ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்ப இளைஞர் ஆர்.கவின் பிரசாந்த், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT Madras) இளநிலை பொறியியல் (B.Tech) பட்டம் பெற்று, இந்தியாவின் முன்னணி தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனமான Tanla Platforms Limited-ல் பணியமர்ந்துள்ளார். JEE தேர்வில் அகில இந்திய அளவில் 968-வது இடம் பெற்று ஐஐடியில் இணைந்த அவர், கல்வியிலும், வளாகத் தேர்விலும் தொடர்ந்து சாதனை படைத்து, கம்பளத்தார் சமூக மாணவர்களுக்கு புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்துள்ளார். நேற்று (17.07.2026) நடைபெற்ற சென்னை ஐஐடியின் 63-வது பட்டமளிப்பு விழாவில் அவர் பட்டம் பெற்றதையொட்டி, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் – சென்னை சார்பில் நேரில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள மில்மேடு–காளிகுளம் கிராமத்தைச் சேர்ந்த ஆர்.கவின் பிரசாந்த், நேற்று (17.07.2026) சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Madras) வளாகத்தில் நடைபெற்ற 63-வது பட்டமளிப்பு விழாவில் இளநிலை பொறியியல் (B.Tech – Mechanical Engineering) பட்டம் பெற்றார். இதனைத் தொடர்ந்து, சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் அவரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பாராட்டி, வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள மில்மேடு–காளிகுளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயத் தம்பதிகளான ஆர். இரவி – ஆர். இராஜேஸ்வரி ஆகியோரின் மகனான கவின் பிரசாந்த், தனது பள்ளிக் கல்வியை சத்தியமங்கலம் அருகேயுள்ள அரியப்பம்பாளையம் ரேங்க் இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியில் பயின்றார். பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 492 மதிப்பெண்கள் பெற்றதுடன், மருத்துவ நுழைவுத் தேர்வான NEET-இல் 720-க்கு 582 மதிப்பெண்களும், பொறியியல் நுழைவுத் தேர்வான JEE-இல் அகில இந்திய அளவில் 968-வது தரவரிசை (AIR 968) பெற்று மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் பாராட்டைப் பெற்றார்.
இந்தச் சாதனையின் மூலம் சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT Madras) இயந்திரவியல் (Mechanical Engineering) பிரிவில் சேரும் வாய்ப்பைப் பெற்றார். நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட திறமையான மாணவர்கள் பயின்ற அந்தப் பிரிவில், 234 மாணவர்களில் ஒருவராக இணைந்த கவின் பிரசாந்த், முதல் பருவத் தேர்விலேயே 10-க்கு 9 GPA பெற்று தனது வகுப்பில் மூன்றாம் இடத்தை பிடித்து கல்வியிலும் தனித்திறனை நிரூபித்தார்.
அவரது தொடர்ச்சியான கல்விச் சாதனையை ஊக்குவிக்கும் வகையில், வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் – சென்னை சார்பில் ரூ.10,000/- ஊக்கத்தொகை வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
தனது இளநிலை பொறியியல் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள கவின் பிரசாந்த், ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு CPaaS (Communications Platform as a Service) துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் Tanla Platforms Limited நிறுவனத்தின் வளாகத் தேர்வில் (Campus Placement) தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்துள்ளார்.
1999-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட Tanla Platforms Limited, நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கிடையேயான SMS, WhatsApp, RCS, Voice, Email, OTP உள்ளிட்ட தகவல் தொடர்பு சேவைகளை பாதுகாப்பாகவும், மிகப்பெரிய அளவிலும் வழங்கும் இந்தியாவின் முன்னணி Cloud Communications நிறுவனங்களில் ஒன்றாகும். சுமார் ரூ.7,750 கோடி சந்தை மதிப்பைக் கொண்ட இந்நிறுவனத்தின் சார்பில், கடந்த ஆண்டு சென்னை ஐஐடியில் நடைபெற்ற வளாகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட இரு மாணவர்களில் ஒருவராக கவின் பிரசாந்த் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
தற்போது ஹைதராபாத்தில் உள்ள Tanla Platforms நிறுவனத்தின் தலைமையகத்தில் பணியாற்றி வரும் கவின் பிரசாந்துக்கு, நேற்று (17.07.2026) சென்னை ஐஐடியில் நடைபெற்ற 63-வது பட்டமளிப்பு விழாவில் இளநிலை பொறியியல் (B.Tech) பட்டம் வழங்கப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் உண்ணிகிருஷ்ணன் நாயர், இயந்திரவியல் பிரிவில் பட்டம் பெற்ற 234 மாணவர்களுக்கும் பட்டங்களை வழங்கினார். பெற்றோர்களான ஆர். இரவி – ஆர். இராஜேஸ்வரி மற்றும் உறவினர்கள் முன்னிலையில் கவின் பிரசாந்த் தனது பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் – சென்னை சார்பில் பொதுச்செயலாளர் செந்தில்குமார் இராமராஜ் மற்றும் மண்டலப் பொறுப்பாளர் ஆர். ஆறுமுகச்சாமி ஆகியோர் கலந்துகொண்டு கவின் பிரசாந்துக்கு சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
ஐஐடி சென்னை போன்ற நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனத்தில் இளநிலை பொறியியல் படிப்பை வெற்றிகரமாக முடித்து, இந்தியாவின் முன்னணி தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியமர்ந்துள்ள கவின் பிரசாந்துக்கு, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் செ. இராதாகிருஷ்ணன், ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ந. பவுல்ராஜ், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளைத் தலைவர் மு. பழனிச்சாமி உள்ளிட்டோர் தங்களது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.