தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஆன்மநேய சேவை விருது பெற்ற சி. முத்துசாமி தம்பதியருக்கு வாழ்த்து! • கோவை தெற்கு மாவட்ட பா.ஜ.க. துணைத் தலைவராக திரு. ஜி. தர்மபிரகாஷ் நியமனம் • பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர் கண்ட இயக்கத்திற்கு இன்று 55 வது பிறந்தநாள்! • பாஞ்சைப் பெருவேந்தனின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றித் தமிழகம் முழுவதும் புகழ்வணக்கம்! • வீரபாண்டிய கட்டபொம்மன் 227-வது நினைவு நாள் – அந்நியனுக்கு தலைவணங்காத தலைவன்! வரலாற்றில் அழியாத மாவீரன்! • ஆன்மநேய சேவை விருது பெற்ற சி. முத்துசாமி தம்பதியருக்கு வாழ்த்து! • கோவை தெற்கு மாவட்ட பா.ஜ.க. துணைத் தலைவராக திரு. ஜி. தர்மபிரகாஷ் நியமனம் • பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர் கண்ட இயக்கத்திற்கு இன்று 55 வது பிறந்தநாள்! • பாஞ்சைப் பெருவேந்தனின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றித் தமிழகம் முழுவதும் புகழ்வணக்கம்! • வீரபாண்டிய கட்டபொம்மன் 227-வது நினைவு நாள் – அந்நியனுக்கு தலைவணங்காத தலைவன்! வரலாற்றில் அழியாத மாவீரன்!
விளம்பரங்கள்
இரண்டு வரலாற்றுச் சாதனைகள் – முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேரில் நன்றி

இரண்டு வரலாற்றுச் சாதனைகள் – முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேரில் நன்றி

Radheyan 21 Oct 2025 | 07:12 PM
பகிர்:

இரண்டு வரலாற்றுச் சாதனைகளை செய்துமுடித்த தமிழக முதல்வரை நேரில் சந்தித்து நன்றி!

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 226-வது நினைவு நாளை முன்னிட்டு, கிண்டி காந்தி மண்டப வளாகத்திற்கு நேரில் வருகை தந்து மாவீரனுக்கு மரியாதை செலுத்திய தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை, இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இராஜகம்பள சமுதாய மக்களின் நீண்டகால கோரிக்கைகளில் முக்கியமான ஒன்றான சென்னையில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாருக்கு சிலை அமைத்தல் மற்றும், அவரது நினைவு நாளில் தமிழக முதலமைச்சரே நேரில் வந்து மரியாதை செலுத்துதல் என இரண்டு முக்கிய நிகழ்வுகளைத் தனது ஆட்சிக்காலத்தில் நிகழ்த்திய முதலமைச்சருக்கு, சமுதாய மக்களின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதன் பின்னணி வருமாறு.

அரைநூற்றாண்டு கனவு – சென்னையில் கட்டபொம்மனாருக்கு சிலை!

இந்திய வரலாற்றில் முதல் சுதந்திரப் போர் என்று வர்ணிக்கப்படும் சிப்பாய்க் கலகத்திற்கு பல பத்தாண்டுகளுக்கு முன்பே அந்நிய ஆட்சிக்கு எதிராக விடுதலை முழக்கம் எழுப்பி, தன் இன்னுயிரைத் தியாகம் செய்த பாஞ்சைப் பெருவேந்தர் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 226-வது நினைவு நாள் அக்டோபர் 16 அன்று நாடெங்கும் மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது.

சுதந்திரத்திற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த மத்திய, மாநில அரசுகள் யாராக இருந்தாலும் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் தியாகத்தைப் போற்றத் தவறியதில்லை. அவரது வரலாற்றை நினைவுகூரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆனால், தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாருக்கு சிலை இல்லையே என்ற மனக்குறை இராஜகம்பள சமுதாய மக்களிடையே நீண்டகாலமாக இருந்து வந்தது.

இந்த ஒற்றைக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலாக சமுதாய அமைப்புகள் அணுகாத அரசியல் கட்சித் தலைவர்களே இல்லை எனும் அளவிற்கு, ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்தக் கோரிக்கை முதன்மையான கோரிக்கையாக முன்வைக்கப்பட்டு வந்தது.

அரசுகளும் அரசியல் கட்சிகளும் கோரிக்கையின் நியாயத்தை ஏற்றுக்கொண்ட போதிலும், பல்வேறு காலகட்டங்களில் ஏற்பட்ட சட்ட மற்றும் நிர்வாகச் சூழ்நிலைகளால் அது தொடர்ந்து தள்ளிப்போய்க்கொண்டே வந்தது.

