விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்தநாளையொட்டி பல்வேறுதுறை சார்ந்த தமிழ்ச்சான்றோர் பெருமக்களுக்கு விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சமூக நீதி, இலக்கியம், கலை, அறிவியல், மனித உரிமைகள், பத்திரிகைத்துறை போன்ற துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும் பாராட்டுவிழாவாக அக்கட்சியால் நடத்தப்பட்டு வருகிறது.
இதன்தொடர்ச்சியாக (விசிக) 2026-ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் ஜூலை 05, 2026 அன்று நடைபெற உள்ளது. இதுதொடர்பாக இந்த ஆண்டிற்கான விருதுகள் மற்றும் அதனைப் பெறுபவர்களின் பட்டியலை விசிக தலைவர் தொல். திருமாவளவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அப்பட்டியலில் இடம்பெற்றுள்ள சான்றோர்கள் பின்வருமாறு,
அம்பேத்கர் சுடர் விருது: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் கே. சொக்கலிங்கம்.
பெரியார் ஒளி விருது: வழக்கறிஞர் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்றி டிஃபேன்.
மார்க்ஸ் மாமணி விருது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன்.
காமராசர் கதிர் விருது: பால. பிரஜாபதி அடிகளார் (ஐயா வைகுண்டர் வழியிலான சமயச் சீர்திருத்தப் பணியாளர்).
அயோத்திதாசர் ஆதவன் விருது: சமூக செயற்பாட்டாளர் ரூத் மனோரமா.
காயிதேமில்லத் பிறை விருது: முகம்மது முனீர் (மனிதநேய ஜனநாயக கட்சி).
செம்மொழி ஞாயிறு விருது: தமிழறிஞர் பொ. வேல்சாமி.
செம்மொழி ஞாயிறு விருதுபெற்றுள்ள தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்கள் விருதுநகர் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். தொழில் நிமிர்த்தமாக பெற்றோர்கள் திரு.பொம்மையா - திரு.பாப்பம்மாள் ஆகியோர் தஞ்சாவூருக்கு புலம்பெயர்ந்ததைத் தொடர்ந்து பொ.வேல்சாமி அவர்கள் தஞ்சையில் பள்ளிப்படிப்பையும், புகழ்பெற்ற தஞ்சை கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டமும் பெற்றார்.
இலக்கியம் மற்றும் தமிழக வரலாற்று ஆய்வில் மிகுந்த ஈடுபாடுகொண்ட பொ.வேல்சாமி அவர்கள், பட்டப்படிப்பு முடிந்தவுடன் தந்தையுடன் இணைந்து முட்டை வணிகத்தில் ஈடுபட்டுக்கொண்டே தினமணி, காலச்சுவடு, தீராநதி, உங்கள் நூலகம், கவிதாசரண், புத்தகம் பேசுது, மணற்கேணி, மானுடம் உள்ளிட்ட பல இதழ்களில் கட்டுரைகளும் எழுதிவந்தார். 1990களில் வெளிவந்த முகிய சிற்றிதழ்களில் ஒன்றான 'நிறப்பிரிகை' இதழின் ஆசிரியர் குழுவில் பிரபல எழுத்தாளர் அ. மார்க்ஸ், நாடாளுமன்ற உறுப்பினரும், விசிக பொதுச்செயலாளருமான து.ரவிக்குமார் ஆகியோரோடு இணைந்து செயல்பட்டு வந்தார். தமிழ்ச் சூழலில் மிகப் பெரும் அதிர்வை ஏற்படுத்திய இப்பத்திரிக்கை தலித் சிந்தனை, சமூக நீதி, சாதி விமர்சனம், பெண்ணியம், மாற்று அரசியல் மற்றும் நவீன இலக்கியம் போன்ற கருத்துகளை முன்னிறுத்தி செயல்பட்டு வந்தது. மேலும் இப்பத்திரிக்கை அன்றைய காலகட்டத்தில் பல இளம் எழுத்தாளர்கள் மற்றும் சமூகச் சிந்தனையாளர்களின் படைப்புகளுக்கு இது ஒரு முக்கிய மேடையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு, வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வது, மாற்று வரலாற்றை உருவாக்குவது பொ.வேல்சாமி அவர்களின் எழுத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. இவரது படைப்புகளில் மிகச்சிறந்தவைகளாக
1. பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
2. கோவில் நிலம் சாதி
3. பொய்யும் வழுவும்
4. வரலாறு என்பது கற்பிதம்
5. பரதகண்ட புராதனம் (டாக்டர் கால்டுவெல் தமிழிலேயே எழுதிய வேத இதிகாசங்கள் பற்றிய விமர்சன நூலின் பதிப்பாசிரியர்)
6. தொல்காப்பியம் இளம்பூரணர் உரை விளக்கம் கையெழுத்துப்படியின் பதிப்பாசிரியர் - 2023
7. மதுரா விஜயம் (பள்ளியக்ரகாரம் நீ.கந்தசாமிப் பிள்ளையின் திறனாய்வுக் கட்டுரைகள்) - பதிப்பாசிரியர் 2023
8. பழந்தமிழ் நூல்கள் நவீனமான வரலாறு (பதிப்பாசிரியர்: கா.விக்னேஷ்) 2024
9. சோழர் ஆட்சியிலும் அடிமைகளா? (பதிப்பாசிரியர்: கா.விக்னேஷ்) 2024
10. இந்தியத் தத்துவமும் தமிழ்த் தத்துவ மரபும் (பதிப்பாசிரியர்: கா.விக்னேஷ்) 2024
11. வரலாறு என்பது கற்பிதம் (மீள் பதிப்பாசிரியர்: கா.விக்னேஷ்) 2025
ஆகிய நூல்கள் தமிழறிஞர்களால் போற்றப்படுகின்றன. கடந்த திமுக ஆட்சியின்போது தமிழக அரசு சார்பில் தமிழ்த்தென்றல் திரு.வி.க விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட பொ.வேல்சாமி அவர்களுக்கு விகடன் குழுமம் சார்பில் நம்பிக்கை விருது (2021), விளக்கு இலக்கிய அமைப்பின் (அமெரிக்கா) சார்பில் புதுமைப்பித்தன் நினைவு விருது - 2022, விஜய் டி.வி. நீயா? நானா? சார்பில் சிறந்த ஆளுமை விருது - 2023 வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசியல் வரலாற்றில் தலித் உரிமைகளுக்கான இயக்கமாகத் தொடங்கப்பட்டு இன்று உலகத் தமிழர்களால் உற்றுநோக்கப்படும் அரசியல் இயக்கமாக பரிணாமம் பெற்றுள்ளது விசிக. தொல்.திருமாவளவன் அவர்களின் தலைமையில் இயங்கும் இக்கட்சி தலைசிறந்த முற்போக்குவாதிகளையும், சிந்தனையாளர்களையும் கொண்டு தமிழக அரசியலில் தனித்துவமாக இயங்கிவருகிறது. திரைப்பட பிம்பங்களில் ஆட்பட்டிருந்த பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட சமூகங்களிடம் அம்பேத்கர், பெரியார், காரல் மார்க்ஸ் ஆகியோரின் சிந்தனைகளை கொண்டு சேர்த்து அவர்களை அரசியல் மயப்படுத்தியதில் பெரும்பங்கு விடுதலைச் சிறுத்தைகளுக்கே உண்டு. தமிழ் நிலப்பரப்பில் சாதி, மொழி, இன அடையாளங்கள் தாண்டி தமிழுக்காக அருந்தொண்டாற்றும் அனைவரும் தமிழர்களே என்ற நேர்மறை சிந்தனையை விதைத்து, பிளவுவாத சக்திகளிடமிருந்து தமிழர்களைப் பாதுகாக்கும் கேடயமாக விளங்கும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் செம்மொழி ஞாயிறு விருதுக்காக தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது 'போலி தமிழ்தேசியவாதி'களுக்கு சாட்டையடியாகும்.
செம்மொழி ஞாயிறு விருதுபெறும் பொ.வேல்சாமி அவர்களுக்கும், தமிழ் இனம், மொழி ஆகியவற்றின் தனித்துவத்தை தரணியில் நிலைநாட்ட செப்பேடுகள், கல்வெட்டுகள், இலக்கியங்களில் புதைந்துள்ள ஆயிரக்கணக்கான ஆதாரங்களைத் திரட்டி தமிழர்களின் மேன்மையை உலகறியச் செய்துவரும் முதுபெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்கள் செம்மொழி ஞாயிறு விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பொதுச்செயலாளர் இரவிக்குமார் மற்றும் விருது தேர்வுக்குழுவினர் அனைவருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், இவ்விருதுப்பட்டியலில் இடம்பெற்றுள்ள சான்றோர் பெருமக்கள் அனைவருக்கும் தமிழகத்தில் வாழும் 40 லட்சம் இராஜகம்பள சமுதாய மக்களின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.