🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தலைநகர் டெல்லியை உலுக்கும் உழவர்கள் போராட்டம் - விவசாயிகளின் கோரிக்கை என்ன?

கடந்த சில மாதங்களாக ஐரோப்பிய ஒன்றியத்தின் குறுக்கும் நெடுக்குமாக ஸ்பெயினிலிருந்து போலந்து வரை, ஜெர்மனி முதல் கிரீஸ் வரை  விவசாயிகள் தங்கள் நாட்டு அரசுகளுக்கு எதிராக கடும் போராட்டத்தை நடத்திவருகின்றனர்.  பெரும்பாலான நாடுகளில், தங்களுக்கு போதுமான ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், விவசாய டீசல் மீதான மானியங்கள் அல்லது வரிச் சலுகைகளை நிறுத்தும் திட்டங்களுக்கு எதிராக, பாரிஸ் தெருக்களில் பல நாள் டிராக்டர்களை நிறுத்தி  'முற்றுகைப் போராட்டம்' விவசாயிகள் நடத்தினர். பிரெஞ்சு நாட்டில் கட்டிடங்கள் மீது உரம் தெளித்தும், ஐரோப்பிய பாராளுமன்றத்தின் மீது முட்டைகளை வீசியும், பிரஸ்ஸல்ஸில் உள்ள 19 ஆம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் தொழிலதிபரின் சிலையை கவிழ்த்தும் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்தியாவில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது ஆளும்கட்சியான பாஜக விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரியும், விவசாயச் சட்டங்களை திரும்பப்பெறக்கோரியும் இரண்டாண்டுகளுக்கு முன் டெல்லியை முற்றுகையிட்ட லட்சக்கணக்கான விவசாயிகளில் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் போராட்ட களத்திலேயே உயிரிழந்தபோதும் ஓராண்டுகாலத்திற்கு மேலாக தொடர் போராட்டம் நடத்தி உலகையே திரும்பிப்பார்க்க வைத்தனர். அப்போது வரவிருந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு பேச்சு வார்த்தை நடத்திய மத்திய அரசின் வாக்குறுதியை ஏற்று விவசாயிகள் போராட்டத்தை விலக்கிக்கொண்டனர். 

இந்நிலையில், ஒன்னரையாண்டுகால இடைவெளியில் மீண்டும் நேற்று முன்தினம் முதல் போராட்ட களத்தில் இறங்கி டெல்லி நோக்கி செல்லும் விவசாயிகள் ஹரியானா - பஞ்சாப் மாநில எல்லையில் ஷாம்பு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர். டெல்லியிலிருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் உள்ள விவசாயிகள் தொடர்ந்து முன்னேறக் கூடாது என்பதற்காக இரண்டாவது நாளாக இன்று கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டுள்ளன. தடுப்புகளை மீறி ஹரியானா எல்லையை கடக்க விவசாயிகள் முயன்று வருவதாக சொல்லப்படுகிறது.

காலை 11 மணி முதல் விட்டுவிட்டு கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டு வருவதாகவும், கண்ணீர் புகைக் குண்டுகளிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஈரமான சாக்குப்பைகளை கைகளில் விவசாயிகள் வைத்திருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த பேரணியில் பங்கேற்பவர்கள் பெரும்பாலானவர்கள் பஞ்சாப் மாநில விவசாயிகள். அவர்கள், பஞ்சாப் - ஹரியானா மாநில எல்லைப் பகுதியை செவ்வாய்கிழமை மதியம் வந்தடைந்தனர். அப்போதே அவர்கள் கலைந்து செல்வதற்காக ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. பதிலுக்கு காவல்துறையினர் மீது விவசாயிகள் கற்களை வீசினர்.

விவசாயிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஆங்காங்கே நாள் முழுவதும் நீடித்து வந்த மோதல் இரவானதும் தற்காலிகமாக ஓய்ந்தது. இதற்கிடையே, விவசாயிகள் பஞ்சாப்-ஹரியானா எல்லையில் முகாமிட்டு, நாளைய தினத்திற்காக தயாராவார்கள் என்று விவசாயத் தலைவர் சர்வான் சிங் பாந்தர் கூறியிருந்தார். இரவில் போராட்டத்தை நிறுத்திக் கொண்டு முகாமிட்ட விவசாயிகள் இன்று மீண்டும் டெல்லி நோக்கி முன்னேறி வருகின்றனர்.

ட்ரோன் மூலம் வீசப்பட்ட கண்ணீர் புகைக் குண்டுகள்:

கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டதில் விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவரிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது, நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்த முறை விவசாயிகள் டெல்லிக்குள் நுழையக் கூடாது என்பதற்காக அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

டெல்லி நகர் முழுவதும் முள் கம்பி வேலிகள், சிமெண்ட் கற்கள் கொண்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி எல்லையில், ஆயுதமேந்திய போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் காவலில் உள்ளனர்.

கடந்த முறை தொடர் போராட்டத்தின் காரணமாக, நரேந்திர மோதி அரசு விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய வைப்பதில் வெற்றி பெற்ற விவசாயிகள், தங்களது கோரிக்கைகளுக்காக மீண்டும் களத்தில் இறங்கியிருக்கின்றனர்.

அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி:

அரசுடனான பேச்சுவார்த்தைகளில் இன்னும் முடிவு எட்டப்படாததால் விவசாயிகளின் இரண்டு பெரிய அமைப்புகளான சம்யுக்த் கிசான் மோர்ச்சா (அரசியல் சாராதது) மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய இரண்டும், தங்களது கோரிக்கைகளுக்காக செவ்வாய்க்கிழமை 'டெல்லி நோக்கி அணிவகுப்போம்' என்ற பேரணியை தொடங்கினர். இதில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக வந்து கொண்டிருக்கின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, டெல்லியின் எல்லையில் தங்கிப் போராடிய விவசாயிகளின் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதனால் நரேந்திர மோதி அரசாங்கம் விவசாயிகளின் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்குவிப்பு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம்-2020, விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) விலை ஒப்பந்த உத்தரவாதம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020, மற்றும் அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவற்றை ரத்து செய்தது.

சம்யுக்த் கிசான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பின் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் பிபிசியிடம் பேசுகையில், "எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற 'தில்லி சலோ' கோஷத்தை நாங்கள் கொடுக்கவில்லை. விவசாயிகள் போராட்டத்தைத் திரும்பப் பெற அரசு அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்கிறோம்,” என்றார்.

மேலும் பேசிய தலேவால், "அப்போது குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிப்பதாக அரசு உறுதியளித்தது. இதனுடன், போராட்டத்தின் போது விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்றும் கூறியது. லக்கிம்பூர்-கேரி சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வேலையும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும் வழங்கப்படும், என்று கூறியிருந்தது,”என்றார்.

2021-ஆம் ஆண்டு, உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்புர்-கேரி என்ற இடத்தில் அரசாங்கத்தின் விவசாயச் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய நான்கு சீக்கிய விவசாயிகள், உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டெனியின் வாகனத்தால் மோதப்பட்டு கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.

விவசாயிகள் சுற்றுச்சூழல் மாசுபாடு சட்டங்களிலிருந்து விடுவிக்கப்படுவர் என்று அரசாங்கம் கூறியதாக டலேவால் கூறினார். சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையின்படி விவசாயிகளுக்கு பயிர் ஆதார விலை வழங்கப்படும் என்பது மிகப்பெரிய வாக்குறுதி. ஆனால் இந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையில் விவசாயிகளுக்கு பயிர்ச் செலவை விட ஒன்றரை மடங்கு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருகிறது.

இரண்டு ஆண்டுக்குப் பிறகு விவசாயிகள் மீண்டும் போராடுவது ஏன்?

முந்தைய போராட்டம் திடீரென முடிவுக்கு வரவில்லை என்று விவசாயிகள் இயக்கத்தை தொடர்ந்து கண்காணித்து வருபவர்கள் கூறுகிறார்கள். அரசாங்கம் அப்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற விவசாயிகள் இப்போது அழுத்தம் கொடுக்க முடிவெடுத்திருக்கின்றனர்.

விவசாயிகள் உரிமை ஆர்வலரும் பத்திரிகையாளருமான மந்தீப் பூனியா அதுபற்றிக் கூறுகையில், “நான்கு மாதங்களுக்குப் பிறகு தேர்தல் நடத்தப்படும் என்று விவசாயிகள் கருதுகின்றனர். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அழுத்தத்தை உருவாக்க இதுவே சரியான தருணம் என்று கருதுகின்றனர்,” என்றார்.

பிபிசியிடம் பேசிய அவர், "தற்போதைய குறைந்தபட்ச ஆதரவு விலை ஃபார்முலா மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர் விலை, அவர்களின் செலவுகளைக் கூட கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அவர்கள் சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையின்படி, அதாவது ஒன்றரை மடங்கு செலவில் குறைந்தபட்ச ஆதரவு விலை கோருகின்றனர். தற்போது உள்ளீட்டுச் செலவின் அடிப்படையில் மட்டுமே அரசு இதை முடிவு செய்கிறது. இதில் ஊதியம் கூட சேர்த்து கொள்ளப்படுவதில்லை, என்றார்.

தலேவால் கூறுகையில், "அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நாங்கள் நினைவூட்டுகிறோம். தேர்தல் வந்துவிட்டது, புதிய அரசு வந்தால் நாங்கள் எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை என்று சொல்ல வாய்ப்புண்டு. எனவே இதுவே சரியான தருணம் என்று அரசு கொடுத்த வாக்குறுதிகளை நினைவூட்ட நினைக்கிறோம்,” என்றார்.

எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா அறிவித்த அரசு, அவரது பெயரில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை அமல்படுத்தாதது முரணானது என்றார் தேலேவால். “விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்க வேண்டாம் என்று அவர் பரிந்துரைத்திருந்தார், ஆனால் அரசாங்கம் அதைத்தான் செய்ய முயற்சிக்கிறது,” என்றார்.

நன்றி:பிபிசி


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved