🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உடல் பருமன் தொல்லையில்லையில்லாத ஜப்பானியர்கள் - எப்படி சாத்தியமானது?

ஜப்பானில் பிள்ளை வளர்ப்பை மூன்று பிரிவுகளாக பிரிக்கிறார்கள்.

ஆறு வயது வரை: ராஜா- ராணி

ஆறு முதல் பதினைந்து வயது வரை: வேலைக்காரன்

பதினைந்துக்கு மேல்: குடிமகன்

பிள்ளை பிறந்து முதல் ஆறுவருடம் அதற்கு கொடுக்காத செல்லம் இல்லை. உலகிலேயே கூடுதல் விகிதத்தில் பார்ட் டைம் வேலை பார்ப்பவர்கள் ஜப்பானிய பெண்கள் தானாம். இல்லத்தரசி எண்ணிக்கையும் வளர்ந்த நாடுகளில் ஜப்பானில் தான் கூடுதல்.

ஜப்பானின் பிரபலமாக 20 ஆண்டுகளாக ஓடும் தொலைக்காட்சி தொடர் 2 வயது, 3 வயது பிள்ளைகளை தாய்மார்கள் கடைக்கு பொருட்களை வாங்க அனுப்புவதுதான்.  2 வயது பிள்ளை மளிகை கடை லிஸ்ட்டை எடுத்துக்கொண்டு, காசையும் எடுத்துக்கொண்டு, சாலையை கடந்து, நாலைந்து தெரு தள்ளி இருக்கும் கடைக்கு தனியாக சென்று பொருட்களை வாங்கிக்கொன்டு வருவதை யூகிக்க முடிகிறதா? அதுதான் ஜப்பான்.

அதற்கு ஏற்ப சாலைகள் இருக்கும், கார் ஓட்டும் விதிமுறைகள் இருக்கும்.

இந்த ராஜபோக வாழ்க்கை ஆறு வயது ஆனதும் முடிவுக்கு வந்துவிடும். ஆறாவது பிறந்தநாள் முதல் வீட்டு வேலைகள் எல்லாம் பிள்ளைகள் தலையில் விழும். பள்ளிகளில் தோட்டங்கள் உண்டு. மாணவர்கள் விவசாயம் செய்து, காய்கறிகள் விளைவித்து, அதை மதிய உணவுக்கு பயன்படுத்துவார்கள்.

யாருடனும் அட்டாச்மெண்ட் வரகூடாது, பெஸ்ட் பிரண்ட் என ஒருவரும் இருக்ககூடாது என்பதால் ஒவ்வொரு ஆண்டும் வகுப்புகள் மாறும், ஆசிரியர்கள் மாற்றப்படுவார்கள். "தனி மனிதர்கள் முக்கியமில்லை, உன் குழு அடையாளம் தான் முக்கியம்" என கற்பிக்கபடும். ஆசிரியர்கள், நண்பர்கள் என தனி நபர்கள் மேல் அன்பு வைப்பதை விட்டுவிட்டு "பள்ளி, ஜப்பான்" என்பது போன்ற அடையாளங்கள் மேல் அன்பு செலுத்துவதுதான் முன்நிறுத்தபடும்.

சமூகத்திற்காக உன் நலனை விட்டுகொடுக்கவேண்டும் என போதிக்கப்படும். உதாரணமாக மற்ற ஊர்களில் ஏழெட்டு வயது குழந்தைகள் பசித்தால் அழும். ஜப்பானிய குழந்தைகள் "அருகே யாராவது இருக்கிறார்களா? நாம் அழுதால் அவர்களுக்கு இடைஞ்சலாக இருக்குமா?" என பார்த்துவிட்டு தான் அழமுடியும்.

பெண்குழந்தைகளுக்கு ஒரு குடும்பத்தை நடத்த தேவையான கலைகள் அனைத்தும் கற்பிக்கபடும், பாத்திரம் கழுவுதல், சமைத்தல், வீட்டு கூட்டி பெருக்குதல், தையல் என. பையன்களுக்கு பாடச்சுமை கூடுதலாக இருக்கும். குடும்பத்துக்காக அதிகமாக சம்பாதிக்கவேண்டும் என அவனுக்கு போதிக்கபடும். ஜப்பானிய ஆண்கள் தினம் 15- 20 மணிநேரம் எல்லாம் அலுவலகத்தில் இருப்பார்கள். அலுவலகம், வீட்டை தவிர எதுவும் தெரியாத செக்குமாடுகள் ஜப்பானிய ஆண்கள். உழைத்து ஓடாக தேய்வார்கள். பெண்களுக்கு அத்தகைய பணிச்சுமை குறைவு.

15வது பிறந்தநாளில் வேலைக்காரர் பருவம் முடிவடையும். அதன்பின் ஜப்பானிய வீடுகலில் பிள்ளைகள் தோழர்களாக நடத்தப்படுவார்கள். அனைத்து முடிவுகளையும் எடுக்க சுதந்திரம் கிடைக்கும். பெற்றோர் தலையிட மாட்டார்கள்.

ஜப்பான் சென்ற அமெரிக்கர் ஒருவர் குழந்தைகளிடம் உங்களுக்கு பிடித்த உணவு என்ன என கேட்டார். கீரை, காலிபிளவர், பிராக்களி என சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்துவிடார். யாருமே நட்டெல்லா, டோனட் என சொல்லவில்லை. மிக ஆரோக்கியமான உணவு பழக்கங்களை தான் பிள்ளைகளுக்கு பழக்குவார்கள்.

உலகிலேயே உடல்பருமன் அடையாமல், முன்னேறிய நாடு எனும் அந்தஸ்தை அடைந்த ஒரே நாடு ஜப்பான் தான் என்பதற்கு இந்த டிசிப்ளின் தான் காரணம்.

ஜப்பான் மேலை நாடும் இல்லை, கீழை நாடும் இல்லை. தன் தனித்துவத்தை இழக்காமல், முன்னேற்றத்தையும் கைவிடாமல், தன் மாடலில் ஜெயித்த நாடு ஜப்பான்.

நன்றி: நியாண்டர் செல்வன்

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved