🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஐபிஎல் வெற்றி - வல்லரசு இந்தியாவுக்கான செய்தி!

கடந்த இரண்டு மாதங்களாக வயது வித்தியாசமின்றி ஒட்டு மொத்த இந்தியர்களையும் கட்டிப்போட்ட இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி முடிவுக்கு வந்துள்ளது.

இந்தியாவின் வலிமைமிக்க மாநிலங்களின் அடையாளமாக ஒவ்வொரு அணிக்கும் அந்தந்த மாநிலங்களின் தலைநகரை குறிக்கும் வகையில் அணியின் பெயர்கள் அமைந்திருந்தன. (பஞ்சாப், குஜராத் தவிர்த்து). பத்து அணிகள் மோதிய ஐபிஎல் போட்டிகளில் கடைசி பந்துவரை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் பார்வையாளர்களுக்கு உட்சபட்ச த்ரில்லை ஏற்படுத்திய பல போட்டிகள் நடந்தன. இது சாத்தியமா? இப்படியெல்லாம் நடக்குமா? 20 ஓவர்களில் இத்தனை ரன்களை குவிக்க முடியுமா? 60 ஓவர், 50 ஓவர் கொண்ட ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கி ஆட்டத்தின் இறுதிவரை ஆடியும் சதமடிக்க முடியாத வரலாறுகளை ஒதுக்கி 30, 40 பந்துகளில் சதமடிக்கும் இளைஞர்கள், எதுவுமே சாத்தியமில்லை என்பதே இல்லை என்ற அளவுக்கு அத்தனே சாதனைகளை படைத்துள்ளது இந்த ஐபிஎல் போட்டிகள். 

இந்திய அணிக்கும், வெளிநாட்டு அணிகளுக்கும் பல இளம் வீரர்களை அடையாளம் காட்டியுள்ள இந்த ஐபிஎல் போட்டிகள் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருவாயையும், செல்வாக்கையும் சர்வதேச விளையாட்டரங்கில் உயர்த்தியுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

11 முட்டாள்களால் விளையாடப்படும் விளையாட்டை 11 ஆயிரம் முட்டாள்கள் அமர்ந்து பார்ப்பதாக கடுமையாக விமர்சிக்கப்பட்ட கிரிக்கெட் விளையாட்டு, பல்லாயிரக்கணக்கான மனித ஆற்றலை விரயம் செய்வதாக விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. ஆனால் இன்று 20 ஓவர் கொண்ட டி20 போட்டிகள் சினிமா பாணியில் மூன்று மணி நேரத்தில் முழுமையான திருப்தியை பார்வையாளருக்கு கொடுக்கிறது. பெரும்பாலும் மாலையில் தொடங்கி முன்னிரவுக்குள் போட்டிகள் முடிந்து விடுவதால் நேர விரயம் என்பது பெருமளவு தவிர்க்கப்பட்டுள்ளது. தற்போது போட்டி என்று பார்த்தால் இந்தியக் குடும்பங்களை மாலை வேளைகளை பெருமளவு ஆக்கிரமித்துள்ள டிவி  சீரியல்களுக்கும், ஐபிஎல் போட்டிகளுக்கும் தான். இதிலும் ஐபிஎல் போட்டிகளே வென்றுள்ளன. கணவர்களிடம் ஆதிக்கம் செலுத்தி நாடகங்கள் ஒளிபரப்பாகும் வேளைகளில் தொலைக்காட்சிப் பெட்டியின் முழு கட்டுப்பாட்டையும் எடுத்துக்கொண்ட பெண்கள் தங்கள் குழந்தைகளிடம் சரணடைந்து ரிமோட் கண்ட்ரோலை இழந்துவிடுவதோடு, அவர்களையும் ஐபிஎல் ரசிகர்களாக்கிவிட்டன குழந்தைகள். இதனால் ஆண்களுக்கு ஓரளவு ஆறுதல் மட்டுமல்ல ஒட்டுமொத்த குடும்பமும் அமர்ந்து ஒரு டிவி நிகழ்ச்சியை பார்க்கிறது என்றால் அது ஐபிஎல் மட்டும் தான் என்ற நிலை உருவாகியுள்ளது. 

ஒரு விளையாட்டுப் போட்டிக்கு இந்த அளவு பில்டப் தேவையா என்று யோசிக்க வேண்டாம். ஏதோ தன் பாட்டில் இயல்பாக நடக்கும் நிகழ்வு என்று நினைக்கும் ஒவ்வொருவரும் அறியாமை எனும் பேரிருளில், உலக நடப்புகள் குறிப்பாக இந்திய அரசியல் போக்கு குறித்து அறியாத ஞான சூனியம் என்று தங்களைத் தாங்களே அழைத்துக்கொள்ளலாம். எந்த ஒரு நிகழ்விலும் அரசில் ஒன்று இல்லாமல் இல்லை.

ஆம், இந்திய கிரிக்கெட்டின் வரலாறு அறிந்தவர்களுக்குத் தெரியும், இந்திய கிரிக்கெட் என்பது மேட்டுக்குடிகள் விளையாட்டு. குறிப்பாக பிராமணர்களின் கட்டுப்பாடும், ஆதிக்கமும் நிறைந்த விளையாட்டு.  இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை தங்கள் ஊடகங்கள் மூலம் ஊதிப்பெரிதாக்கி ஒவ்வொரு ரசிகனையும் கிரிக்கெட் வீரர்களின் ரசிகர்களாக்கியுள்ளது. பிற்படுத்தப்பட்ட சாதி வெகுஜனங்களிடம் கருத்தியலை உருவாக்கும் பத்திரிக்கை - காட்சி ஊடகங்கள், சினிமா, கலை, ஆன்மீகம் போன்றவற்றை கைப்பற்றியுள்ள உயர்சாதி நோகாமல் நொங்கு சாப்பிடும் கிரிக்கெட் விளையாட்டிலும் ஆதிக்கம் செலுத்திவருகிறது. 

ஆதிக்கம் மட்டுமே செலுத்துபவர்களால் எந்தொரு துறையிலும் விஞ்ஞான கண்டு பிடிப்புகளையோ, அறிவியல் யுக்திகளையோ பயன்படுத்து அத்துறையில் சாதனைகளை செய்தவர்களில்லை. அதுபோலத்தான் கிரிக்கெட் விளையாட்டிலும் கோப்பைகளை வெல்வது எட்டாக்கனியாகவே இருந்துவந்தது. ஒரு உலகக் கோப்பைக்காக தலைமுறை கடந்த ஏக்கத்தை பிற்படுத்தப்படுத்தப்பட்ட சாதிகளில் பிறந்த கபில்தேவும், மகேந்திர சிங் தோனியும் கேப்டன்களாக இருக்கும்போதே நிறைவேறியது. 

தமிழகம் முன்னேறிய மாநிலம் என்றால் அதற்கான பின்னனியையும் கிரிக்கெட் விளையாட்டோடு பொருத்தியே பார்க்க வேண்டும். காமராஜர் என்ற பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த முதல்வரால் தான் தமிழகத்தில் பெரும் மாற்றத்திற்கான விதை ஊன்றப்பட்டது. தென்னாட்டில் பிறந்த காமராஜர் தன் சாதியைச்சேர்ந்த நாடார் சமுதாய வாக்குகளே இல்லாத வடமாவட்டத்திலுள்ள  குடியாத்தம் இடைத்தேர்தலில் போட்டியிட தயங்கியபோது அவரை சமாதானம் செய்து போட்டியிட வைத்த தந்தைப்பெரியார்,  அதை ஏற்றுக்கொண்டு திமுக சார்பில் வேட்பாளரை நிறுத்தாமல் காமராஜரை ஆதரித்துள்ளனர் அறிஞர் அண்ணா எடுத்த முடிவு தமிழகத்தை தலைநிமிரச் செய்துள்ளது. தமிழகத்தின் இன்றைய வெற்றிக்கு அன்றைய தலைவர்களால் விதைபோடப்பட்டது. தொடர்ந்து இடஒதுக்கீட்டை உயர்த்தி, உயர்சாதி பிரிவில் இருந்த கொங்கு வெள்ளாளர் போன்ற சாதிகளை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்து கல்வியளித்து, அரசு நிர்வாகங்களில், நீதித்துறையில் பிற்படுத்தப்பட்ட சாதியினரை அமர்த்தியதின் விளைவு இன்று தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. காங்கிரஸ் கட்சியின் காமராஜராக இருந்தாலும், திராவிட பாரம்பரியத்தில் வந்த  அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, மு.க.ஸ்டாலின் என யார் முதல்வராக வந்தாலும் இடஒதுக்கீட்டில், சமூகநீதி தத்துவத்தில் தங்களது பங்களிப்பை வழங்கி தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில், நிர்வாக கட்டமைப்பில்,  ஊடகங்களில், சினிமாத்துறையில் பிற்படுத்தப்பட்ட மக்களின் பங்கேற்புக்கு தங்களால் இயன்றதைச் செய்து, உயர்சாதி ஆக்கிரமிப்பை அகற்றி, பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கான பிரதிநிதித்துவத்தை, பங்கேற்பை உறுதி செய்ததின் விளைவே தமிழகம் சிறந்த மாநிலமாக தலைநிமிரக் காரணம். 

தமிழகத்தில் நடந்ததே  கிரிக்கெட் அரங்கிலும் நடந்தது. இன்றைய ஐபிஎல் போட்டியிலும் நடக்கிறது. ஜபிஎல் போட்டிகள் எண்ணற்ற பிற்படுத்தப்பட்ட சமுதாய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கியிருந்தாலும், தேர்வு செய்யப்பட்ட பலர் முன்னுரிமை அடிப்படையில் பெஞ்ச்களில் பார்வையாளர்களாக அமரவைக்கப்பட்டுள்ளனர். நேற்றைய இறுதிப்போட்டியில் சுப்மன் கில் கொடுத்த எளிமையான கேட்சை சென்னை வீரர் தவறவிட்ட தருணத்திலிருந்து ஒட்டுமொத்த உலகமும் கோப்பை குஜராத் அணிக்கே என்று உறுதிசெய்துவிட்ட நிலையில், ஒருவன் மட்டுமே அமைதியாக ஆட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தான். அவனின் அமைதி, தன்னம்பிக்கைக்கு முன்னால் அவாளின் வருணபகவான் கூட ஒதுங்கி வழிவிட்டான்.  அவனை எல்லோரும் கொண்டாடினார்கள், ஆனால் நிறை குடமாய் இறுதிவரை ததும்பாமல் நின்றான். அணியின் கேப்டனாக கோப்பையை அவன் பெறுவதற்கு எந்தத்தடையுமில்லை. கோடானுகோடி ரசிகர்களும், உலகமும் அந்தத்தருணத்திற்காகத் தான் ஏங்கியது. ஆனால் அவன் மட்டுமே எப்போதும்போல் மாற்றி யோசித்தான். அங்கும் அவன் மற்றவர்களிலிருந்து வித்தியாசப்பட்டான், அதனால் மேலும் சிகரங்களைத் தாண்டி உயர்ந்தான். தோனியின் இந்தப் பொறுமையும், வலிமையும், வேதனையும்,  நிதானமும் இந்தியச் சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் மரபணுவில் உள்ளது. துணிவும், வல்லமையும் சற்று கூடுதலாகவே இருக்கும். 

தமிழகத்தில் எது நடந்ததோ, நடக்கிறதோ அதுவே தோனியிடமும், தோனி தலைமையிலான அணியிடமும் நடக்கிறது, வெற்றியும் சாத்தியப்படுகிறது. 

இந்திய மக்களின் கோப்பைக்கனவு பிற்படுத்தப்பட்ட சூத்திர கேப்டன்களால் நிறைவேறியது போல்,  இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற ஏக்கமும், கனவும் ஒருநாள் நிச்சயம் நிறைவேறும். அதற்கான விதை நம்மால் ஊன்றப்பட வேண்டும். இந்திய நீதித்துறை, அரசுத்துறை செயலர் பதவி வெளியுறவுத்துறை செயலர் பதவிகளில் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் அமர்த்தப்பட வேண்டும், இராணுவ உயர் பதவிகளில் அமர்த்தப்பட வேண்டும். தமிழகத்தைப்போல் ஊடகங்கள், சினிமாத்துறைகளில் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் கோலோச்ச வேண்டும். இந்தக்கட்டமைப்புகளில் மாற்றம் ஏற்படாமல் பிரதமராகவோ, குடியரசுத் தலைவராகவோ தாழ்த்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட தலைவர்கள் தலைமை தாங்கி எந்த பிரயோசனமும் ஏற்படப்போவதில்லை. 

இந்திய அளவில் ஓபிசிக்களின் கட்டுப்பாட்டில் நீதி, நிர்வாக கட்டமைப்புகள் வரும் நாளே இந்தியா வல்லரசு ஆகும் நாள் என்பதை ஒவ்வொரு இந்தியனும் உணர்ந்தால் வல்லரசு கணவு சாத்தியப்படும் என்பதற்கு தமிழகமும்,  தோனியுமே சாட்சி.

கட்டுரையாளர்: திரு.வை.மலைராஜன், மாவட்ட அமைப்பாளர், கலை இலக்கிய, பகுத்தறிவு அணி, விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved