🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அரசியல் வானில் ஓளிரும் நட்சத்திரம் - கரூர். திரு.R.சின்னசாமி

திரு.R.சின்னசாமி அவர்கள் 28.05.1958-ல் கரூர் மாவட்டம், ஆட்டம்பரப்பு கிராமத்தில், திரு.ராம நாயக்கர் – திருமதி.பாப்பாயிஅம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். இவர் நடுநிலைப்பள்ளி வரை கல்வி பயின்றவர் பின் விவசாயப்பணியில் ஈடுபட்டார்.இவருக்கு திருமணமாகி திருமதி.C.செல்வி (இவரைப்பற்றி மேலும் விபரங்களுக்கு நீலநிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்) என்ற மனைவியும் C.அபர்ணா M.B.A., மற்றும்  C.ப்ரீத்தா B.E., என்ற இருமகள்களும் உள்ளனர்.


நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்த திரு.சின்னசாமி அவர்கள், விவசாயிகள் விவசாயம் தவிர,அது சார்ந்த கூடுதல் தொழில்களையும் மேற்கொண்டால் மட்டுமே வெற்றிகரமான விவசாயியாக நீடிக்க முடியும் என்ற சித்தாந்தத்தை 1970-களில் முன்வைத்து உழைத்தவர். அந்தவகையில் தன் குடும்பத்தின் பாரம்பரிய தொழிலான விவசாயம் தவிர, தன் சொந்த நிலத்தில், சிறிய அளவில்,ஒருங்கிணைந்த கோழிப்பண்ணை அமைத்து செயல்பட்டதின் மூலம் விவசாயிகள் கூடுதல் வருமானம் ஈட்டுவது எப்படி என்பதற்கு ஒரு உதாரணமாக விளங்கினார். 1970-களில் அதிகம் கல்வி கற்றிறாத நிலையில், விவசாயிகள் கூடுதல் வருமானத்தைப் பெருக்கவேண்டும் என்ற சிந்தனையுடையவர்கள், சமுதாயத்தில் மிகச்சொற்பமே இருந்திருக்கக்கூடும் என்பதை சுதந்திரத்திற்குப் பின்னான சமுதாய வரலாற்றை ஆராய்ந்தால் புலப்படும். இதை அழுத்தமாக பதிவிடக் காரணம்,பெரிய நிலவுடமையாளர்களாக  இருந்த சமுதாயம் வீழ்ச்சியை நோக்கி பயணிக்க தொடங்கிய காலகட்டமாக அது இருந்தது என்பதுதான். தன் சித்தாந்தத்தில் வெற்றியடைந்தவர் மேலும் தொழிலை விரிவு படுத்திடும் வகையில், கோழிப்பண்ணைகளுடன், கறிக்கோழி நேரடி விற்பனை அங்காடிகள் மற்றும் நாடுமுழுவதும் அங்காடிகளுக்கு விற்பனை, முட்டைக்கோழி வளர்ப்பு, முட்டை விற்பனை என பல்வேறு முயற்சிகளில் தன் கடின உழைப்பால் வெற்றியை சாத்தியமாக்கிக் காட்டினார். இப்படி சாதாரண விவசாயியாக வாழ்க்கையை துவங்கியவர், மாறுபட்ட சிந்தனையால் தன் திருமணத்தின் பொழுதே வெற்றிகரமான தொழிலதிபராக நிலைநிறுத்திக்கொண்டார்.

திருமணத்திற்கு முன்னரே தொழில்துறையில் கால்பதித்து சாதித்தவருக்கு, திருமணத்திற்க்குப்பின் அரசியல்துறையிலும் ஆர்வம் ஏற்பட்டத்தில் வியப்பேதுமில்லை. அதுவரை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக இருந்தவருக்கு, அஇஅதிமுகவில்  இணைந்து அரசியல் பயணத்தை துவங்குவது எளிதாக இருந்தது. 1986-எம்ஜிஆர் ஆட்சிகாலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில், அப்பிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்று அரசியலிலும் தன் வெற்றிப்பயணத்தை தொடர்ந்தார்.


கட்சி அரசியல் தாண்டி சமுதாயத்தினர் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் திரு.சின்னசாமி அவர்கள். கண்ணுக்கெதிரே வீழ்ந்துகிடந்த சமுதாய மக்களை கைதூக்கிவிட  கிடைத எந்த வாய்ப்பையும் புறந்தள்ளிவிடாமல் மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றுபவர். அந்த வகையில் விருதுநகரில் தொடங்கப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் கல்வி அறக்கட்டளையில் இணைந்து பணியாற்ற முன்வந்தவர், சமுதாயம் சம்மந்தபட்ட நிகழ்ச்சிகள் எங்கு. எந்த அமைப்பு சார்பில் நடைபெற்றாலும் பாரபட்சமின்றி கலந்துகொண்டு ஊக்கமளிப்பது திரு.சின்னசாமி அவர்களின் இயல்பு. அமைப்புகளும், இயக்கங்களும் முறைப்படியாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், அரசியல் சார்பின்றியும் நடக்கவேண்டும் என்று விரும்புபவர், அமைப்புகள் குறிப்பிட்ட லட்சியங்களோடும், குறிக்கோளோடும் பயணித்து, அதை சாதித்துக்காட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வருபவர்.

பல்வேறு துறைகளில் சாதித்தவர், தொழில்துறையின் போக்கையும், நிகழும் மாற்றத்தையும் எளிதில் உள்வாங்கிக்கொள்வதில் வல்லவர், அந்தந்த காலகட்டத்திற்கேற்ப தொழில்களுக்கு முக்கியத்துமளித்து தன்னை கட்டமைத்துக்கொள்வதில் வித்தகர். அந்தவகையில் KRC பிராய்லர்ஸ்,  KRC பைனான்ஸ், KRC ரியல் எஸ்டேட் என பல்வேறு துறைசார்ந்த நிறுவனங்களை நடத்திவருபவர், இடைப்பட்ட காலத்தில் பொறியியல் கல்லூரி ஒன்றில் பங்குதாரராகவும் இருந்துள்ளார். அத்துறையின் வீழ்ச்சியை முன்கூட்டியே கணித்து அதிலிருந்து வெளியேறியது, திரு.சின்னசாமி அவர்கள் தொழிலை எப்படி நாடி பிடித்துப்பார்க்கிறார் என்பதற்கு சிறந்த உதாரணம். இது வளர்ந்து வரும் சமுதாய தொழிலதிபர்களுக்கு ஒரு பாடம் என்றால் மிகையல்ல.


வெற்றி என்ற ஒன்றை எப்பொழுதும் தனக்கு சாதகமாக்கிக் கொள்பவர் திரு.சின்னசாமி அவர்கள். சமுதாயம் என்ற அடையாளத்தை சுயலாபத்திற்கோ, வாக்கு அரசியலுக்கோ பயன்படுத்தாமல், அடித்தட்டு மக்களை கைதூக்கிவிட வேண்டும் என்ற அளவில் மட்டுமே சமுதாயப்பணிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரு.சின்னசாமி அவர்கள், அரசியல், பொதுநலன் சார்ந்த விசயங்களில் அனைவரிடத்திலும் பாரபட்சமின்றி செயலாற்றுபவர். அதைஉறுதி செய்யும் வகையில் , கடந்த 2019- டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், சமுதாய வாக்குகள் சொற்பமேயுள்ள  கரூர் மாவட்டம், தந்தோன்றி ஒன்றிய 6 ஆவது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு தன் துணைவியார் திருமதி.செல்வி சின்னசாமி அவர்களை அஇஅதிமுக சார்பில் களமிறக்கி வெற்றிவாகை சூடினார்.  இப்படி பன்முகத்தன்மைகொண்ட திரு ஆர்.சின்னசாமி தம்பதியினர் தொடர்ந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் சேவையாற்றி, அரசியலில் மேன்மேலும் வெற்றிபெற்று சார்ந்துள்ள கட்சிக்கும், சமுதாயத்திற்கு பெருமை சேர்த்திட  வேண்டி அன்புடன் வாழ்த்துகிறோம்.

மேலும் திரு.சின்னசாமி அவர்கள் சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்திற்கு ரூபாய்.200000/- (இரண்டு லட்சம்) ற்கும் அதிகமாக நன்கொடை வழங்கியர்களுக்கான “பர்பிள் கிளப்” உறுப்பினர் என்பது கூடுதல் சிறப்பு.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved