கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன?
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பதன் மூலம் பெறப்படும் லிக்யூஃபைட் பெட்ரோலியம் கேஸ் (LPG) என்ற திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு 1910 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த வேதியியலாளர் வால்டர் ஓ. ஸ்னெல்லிங் (Walter O. Snelling) என்பவர் பெட்ரோல் ஆவியாவதைக் குறித்த ஆய்வில், புரொப்பேன் மற்றும் பியூட்டேன் வாயுக்கள் இருப்பதைக் கண்டறிந்தார்.
1918 முதல் உலோகங்களை வெட்டுவதற்கும், 1920-களில் சமையல் எரிபொருளாகவும் வணிக ரீதியாகப் பயன்பாட்டுக்கு வந்தது.இந்தியாவில் முதன்முதலில் டிசம்பர் 1955-ல் 'பர்ஷேன்' (Burshane) என்ற பெயரில் பர்மா ஷெல் (Burmah Shell) நிறுவனத்தால் வணிகப்பயன்பாட்டிற்கு எல்பிஜி அறிமுகப்படுத்தப்பட்டது.வீட்டு உபயோகத்திற்கு 1964-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் புழக்கத்திற்கு வந்தது.
புரொப்பேன் மற்றும் பியூட்டேன் வாயுக்களை அதிக அழுத்தத்தின் மூலம் திரவமாக்கிப் பாதுகாப்பாகச் சிலிண்டர்களில் சேமிக்கலாம் என்பதையும் வால்டர் ஓ. ஸ்னெல்லிங் (Walter O. Snelling) நிரூபித்தார். அமெரிக்க அரசாங்கத்தின் 'Bureau of Mines' இல் பணிபுரிந்த இவர், வாயு மற்றும் எரிபொருள் தொழில்நுட்பத்தில் செய்த சாதனைகளுக்காக பல அறிவியல் விருதுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிலிண்டருக்குள் அதிக அழுத்தத்தில் அடைக்கப்பட்டு திரவ நிலையில் இருக்கும். ஒரு மூடிய கொள்கலனில் அதிக அழுத்தம் கொடுக்கும்போது அந்த அழுத்தம் அதன் உட்புற சுவர்களில் சமமாக பரவவேண்டும் என்பது இயற்பியல் விதி.
அந்த வகையில் எரிவாயுவை மூலைகள் இல்லாத உருளை வடிவ சிலிண்டர்களில் அடைக்கப்படும்போது அழுத்தம் எல்லா பக்கங்களிலும் சீராகப் பரவுகிறது.
எல்பிஜி சிலிண்டர்கள் ஒருவேளை உருளை வடிவத்தில் இல்லாமல் சதுரமாகவோ, செவ்வக வடிவங்களில் இருந்தால் அதனுடைய நான்கு மூலைகளிலும் அதிகப்படியாக அழுத்தம் குவிவதோடு மூலைப் பகுதிகள் அழுத்தத்தை தாங்க முடியாமல் பலவீனமடைந்து சிலிண்டர் வெடிக்கும் அபாயம் ஏற்படும்.
எல்பிஜி சிலிண்டர் உற்பத்தியின் போதும், அதனை பராமரிக்கின்ற போதும் உருளை வடிவமே அதிக பாதுகாப்பை வழங்குகிறது. ஒருவேளை சதுர வடிவ சிலிண்டர்களை தயாரித்தால் அதனுடைய விளிம்புகளை இணைக்க அதிக அளவில் வெல்டிங் செய்யவேண்டிய தேவை இருக்கும்.
பொதுவாக வெல்டிங் செய்யப்பட்ட இடங்கள் வெல்டிங் செய்யாத இடங்களைவிட பலவீனமானவை என்பதால் அதிக அழுத்தத்தின் காரணமாக வெல்டிங் செய்யப்பட்ட இடங்களில் வெடிப்பு ஏற்பட அதிகப்படியான வாய்ப்பு உள்ளது. உருளை வடிவ சிலிண்டர்களில் வெல்டிங் வைக்க வாய்ப்பு இல்லாததால் இத்தகைய நடைமுறை சிக்கல்கள் மிகவும் குறைவாக இருக்கின்றன. மேலும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சிலிண்டர்களை கொண்டு செல்லும்போது உருளை வடிவத்தில் இருப்பதால் எளிதாக இருக்கிறது.
உருளை வடிவமாக இருப்பதால் தரையில் உருட்டி செல்வதன் மூலம் எளிதாக ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதோடு மனித உழைப்பை குறைக்க முடிகிறது. கூர்மையான மூலைகள் இல்லாத உருளை வடிவ சிலிண்டர்களை எடுத்துச்செல்லும் பொழுது காயம் ஏற்படும் அபாயமும் தேய்மானமும் குறைவாக இருக்கிறது அதுவே சதுர வடிவம் ஆகவோ செவ்வக வடிவமாக இருந்தால் கண்டிப்பாக தூக்கித்தான் செல்லவேண்டும்.
மேலும் இதனை எடுத்துச் செல்லும்பொழுது கூர்மையான மூலைகள் காரணமாக காயம் ஏற்படவும் தேய்மானமும் அதிகரிக்கும் என்பதால் சிலிண்டர்கள் உருளை வடிவத்தில் இருக்கின்றன.
எரிவாயு சிலிண்டர்கள் சிவப்பு நிறத்தில் இருப்பதற்கு மிக முக்கிய காரணம் பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை ஆகும்.
சிவப்பு நிறம் என்பது உலகளவில் ஆபத்து அல்லது எச்சரிக்கையின் அடையாளமாகக் கருதப்படுகிறது. எல்.பி.ஜி (LPG) வாயு எளிதில் தீப்பற்றக்கூடியது என்பதால், அதை கவனமாகக் கையாள வேண்டும் என்பதை உணர்த்தவே இந்த நிறம் பயன்படுத்தப்படுகிறது.
சிவப்பு நிறத்திற்கு நீண்ட அலைநீளம் (Longest Wavelength) உள்ளது. இதனால் குறைந்த வெளிச்சத்திலும், தூரத்தில் இருந்தும் கூட இது எளிதில் கண்ணுக்குத் தெரியும்.

