🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கட்சியை மற! உன் வீட்டு குழந்தையை நினை! அடிமையா?-ஆளுமையா?

உறவினர்களுக்கு காலை வணக்கம்; பறிக்கப்பட்ட நமது குழந்தைகளின் வாழ்வாதார உரிமைகளை பாதிக்கப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்த பதவி, பணத்திற்காக, சுகபோக வாழ்க்கைக்காக தங்கள் கட்சியிலுள்ள தலைவர்கள் மூலமும், மீடியாக்கள், நடிகர்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள் மூலமும் நியாயப்படுதும் முயற்சிகளில் அதிகார வர்க்கம் ஈடுபட்டுள்ளது. நடந்துள்ள சமூக அநீதியில் உங்கள் உரிமை குறித்து அறிவு,தெளிவு பெறுங்கள். ஒரே எடைகொண்ட மூளைதான் அனைவருக்கும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். உங்கள் உரிமை குறித்து அறிந்துகொள்ளுங்கள்.

உறவினர்களே 10.5 விழுக்காடு குறித்துப் பலவிதமானப் பொய் பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு, அசுரப் பலம் கொண்ட ஊடகங்கள் மக்கள் மூளையைச் சலவைச் செய்யத் துவங்கிவிட்டது. நமது போராளிகளும் நமது பக்கம் இருக்கின்ற அசைக்கமுடியாத, சட்டப்படியான, ஆதாரத்தின் அடிப்படையிலான, நியாயங்களை, ஏனோ தெரியவில்லை, முறையாக எடுத்துவைக்க முடியவில்லை. சமூகநீதி என்பது எந்த ஒரு சமூகத்திற்கு மட்டும் ஏகபோக உரிமையாக வழங்கப்படவில்லை, தரமற்ற அரசியல் கட்சிகளின்  வாக்கு வியாபாரப் பொருட்களும் அல்ல. சில அடிப்படையான விளக்கங்களை உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும். அரசமைப்புச் சட்டத்தில் சாதிவாரி இடஒதிக்கீடு வழங்குவதற்கு சாத்தியமே இல்லை. வன்னியர்களுக்கு வழங்கியிருப்பது பல சாதிகளை உள்ளடக்கிய ஒரு தொகுப்புத்தான் என்பது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போன்றது. சட்டப்படியான மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதிகள் பட்டியலில் 26ஆம் வரிசையில் உள்ள ஒரே சாதிச் சான்றிதழ் வழங்க கூடிய ஒரு சாதிதான் வன்னியர் சாதி என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஒரு சாதிக்கு மட்டும் தனி இட ஒதுக்கீடு வழங்குவதற்குச் சட்டத்தில் எந்த வழிவகையும் இல்லை. அப்படி என்றால் தமிழகத்தில் இருக்கின்ற அத்தனைச் சாதிகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்கினால் மட்டும்தான் அந்த சட்டம் சமமான சட்டமாக இருக்க முடியும். அப்படி எல்லாச் சாதிகளுக்கும் இடஒதுக்கீடு வழங்குவது நடைமுறையில் சாத்தியமே இல்லாதது என்ற வாதங்களைக் கூட அரசியல் விமர்சகர்களும், நடுநிலையாளர்களும் கூட புரிந்து கொள்ள மறுப்பது, வேதனையாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது.

