தேனி மாவட்டம் புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஆ. சுஜிதா, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் (Combined Technical Services - CTS) தேர்வில் வெற்றி பெற்று, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையில் இளநிலை வரைவு அதிகாரி (Junior Draughting Officer - JDO) பணிக்கு தேர்வாகியுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), மாநில அரசின் பல்வேறு தொழில்நுட்பத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் (CTS) தேர்வை நடத்தி வருகிறது. உதவிப் பொறியாளர், நூலகர், ஆராய்ச்சி உதவியாளர் உள்ளிட்ட தொழில்நுட்பப் பதவிகளுக்கு போட்டியிட, சம்பந்தப்பட்ட பொறியியல் அல்லது தொழில்நுட்பப் பிரிவில் பட்டம் அல்லது பட்டயம் பெற்றிருப்பது கட்டாயத் தகுதியாகும்.
அதன்படி, கடந்த ஆண்டு நடைபெற்ற CTS தேர்வில் பங்கேற்ற தேனி மாவட்டம் புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த திரு. ஆனந்தராஜ் – திருமதி விஜயலட்சுமி தம்பதியினரின் மகளான ஆ. சுஜிதா சிறப்பாக தேர்ச்சி பெற்றார்.
கட்டமைப்புப் பொறியியல் (Structural Engineering) துறையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள அவர், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையில் இளநிலை வரைவு அதிகாரி (Junior Draughting Officer - JDO) ஆக பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான பணிநியமன உத்தரவை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அவரிடம் நேரடியாக வழங்கியது.
இதேபோல், சேலம் மாவட்டம் கோடாங்கி நாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த எஸ். ஆனந்தராஜ், TNPSC தேர்வில் வெற்றி பெற்று, தமிழ்நாடு மின்வாரியத்தின் வடசென்னை அனல் மின் நிலையத்தில் உதவி மின் பொறியாளராக (Assistant Electrical Engineer) பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார்.
TNPSC தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பணியில் இணைந்த ஆ. சுஜிதா மற்றும் எஸ். ஆனந்தராஜ் ஆகியோருக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் செ. இராதாகிருஷ்ணன், சமூக நீதிக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொ. இராமராஜ் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இவர்களின் சாதனை, இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது.