2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. தமிழக அரசியலில் சுமார் 60 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த திமுக, அதிமுக ஆகிய இரு முக்கிய கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி, நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியையும் அமைத்துள்ளது.
புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் புதிய பரபரப்புகளையும் எதிர்பாராத அரசியல் நகர்வுகளையும் சந்தித்து வருகிறது. அரசை நிலைநிறுத்துவதற்கான ஆதரவு, கூட்டணி மாற்றங்கள், கட்சிகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைகள் என அரசியல் சூழல் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதற்கிடையில், அதிமுகவிலும் உள்கட்சி பரபரப்பு ஏற்பட்டது. கட்சியின் சில முக்கிய சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மாற்று அரசியல் நிலைப்பாடுகளை எடுத்ததாக கூறப்பட்ட நிலையில், கட்சிக் கட்டுப்பாட்டை நிலைநிறுத்தும் வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டார். கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டதோடு, கொறடா உத்தரவை மீறியதாகக் கூறப்பட்ட சில சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் பின்னர், கட்சியில் ஏற்பட்ட குழப்ப நிலை படிப்படியாக சீரடைந்தது. கட்சிப் பொறுப்புகளை இழந்த பலர் மீண்டும் தலைமையிடம் விளக்கம் அளித்து பொறுப்புகளைப் பெற்றனர். இருப்பினும், சில அமைப்புப் பொறுப்புகள் தொடர்ந்து காலியாகவே இருந்து வருகின்றன.
இந்நிலையில், காலியாக உள்ள மாவட்ட மற்றும் ஒன்றிய அமைப்புப் பொறுப்புகளை நிரப்பும் பணியில் அதிமுக தலைமை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, விருதுநகர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றியச் செயலாளர் பதவியும் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தப் பதவியைப் பெறும் நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் விருதுநகர் கிழக்கு மாவட்ட இலக்கிய அணி துணைச்செயலாளர் அ. காசிராஜன். இதற்காக அண்மையில் சேலத்தில் உள்ள பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் இல்லத்தில் அவரை சந்தித்து, கட்சியின் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் தனது விருப்பத்தை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அரசியல், மேடைப்பேச்சு மற்றும் எழுத்துத் துறைகளில் ஆர்வமிக்கவரான அ. காசிராஜன், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வருகிறார். செட்டிகுறிச்சி ஊராட்சி மன்றத் தலைவராகவும் பணியாற்றியுள்ள அவர், 2017 விளாத்திக்குளம் இடைத்தேர்தல், 2021 மற்றும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார்.
நீண்டகாலமாகக் கழகப் பணியில் ஈடுபட்டு வரும் அ. காசிராஜன், தற்போது அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றியச் செயலாளர் பொறுப்பைப் பெற தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவரது அரசியல் பயணமும், இந்த முயற்சியும் வெற்றியடைய வாழ்த்துகள்.