ஒருகட்டத்தில், பொது இடங்களில் சிலைகள் அமைப்பது தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் சட்டச் சிக்கல்கள் காரணமாக, இனி தலைநகர் சென்னையில் மாவீரன் கட்டபொம்மனாருக்கு சிலை அமைப்பதற்கான வாய்ப்பே இல்லை என்ற நிலை உருவானது.

நம்பிக்கையை மீண்டும் உருவாக்கிய 2021 வாக்குறுதி

இத்தகைய சூழ்நிலையில்தான் 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் வாக்குறுதியில் சுதந்திரப் போராட்டத் தியாகி வீரபாண்டிய கட்டபொம்மனாருக்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்தது.

நிலவிய சட்டச் சூழ்நிலையைச் சுட்டிக்காட்டி, இது நடைமுறைக்கு வராத வெற்று அறிவிப்பாகவே முடிந்துவிடும் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால், 2021-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், இந்த விவகாரத்தை சட்டரீதியான சிக்கல்கள் ஏற்படாத வகையில் முன்னெடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாருக்கு சிலை அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்தார்.

அந்த அறிவிப்புக்குப் பின்னர்தான் இராஜகம்பள சமுதாய மக்களிடையே மீண்டும் நம்பிக்கை பிறந்தது.

அறிவிப்புடன் நின்றுவிடாமல், சிலை அமைப்பதற்குத் தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டது. பணிகள் முன்னெடுக்கப்பட்டு, குறித்த காலத்தில் சிலை அமைக்கப்படுவதையும் முதலமைச்சர் உறுதி செய்தார். தேவையானபோது கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தடையின்றி நிறைவேற்றப்பட்டன.

இறுதியில், தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே நேரடியாக வந்து மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் சிலையைத் திறந்து வைத்தார்.

பல ஆண்டுகளாக நிறைவேறாமல் இருந்த ஒரு கனவு, சட்டச் சிக்கல்களைக் கடந்து நடைமுறைக்கு வந்த அந்த நாள், இராஜகம்பள சமுதாய மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

முதல் வரலாற்றுச் சாதனை – சென்னையில் சிலை!

எந்தச் சட்டச் சிக்கலும் இல்லாத காலங்களில் எளிதாக நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டிய ஒரு கோரிக்கை, பல்வேறு சட்ட மற்றும் நிர்வாகச் சிக்கல்களுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது என்பது இந்த முயற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

அரைநூற்றாண்டுக்கும் மேலாக இராஜகம்பள சமுதாய அமைப்புகள் தொடர்ந்து முன்வைத்து வந்த கோரிக்கையை நிறைவேற்றி, சென்னையின் கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாருக்கு சிலை அமைத்து, அதனைத் தனது கைகளால் திறந்து வைத்தது, சமுதாய மக்களின் பார்வையில் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த முதல் முக்கியமான வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

ஆனால், இதோடு சமுதாய மக்களின் எதிர்பார்ப்பு முடிவடையவில்லை.

“முதலமைச்சரே நேரில் வந்து மரியாதை செலுத்த வேண்டும்!”

கட்டபொம்மனாரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களில் அரசு சார்பில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தி வந்தாலும், தமிழக முதலமைச்சராகப் பொறுப்பு வகிப்பவர் நேரடியாக வந்து கட்டபொம்மனாருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இராஜகம்பள சமுதாய மக்களிடையே நீண்டகாலமாக இருந்து வந்தது.

முதலமைச்சர் பதவியில் இருப்பவர்கள் நேரடியாக கட்டபொம்மன் சிலை அமைந்துள்ள இடத்திற்கு வந்து மரியாதை செலுத்தாதது குறித்து, பல்வேறு காலகட்டங்களில் அரசியல் கட்சிகள் தங்களுக்குள் விமர்சனங்களையும் முன்வைத்து வந்தன.

இந்தச் சூழ்நிலையில்தான் 226-வது நினைவு நாளை முன்னிட்டு ஒரு புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

 48 மணி நேரத்தில் கிடைத்த ஒப்புதல்!

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 226-வது நினைவு நாள் அக்டோபர் 16 அன்று அனுசரிக்கப்படவிருந்த நிலையில், வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் 13.10.2025 அன்று தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் வழங்கப்பட்டது.

அந்தக் கடிதத்தில், இராஜகம்பள சமுதாய மக்களின் அரைநூற்றாண்டுக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சென்னையில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாருக்கு சிலை அமைத்து, தனது கைகளால் திறந்து வைத்த முதலமைச்சர் அவர்கள், அவரது 226-வது நினைவு நாளன்று காந்தி மண்டபம் வருகை தந்து மாவீரனின் தியாகத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

குறுகிய கால இடைவெளியில், சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையிலும், பல்வேறு அரசு மற்றும் கட்சிப் பணிகளுக்கு மத்தியில், முதலமைச்சரின் வருகைக்கு ஒப்புதல் கிடைத்தது.