மேலும், அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு கொடுத்திருக்கின்றார்கள், கேரள மாநிலத்தில் சாதிவாரி இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்ற வாதங்கள் எல்லாம் உண்மையல்ல. ஏனென்றால் அருந்ததியர் என்பது ஒரு சாதி அல்ல. தனித்தனி சாதி சான்றிதழ் வழங்கப்படுகிற தாழ்த்தப்பட்ட சாதி பட்டியலில் இருக்கின்ற சாதிகளின் தொகுப்பு.  தொழிலின் அடிப்படையில் ஒரு வகுப்பாக அருந்ததியர் வகுப்பினர் என்று பிரிக்கப்பட்டு, அவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்காமல் முன்னுரிமை இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. கேரள மாநிலத்தைப் பொருத்தவரை விடுதலைக்கு முன்பாகவே சாதிவாரி இடஒதுக்கீடு வழங்கப்பட்டு, அது இன்று வரை நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதை எதிர்த்து யார் வழக்குத்தொடுத்தாலும் அரசியலமைப்புச் சட்டப்படி செல்லத்தக்க நடைமுறை அல்ல. இட ஒதுக்கீட்டுச் சலுகையில் மற்ற சமூகங்களுடன் போட்டிப் போட முடியாத பின்தங்கிய சமூகங்களுக்கும் கொண்டு போய் சேர்ப்பதற்கு தான் வகுப்புவாரி தொகுப்பு இடஒதுக்கீட்டு முறை. அது அண்டை மாநிலங்களான கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இட ஒதுக்கீடுகளை பிரித்து வழங்க முடியுமே தவிர, ஒரு சாதிக்கு மட்டும் என்ற நடைமுறை, சட்டப்படி மிகத் தவறானது, பிற்போக்கானது, இப்படி வழங்கியிருப்பதுச் சமூகநீதியைப் பாதுகாக்கத்தான் என்று கருத்துக் கணிப்பில் மக்கள் தெரிவித்து விட்டார்கள் என்று காட்டுவதெல்லாம் தில்லாலங்கடி வேலைகள். இந்த முறை நீங்கள் ஆயிரம் ஊடகங்களை வைத்து ஆயிரம் நெறியாளர்களைக் கூலிக்கு வைத்து பொய்முட்டைகளை கட்டவிழ்த்துவிட்டலும், நவீன மூளைச்சலவையில் ஈடுபட்டாலும்,  நீங்கள் அடித்தாலும் எங்கள் மக்கள் தங்கள் உரிமை பறிபோகிறது என்ற வேதனையிலும், கொந்தளிப்பிலும் இருக்கின்றார்கள். இனிமேலும் ஏமாற்று வேலையை நம்பபோவதில்லை. விரைவில் அறியாமல் கிடைக்கின்ற மக்களைத் தட்டி எழுப்பி பிரிவினையில் சிக்குண்டு சிரமப்பட்டுக்கொண்டுள்ள, பிற்படுத்தப்பட்ட,  மிகவும் பிற்படுத்தப்பட்டச் சமூகங்களை ஒன்றிணைத்து, இந்த பிற்போக்கான சமூகநீதியை அரசியலாக்குகின்ற கீழான நிலையை மாற்றி, முறையான கணக்கெடுப்பு நடத்தி, எல்லா சமூகங்களுக்கும் சமூகநீதியை மடை மாற்றம் செய்வதற்கு நாங்கள் இரவு பகல் பாராமல் அயராது உழைப்பதற்கு தயாராக இருக்கின்றோம். சத்தியம், உண்மை, மக்கள் சக்தி, வென்றே ஆகவேண்டும். இது நிச்சயம்.

     இரண்டாவதாக, எடப்பாடி அரசு போட்டச் சட்டத்தை, அரசு செயல்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. ஏனென்றால் உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம் இரண்டிலும் அநீதியான சட்டவிரோதமான வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கு எதிராகத் தடையாணை இல்லை. இப்பொழுது வேறுவழியில்லாமல் அவர்கள் செயல்படுத்தியாக வேண்டும். அதை தான் ஸ்டாலின் அரசு செய்திருக்கிறது, என்ற வாதம் சட்டம் தெரியாதவர்கள், உண்மை தெரியாதவர்கள் பேசுகின்ற பேச்சுக்கள். முதலில் உண்மை என்னவென்று பார்ப்போம். உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் தடை ஆணைப் பிறப்பிக்க மறுத்து எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அநீதியானச் சட்டத்திற்கு எதிராக தடை கோரும் மனு உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கின்றது. எதிர்த்தரப்பு அரசு என்பதால் அரசுக்கு அறிவிப்பு கொடுத்து விட்டு அவர்கள் நிலைப்பாட்டைத் தெரிந்துகொண்டு நமது தடை மனு மீது விசாரிப்போம் என்றுதான் நீதிமன்றங்கள் கூறியுள்ளது. அரசு இன்று வரை தனது நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெரிவிக்க வில்லை. மார்ச் மாதம் விசாரணைக்கு வந்த வழக்கில் 6 வார காலத்தில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் ஜூன் 15-ஆம் தேதி விசாரணைக்கு வந்த வழக்கில் அதுவரை அரசு எந்த பதிலும் அளிக்காமல் மேலும் அவகாசம் வேண்டும் என்று நீதிமன்றத்தில் காலத்தை நீட்டிக்க செய்துவருகிறது. ஆளும் அரசு நீதிமன்றத்தில் தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவித்து, தடைகோரும் மனு மீது நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பிக்கமல், நீதிமன்றத்தில் தடை இல்லை என்று சொல்லுவது மிக மிக தவறான வாதம்.

மேலும் சட்டம் இருந்தால் செயல்படுத்தி தானே ஆக வேண்டும் என்றால், ஏற்கனவே மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடு வழங்கும் சட்டம் இருக்கிறது. அந்த சட்டத்தைத் திருத்த வில்லையே!. அதை செயல்படுத்த வேண்டாமா? சட்டம் தெரிந்த வழக்கறிஞர்கள் தான் விளக்கம் தர வேண்டும். நாம் சட்டத்தை உன்னிப்பாக பார்க்காமல் மேலோட்டமாக அதெல்லாம் செய்து கொள்ளலாம் என்று சிறுபிள்ளைத்தனமாக வாதங்களை முன்வைக்க முடியாது. தமிழகத்தில் 69 விழுக்காடு வழங்குகின்றன இடஒதுக்கீட்டு சட்டம் இருப்பது அசைக்க முடியாத உண்மை. அந்தச் சட்டத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு எந்த பிரிவினையும் இல்லாமல் 20 விழுக்காடு வழங்கப்படும் என்று உள்ளதும் உண்மை. அந்தச் சட்டத்தை செயல்படுத்தாமல் புதிதாக தனியாக ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து அதைச் செயல்படுத்துவோம் என்பது ஏற்புடைய வாதமல்ல.  அரசு என்ன செய்து இருக்க வேண்டும் குறைந்தபட்சம் தங்கள் நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெரிவித்து, தடைமனு மீது ஒரு முடிவு எடுத்தப் பின்பு இதைச் செயல்படுத்தி இருக்கலாம். அதைச் சில நாட்களிலேயே செய்து முடித்து இருக்கலாம். ஆனால் வாக்களித்த மக்களை வஞ்சிக்கின்ற அரசாகவும், ஆட்சி அதிகாரத்திற்காக ஒட்டுமொத்த தமிழகத்தையே கூவிக்கூவி விற்பதற்கும் கூசாத அரசுதான் இப்போது நடைபெறுகின்ற அரசு என்பதை மீண்டும் நிரூபித்து இருப்பதோடு மட்டுமல்லாமல். ஆட்சி அதிகாரத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்த எடப்பாடி அரசுக்கு சளைத்ததல்ல ஸ்டாலின் அரசு என்பதைத்தான் இது நிரூபித்துக் காட்டியுள்ளது.

உறவுகளே வாதங்களை பொதுவெளியில் வைக்கின்றபோது, சில அடிப்படையான வாதங்களை நீங்கள் முன் வைக்க வேண்டும். வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் ஏன் சட்டப்படி, நடைமுறைப்படி, சமூகநீதிக்கு எதிரானது, மக்களுடைய உரிமைகளைப் பறிப்பது என்பதை நீங்கள் சுருக்கமாகவும்,  அதே நேரத்தில் மறுப்பு தெரிவிக்க முடியாத விபரங்களை முன்வைக்கவேண்டும். ஏற்கனவே நாம் பலமுறை எடுத்துக் கூறியிருந்தாலும் கூட சிலவற்றை உங்களுக்காக மீண்டும் ஒருமுறைப் பார்ப்போம். 

சட்டம் என்றால் அரசியலமைப்புச் சட்டம் ஒரு சட்டத்தை எப்படி நிறைவேற்றும் என்று வலியுறுத்தியுள்ளதோ, அப்படித்தான் நிறைவேற்ற வேண்டும். வன்னியர் இடஒதுக்கீட்டுச் சட்டம் அப்படி நிறைவேற்றப்படவில்லை. அரசமைப்புச் சட்டம் 338B(9)ன்படி தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தைக் கலந்துப் பேசி விட்டுத்தான் பிற்படுத்தப்பட்ட மக்கள் மேம்பாட்டிற்கான எந்தவிதமானக் கொள்கை முடிவையும் மத்திய, மாநில அரசுகள் எடுக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் கொண்டுவருவதற்கு முன்பாக அந்த அரசமைப்புச் சட்ட வழிகாட்டுதல் பின்பற்றப்படவில்லை. உச்சநீதிமன்றம் நாகராஜ் வழக்கு முதல் பல வழக்குகளில் மிகத் தெளிவாக போதுமான சமீபகால புள்ளிவிவரம் இல்லாமல் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று தெளிவாகக் கூறிவிட்டது. வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு ஒதுக்கீடு வழங்குவதற்கு எந்தவிதமான சமீபகால கல்வி, சமூக நிலை, குறித்த புள்ளிவிவரங்கள் இல்லை. 1985ம் ஆண்டு  அம்பாசங்கர் ஆணைய அறிக்கை என்று ஒன்று இல்லவே இல்லை. இருந்தாலும் அது சமீபகால புள்ளிவிபரமல்ல. எனவே இந்தச் சட்டம் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலுக்கு எதிரானது. மேலும் சாதி பட்டியலின்படி ஒரே வரிசையில் உள்ள ஒரு சாதிக்கு இட ஒதுக்கீடு கொடுக்க சட்டத்தில் வழிவகை இல்லை. இந்த சட்டம் எந்த அடிப்படையும் இல்லாமல் போடப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட ஆணையத் தலைவரின் பரிந்துரையின் அடிப்படையில் சட்டம் கொண்டு வந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட ஆணையத்தின் தலைவர் பிற உறுப்பினர்களை கலந்து பேசி கூட்டு முடிவு செய்துதான் அந்தப் பரிந்துரையை அரசுக்கு அனுப்ப முடியும். ஆனால் பிற்படுத்தப்பட்ட ஆணையத்தின் எந்த கூட்டத்திலும் இதுவரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உள் ஒதுக்கீடு குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை. உறுப்பினர்கள் யாரும் இந்த உள்ஒதுக்கீடு முறை குறித்து எந்த கையெழுத்தும் இடவில்லை. எனவே தலைவர் மட்டும் தனியாக அறிக்கை கொடுக்க முடியாது. கொடுத்திருந்தாலும், அது சட்டப்படி ஏற்புடைய அறிக்கை அல்ல. அதன் அடிப்படையில் கொண்டு வந்த சட்டம் நிலைக்க தக்கதல்ல. ஒரே சமூக கல்வி நிலையில் இருக்கின்ற சமூகங்களை வேறு வேறு பிரிவுகளில் வைத்து வழங்கியுள்ளது தான்தோன்றித்தனமானது. அதைவிட மேலாகச் சம்பந்தப்பட்ட சமூகங்களை கலந்து ஆலோசிக்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே முழுக்க முழுக்க மோசடியான சட்டம்.

அதைவிட மேலாக, 5.5.2021ல் உச்சநீதிமன்றத்தில் மராத்தா வழக்கில் மராத்தியர்கள் எல்லா நிலைகளிலும் போதுமான அளவுக்குக்குப் பிரதிநிதிதுவம் பெற்றிருக்கின்றார்கள். எனவே அவர்களுக்கு இட ஒதுக்கீடுக் கொடுத்ததுச் சட்டப்படிச் செல்லத்தக்கதல்ல என்று தெளிவாகக் தீர்ப்பளித்துள்ளது. அத்தீர்ப்பின்படி, தமிழகத்தில் வன்னியர்கள் போதுமான அளவிற்கு பிரதிநிதித்துவத்தில் இருக்கின்றார்கள் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கே சாத்தியம் இல்லை. அப்படி இருக்கும் பொழுது ஏழை எளிய சாதிகள் 20% இடஒதுக்கீட்டில் நம்பிள்ளைகளுக்கும் பயன்கிடைக்கும், முன்னேறிவிடுவார்கள் என்று நம்பி இருந்த வேளையில், 20 விழுக்காட்டைப் பறித்து அவர்களுக்கு மட்டும் 10.5 விழுக்காடு என்று வழங்குவது சட்டத்திற்கு எதிரானது,  தர்மத்திற்கு எதிரானது.

 இது போன்று எண்ணற்ற சட்டப்படியான மறுக்க முடியாத வாதங்களை நாம் நிறைய உங்களுக்கு பட்டியலிட்டு இருக்கின்றோம் தயவுசெய்து 115 சமுதாயத்தைச் சேர்ந்த உறவுகள்  அதை சற்றுக் கவனமாக படிக்க வேண்டும். இம்முறை உணர்வுள்ள உறவுகள் நமக்குள் இருக்கின்றக் கருத்து வேற்றுமைகளை மறந்து, பொய்ப் பிரசாரங்களை நம்பி ஏமாறாமல், எல்லோரும் ஒற்றுமையோடு ஒருங்கிணைந்து இந்த அரசியல் மூடர்களுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம். எனவே, நாம் ஏற்கனவே தீர்மானித்தப்படி, மக்களிடத்தில் உண்மையை எடுத்துச் சொல்ல, கையெழுத்து இயக்கங்களை தீவிரப்படுத்துவோம். அநீதியானச் சட்டத்தை ஏற்க முடியாது என்று, சட்டமறுப்பு இயக்கமாக கருப்புக்கொடிப் போராட்டம் இல்லந்தோறும் பரவட்டும். வருகின்ற ஆகஸ்ட் 8ஆம் தேதி தமிழகம் முழுவதும் பட்டி தொட்டியெல்லாம் ‘அரசியல் வியாபாரிகளே வெளியேறுங்கள்’ மக்கள் வாழ்வுரிமைகளை சூறையாடிவிட்டார்கள் என்று விண்ணும் மண்ணும் அதிரும் அளவிற்கு ஒலிமுழக்க ஊர்வலங்கள், பேரணிகள் வீதிகள் தோறும் நடத்தப்பட வேண்டும். மக்கள் தன்னெழுச்சியாக இதைச் செய்யவேண்டும். அரசு காவல்துறை மூலமாகவும், உளவுத்துறை மூலமாகவும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அச்சுறுத்தல் செய்யலாம். ஆண்டவனைத் தவிர யாருக்கும் அடிபணியாத வீர வம்சமடா நாங்கள் என்று நெஞ்சை நிமிர்த்தி நின்று, நீதிக்காக, உண்மைக்காக, தமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக, நமக்கு இழைக்கப்பட்ட இழிவையும், அநீதியையும் சரி செய்வதற்காக, அனைவரும் நம்பிக்கையோடுக் கடினமாக உழைக்க வேண்டும்.  

நன்றி. வணக்கம்

இப்படிக்கு

146BC&115MBC/DNTசமூகங்களின் சமூகநீதிக் கூட்டமைப்பு, 28.7.2021

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved