வியட்நாம் துறைமுகத்திலிருந்து சீனாவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சர்வதேச சரக்குக் கப்பலில் பணியாற்றிய தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெய்கண்ணன் (34) திடீரென உயிரிழந்தார். வெளிநாட்டில் ஏற்பட்ட இந்த துயரச் சம்பவத்துக்குப் பின்னர், அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர பல்வேறு நிர்வாகச் சிக்கல்கள் ஏற்பட்ட நிலையில், மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ மேற்கொண்ட விரைவான நடவடிக்கையால் உடல் பாதுகாப்பாக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக ஜெய்கண்ணன் குடும்பத்தினரும், இராஜகம்பள சமுதாயத்தினரும் துரை வைகோவுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
கடலில் நிகழ்ந்த சோகம்:
தூத்துக்குடி மாவட்டம் கட்டபொம்மன் நகரைச் சேர்ந்த கல்வெட்டு செல்வத்தின் இளைய மகன் ஜெய்கண்ணன், லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் புகழ்பெற்ற சர்வதேச கப்பல் மேலாண்மை நிறுவனமான Zodiac Maritime Agencies-இல் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சங்கீதா மயில். இவரது மூத்த சகோதரர் கணேஷ், ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
கடந்த 27.04.2026 அன்று, நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பல் வியட்நாம் துறைமுகத்திலிருந்து சீனாவை நோக்கிப் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது ஜெய்கண்ணன் பணிக்கு வராததால், சக ஊழியர்கள் அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்த்தனர். அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாகக் கருதி எழுப்பாமல் திரும்பிச் சென்றனர்.
இதற்கிடையில் கப்பல் வியட்நாமிலிருந்து புறப்பட்டுவிட்டது. பின்னர் மீண்டும் அறைக்குச் சென்று பார்த்தபோது, அதே நிலையில் இருந்த ஜெய்கண்ணனை எழுப்ப முயன்றபோதுதான் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
கப்பலிலேயே பாதுகாக்கப்பட்ட உடல்:
கப்பல் ஏற்கனவே கடலுக்குள் பயணித்துக் கொண்டிருந்ததால் உடனடியாக கரை சேர முடியவில்லை. மேலும், கப்பலில் உடலைப் பாதுகாக்கும் சிறப்பு வசதிகள் இல்லாததால்,மீன்கள் வைக்கப் பயன்படுத்தப்படும் குளிர்சாதனப் பெட்டியில் (Freezer) அவரது உடலை பாதுகாத்து வந்தனர்.
இறுதியாக 08.05.2026 அன்று கப்பல் சீனத் துறைமுகத்தை வந்தடைந்ததும், ஜெய்கண்ணன் உடல் கரைக்கு இறக்கப்பட்டது.
துரை வைகோவின் உடனடி தலையீடு:
ஜெய்கண்ணன் உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவருவதற்காக அவரது குடும்பத்தினர் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோவை அணுகினர்.
இதையடுத்து துரை வைகோ, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு இந்த விவகாரத்தை உடனடியாகக் கொண்டு சென்று, உடலை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும், தேவையான ஆவணங்கள் மற்றும் அலுவலக நடைமுறைகளை விரைந்து நிறைவு செய்து இந்தியாவிற்கு அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அதன் பேரில் சீனாவில் ஜெய்கண்ணன் உடல் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, தேவையான அனைத்து நிர்வாக நடைமுறைகளும் நிறைவு செய்யப்பட்டன.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு சொந்த ஊர் திரும்பிய உடல்:
சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்னர், 21.06.2026 அன்று ஜெய்கண்ணன் உடல் விமானம் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான தூத்துக்குடிக்குக் கொண்டு செல்லப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர், ஜெய்கண்ணன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
குடும்பத்தினரை நெகிழச் செய்த மனிதநேயம் உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர தேவையான அனைத்து உதவிகளையும் செய்ததோடு மட்டுமல்லாமல், இறுதி மரியாதையில் பங்கேற்க தனது கட்சி நிர்வாகிகளையும் துரை வைகோ அனுப்பி வைத்திருந்தது ஜெய்கண்ணன் குடும்பத்தினரை நெகிழ்ச்சியடையச் செய்தது.
தங்களது இக்கட்டான சூழலில் உறுதுணையாக இருந்து உதவிய துரை வைகோவுக்கு ஜெய்கண்ணன் குடும்பத்தினரும், இராஜகம்பள சமுதாயத்தினரும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர்.