அதன் தொடர்ச்சியாக, துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் திரு. சேகர்பாபு, திரு. மா.சுப்பிரமணியன், திரு. சாமிநாதன் உள்ளிட்ட அமைச்சர்கள், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி தமிழச்சி தங்கப்பாண்டியன், சென்னை மாநகர மேயர் திருமதி பிரியா, துணை மேயர் திரு. மகேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் திரு. எழிலன் நாகநாதன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கிண்டி காந்தி மண்டபத்திற்கு நேரில் வருகை தந்தார்.

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் சிலை பீடத்திற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதன் மூலம், அந்த நிகழ்வு அரசு சார்ந்த அதிகாரப்பூர்வ மரியாதையாகவும் அமைந்தது.

இரண்டாவது வரலாற்றுச் சாதனை – நினைவு நாளில் நேரில் வீரவணக்கம்!

முதலமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் ஒருவர் கட்டபொம்மனாரின் நினைவு நாளில் நேரில் வந்து மரியாதை செலுத்தியதில்லை என்ற நீண்டகாலக் குற்றச்சாட்டுக்கும் விமர்சனத்திற்கும், இந்த வருகை ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியது.

மாவீரனுக்கு சிலை அமைத்ததோடு மட்டுமல்லாமல், அந்தச் சிலை அமைந்துள்ள கிண்டி காந்தி மண்டப வளாகத்திற்கே அவரது 226-வது நினைவு நாளில் நேரில் வந்து முதலமைச்சர் மரியாதை செலுத்திய நிகழ்வு, இராஜகம்பள சமுதாய மக்களின் பார்வையில் இரண்டாவது முக்கியமான வரலாற்றுச் சாதனையாக அமைந்தது.

இதன் மூலம், “கட்டபொம்மனாருக்கு சிலை வேண்டும்” என்ற அரைநூற்றாண்டுக் கோரிக்கையும், “அவரது நினைவு நாளில் தமிழக முதலமைச்சரே நேரில் வந்து மரியாதை செலுத்த வேண்டும்” என்ற நீண்டகால எதிர்பார்ப்பும் ஒரே ஆட்சிக்காலத்தில் நிறைவேறியுள்ளன.

நன்றி தெரிவிக்க நேரில் சென்ற இராஜகம்பள சமுதாய நிர்வாகிகள்

இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளையும் நிறைவேற்றிய தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து, இராஜகம்பள சமுதாய மக்களின் சார்பில் நன்றி தெரிவிக்க வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் முடிவு செய்தனர்.

அதன்படி, கடந்த சனிக்கிழமை, அக்டோபர் 18 அன்று, இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு. செந்தில்குமார் இராமராஜ், துணைத்தலைவர் திரு. ஆர்.பெருமாள், மண்டலப் பொறுப்பாளர் திரு. ஆர்.ஆறுமுகசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்தனர்.

அப்போது, முதலமைச்சருக்கு பொன்னாடை அணிவித்து, நன்றி தெரிவிக்கும் கடிதத்தையும் வழங்கினர். இராஜகம்பள சமுதாய மக்களின் சார்பில் அவர்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் நேரில் தெரிவித்தனர்.

ஒரு வரலாற்று வீரருக்கு உரிய மரியாதையை வழங்குவது என்பது அவரது சமூகத்தினருக்கு மட்டுமான மரியாதை அல்ல; அந்த வீரர் போராடிய மண்ணின் வரலாற்றுக்கும், அவரது தியாகத்திற்கும் வழங்கப்படும் அங்கீகாரமாகும்.

அந்த வகையில், மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாருக்கு சென்னையில் சிலை அமைத்து திறந்து வைத்ததும், அவரது 226-வது நினைவு நாளில் தமிழக முதலமைச்சரே நேரில் வந்து மரியாதை செலுத்தியதும் இராஜகம்பள சமுதாய மக்களின் நீண்டகால எதிர்பார்ப்புகளில் இரண்டு முக்கியமான அத்தியாயங்களாக அமைந்துள்ளன.

அந்த இரு நிகழ்வுகளுக்காகவும், தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தது, இராஜகம்பள சமுதாய மக்களின் நன்றியுணர்வின் வெளிப்பாடாகும்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் கட்டபொம்மன் சிலை மு.க.ஸ்டாலின் 226வது நினைவு நாள் பாஞ்சாலங்குறிச்சி இராஜகம்பள சமுதாயம் கிண்டி காந்தி மண்டபம்
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண