🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்!

காஷ்மீர்! தெற்காசியாவின் இரண்டு ஜாம்பவான்களும் முட்டி மோதிக்கொள்ள அருமையான களம்! இன்று காஷ்மீர் மூன்று வல்லரசுகளின் பிடியில் சிக்கித்தவித்துக்கொண்டு உள்ளது. 'பூலோகச் சொர்க்கம்' என்று வர்ணிக்கப்பட்ட ஒரு நிலம், கடந்த பல நூற்றாண்டுகளாகத் தொடர்ச்சியாகக் கண்ணீராலும் ரத்தத்தாலும் மட்டுமே குளிப்பாட்டப்பட்டு வருகிறது என்றால் அது காஷ்மீர்தான்.

காஷ்மீர் பிரச்சனை என்பது வெறுமனே இந்தியாவும் பாகிஸ்தானும் அடித்துக்கொள்ளும் ஒரு எல்லைப் பிரச்சனையோ அல்லது 1947-ல் திடீரென முளைத்த ஒரு புவிசார் அரசியலோ கிடையாது. இது ஒரு மக்களின் உரிமை, ஒரு தேசத்தின் அடையாளம், மற்றும் ஏகாதிபத்தியவாதிகள் செய்த மாபெரும் வரலாற்றுத் துரோகம். காஷ்மீரின் இந்தத் துயரம் தோய்ந்த வரலாற்றை, எந்தவித சார்பு நிலையுமின்றி, ஆவணங்களின் அடிப்படையில் அலசுவோம்.

பண்டைய காலத்தில் காஷ்மீர் வைஷ்ணவ மற்றும் பௌத்த மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. ஆரம்ப காலத்திலேயே இந்த பகுதியில் இஸ்லாம் பரவியிருந்தாலும் 14-ம் நூற்றாண்டில் (1339) ஷா மிர் வம்சத்தின் மூலம் இஸ்லாம் காஷ்மீரில் ஒரு மாபெரும் அரசியல் மற்றும் சமூக சக்தியாக வேரூன்றியது. அதன் பிறகு வந்த முகலாயப் பேரரசர்கள் காஷ்மீரைத் தங்களின் 'கோடைகாலச் சொர்க்கமாக' மாற்றினார்கள். மாமன்னர் ஜஹாங்கீர், "பூலோகத்தில் ஒரு சொர்க்கம் உண்டென்றால் அது இதுதான், இதுதான், இதுதான்!" என்று காஷ்மீரைப் புகழ்ந்து பாடினார்.

ஆனால் முகலாயர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, ஆப்கானியர்களான துரானி வம்சமும், பின்னர் சீக்கியப் பேரரசும் (1819) காஷ்மீரைக் கைப்பற்றின. அங்கிருந்துதான் காஷ்மீர் மக்களின் இருண்ட காலம் தொடங்கியது.

வரலாற்றில் ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக விற்ற கதையை நாம் படித்திருப்போம். ஆனால், ஒட்டுமொத்த நிலப்பரப்பையும், அங்கு வாழும் லட்சக்கணக்கான மக்களையும் ஆடு மாடுகளைப் போல ஒரு ஏகாதிபத்திய அரசு விலைபேசி விற்ற மாபெரும் துரோகம் காஷ்மீரில்தான் நடந்தது! பஞ்சாபில் சீக்கியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் நடந்த போரில் ஆங்கிலேயர்கள் வென்றனர். போர் நஷ்டஈடாக, தங்களின் வசம் வந்த காஷ்மீர் நிலப்பரப்பை, டோக்ரா வம்சத்தைச் சேர்ந்த குலாப் சிங் என்ற இந்து மன்னருக்கு விற்றார்கள்.

விலை என்ன தெரியுமா?: வெறும் 75 லட்சம் நானக்ஷாஹி ரூபாய்கள்! (நானக்ஷாஹி என்பது 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் மகாராஜா ரஞ்சித் சிங் தலைமையிலான சீக்கியப் பேரரசால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ வெள்ளி நாணயம் ஆகும். இதன் எடை சுமார் 11 கிராம்).

1846-ல் கையெழுத்தான இந்த 'அமிர்தசரஸ் ஒப்பந்தம்' (Treaty of Amritsar), சுமார் 80% க்கும் மேற்பட்ட முஸ்லிம்களைக் கொண்ட ஒரு நிலப்பரப்பை, எந்தத் தொடர்பும் இல்லாத ஒரு ஒடுக்குமுறை மன்னரின் காலடியில் தூக்கிப் போட்டது. காஷ்மீர் மக்களின் தலைவிதி அன்றே பிரிட்டனால் விற்கப்பட்டுவிட்டது.

குலாப் சிங்குக்குப் பிறகு வந்த டோக்ரா மன்னர்களான ரன்பீர் சிங், பிரதாப் சிங், மற்றும் ஹரி சிங் ஆகியோரின் ஆட்சிக்காலம் முஸ்லிம்களுக்கு நரகமாகவே இருந்தது. முஸ்லிம்கள் மீது கடுமையான வரிகள் திணிக்கப்பட்டன. பேகார் எனப்படும் கொத்தடிமை முறை அமல்படுத்தப்பட்டது. பசுவதை என்ற பெயரில் மாடறுப்பு தடை கொண்டு வரப்பட்டது. இதனை காரணம் காட்டி பலருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. கல்வி, அரசு வேலைகள் அனைத்திலும் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டனர்.

ஜூலை 13, 1931 இல், ஒடுக்குமுறை எல்லை மீறியபோது, அப்துல் காதிர் என்ற நபரின் உரையால் ஈர்க்கப்பட்ட காஷ்மீர் மக்கள் ஸ்ரீநகர் மத்திய சிறைச்சாலையை முற்றுகையிட்டனர். மன்னரின் படைகள் ஈவிரக்கமின்றிச் சுட்டதில் 22 காஷ்மீரிகள் கொல்லப்பட்டனர். இன்றுவரை அந்த நாள் காஷ்மீரின் 'தியாகிகள் தினமாக' (Martyrs' Day) அனுசரிக்கப்படுகிறது. இதிலிருந்துதான் ஷேக் அப்துல்லாவின் 'நேஷனல் கான்ஃபரன்ஸ்' கட்சி உருவாகி மன்னருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யத் தொடங்கியது.

1947 ஆகஸ்ட் 14 மற்றும் 15 தேதிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்றன. பிரிட்டிஷ் சட்டப்படி, இந்தியாவில் இருந்த சமஸ்தானங்கள் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ இணையலாம்; அல்லது தனித்தும் இருக்கலாம்.

பெரும்பான்மை முஸ்லிம்களைக் கொண்ட காஷ்மீர் தங்களோடுதான் இணையும் என்று பாகிஸ்தான் நினைத்தது. ஆனால் மன்னர் ஹரி சிங், இந்தியாவுடனும் இணையாமல், பாகிஸ்தானுடனும் இணையாமல், காஷ்மீரை ஒரு 'சுதந்திர நாடாக' (Independent State) ஆள ஆசைப்பட்டார். இதனால் அவர் இரண்டு நாடுகளுடனும் ஒரு தற்காலிக ஒப்பந்தத்தை (Standstill Agreement) முன்வைத்தார்.

மன்னர் ஹரி சிங்கின் காலதாமதம் காஷ்மீருக்குள் பெரும் பதற்றத்தை உருவாக்கியது. பூஞ்ச் பகுதியில் மன்னரின் படைகள் முஸ்லிம்கள் மீது கொடூரமான தாக்குதல்களையும், படுகொலைகளையும் நடத்தின. ஜம்மு பகுதியில் நடந்த கலவரங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்; பலர் பாகிஸ்தானுக்கு விரட்டியடிக்கப்பட்டனர். ஏற்கனவே காஷ்மீரை விழுங்க காத்திருந்த பாகிஸ்தானுக்கு இது வாய்ப்பாக மாறிப்போனது. பாகிஸ்தான், வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தைச் சேர்ந்த பஷ்தூன் பழங்குடியினரை ஆயுதங்களுடன் காஷ்மீருக்குள் அனுப்பியது. இந்தப் பழங்குடிப் படைகள், பாகிஸ்தான் ராணுவத்தின் மறைமுக ஆதரவுடன் காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரை நோக்கி அதிவேகமாக முன்னேறின. வழியெங்கும் கலவரங்களும், சூறையாடல்களும் அரங்கேறின.

