜை மற்றும் ஆராதனையும், அதனைத் தொடர்ந்து பெண்களின் தேவராட்டமும் நடைபெற உள்ளது.
இதன் தொடர்ச்சியாக நாளை மாலை தீர்த்த உலா நடைபெற்ற பின்னர், கட்டபொம்மன் சிலையை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. துரை வைகோ அவர்கள் திறந்து வைக்கிறார்.
இறுதியாக, ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு பூஜைக்குப் பின்னர் நடைபெறும் அறுசுவை அன்னதானத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் மாண்புமிகு ஜெகதீஸ்வரி அவர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார்.
விழா ஏற்பாடுகள்
விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேலூர் துரைச்சாமிபுரம் இராஜகம்பள சமுதாய மக்கள் சார்பாக, திரு. பால் லிங்கம் நாயக்கர் தலைமையிலான விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
55 ஆண்டுகளுக்குப் பின்னர் புதுப்பொலிவுடன் மீண்டும் திறக்கப்படவுள்ள மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் திருவுருவச் சிலை, மேலூர் துரைச்சாமிபுரம் மக்களின் பூர்வீக நினைவுகளையும், வரலாற்றுத் தொடர்பையும் மீண்டும் ஒருமுறை உயிர்ப்பிக்கும் முக்கிய நிகழ்வாக அமைய உள்ளது.