பழங்குடியினப் படைகள் ஸ்ரீநகரை நெருங்குவதைக் கண்ட மன்னர் ஹரி சிங் பயந்துபோய், ஜம்முவுக்குத் தப்பியோடினார். தன்னை இந்தக் கலவரத்திலிருந்து காப்பாற்றும்படி இந்தியாவின் உதவியை நாடினார். அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் மவுண்ட்பேட்டன் பிரபு ஆகியோர் ஒரு நிபந்தனை விதித்தனர். "நீ காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தால் மட்டுமே நாங்கள் ராணுவத்தை அனுப்புவோம்." வேறு வழியின்றி, அக்டோபர் 26, 1947 அன்று, இணைப்பு ஒப்பந்தத்தில் (Instrument of Accession) ஹரி சிங் கையெழுத்திட்டார். 

(இந்த ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டாரா இல்லையா, அது கட்டாயப்படுத்தப்பட்டதா என்பது இன்றும் சர்வதேச அளவில் விவாதத்திற்குரிய ஒரு விஷயம்).

ஒப்பந்தம் கையெழுத்தான மறுநாளே இந்திய ராணுவம் ஸ்ரீநகரில் வந்திறங்கியது. பஷ்தூன் பழங்குடியினப் படைகளை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. அதிகாரப்பூர்வமாக இந்திய மற்றும் பாகிஸ்தான் ராணுவங்களுக்கு இடையே 'முதல் காஷ்மீர் போர்' வெடித்தது. போர் முற்றுப்பெறாமல் நீடித்த நிலையில், நேரு இந்த விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு சென்றார். ஆகஸ்ட் 13, 1948 அன்று ஐ.நா ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை (UN Resolution 47) நிறைவேற்றியது:

பாகிஸ்தான் தனது படைகளையும் பழங்குடியினரையும் காஷ்மீரிலிருந்து வாபஸ் பெற வேண்டும்.

இந்தியாவும் தனது ராணுவக் கட்டமைப்பைக் குறைக்க வேண்டும்.

காஷ்மீர் மக்களின் எதிர்காலத்தை, அவர்களே ஒரு "பொது வாக்கெடுப்பு" (Plebiscite - Right to Self-Determination) மூலம் தீர்மானிக்க வேண்டும்.

போர் நின்றது. காஷ்மீர் இரண்டு துண்டுகளாகப் பிளவுபட்டது (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் இந்தியக் கட்டுப்பாட்டு காஷ்மீர். இடைநடுவே சீனாவும் தன் பங்கிற்கு சிறப்பு பாத்திரம் ஏந்தி நடித்து ஒரு பகுதியை அபகரித்துக்கொண்டது).

காஷ்மீர் மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கலாம், ஐ.நா சபை நமக்கான வாக்கெடுப்பை நடத்தும், நாம் யாருடன் சேர வேண்டும் என்பதை நாமே முடிவெடுக்கலாம் என்று அந்தப் பனிமலையின் மக்கள் கனவு கண்டார்கள்.

ஆனால், அந்த வாக்கெடுப்பு என்றைக்குமே நடக்கப்போவதில்லை என்பதும், அடுத்த பல தசாப்தங்களுக்குத் தங்களின் தலைவிதி டெல்லியின் அரசியல் சதுரங்கத்திலும், இஸ்லாமாபாத்தின் ராணுவ வியூகங்களிலும் சிக்கிச் சின்னாபின்னமாகப் போகிறது என்பதும் அவர்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

Thanks: Naseer

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved