இந்தியாவில் சமூக நீதி மற்றும் இடஒதுக்கீடு குறித்து பல தசாப்தங்களாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில், பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினருக்கான (EWS) 10 சதவீத இடஒதுக்கீடு, உயர்சாதிகளில் உள்ள ஏழைகளுக்கும் அரசுப் பணிகள் மற்றும் கல்வி வாய்ப்புகளில் பங்கீடு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால், இந்த ஒதுக்கீடு நடைமுறையில் யாருக்குப் பயன் அளிக்கிறது என்ற கேள்வி இன்று தீவிரமாக எழுந்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான UPSC குடிமைப் பணித் தேர்வில் EWS ஒதுக்கீட்டின் கீழ் தேர்வானவர்களின் பின்னணியைப் பற்றிய தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் நடத்திய சமீபத்திய ஆய்வு, இந்த விவாதத்திற்கு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான UPSC குடிமைப் பணித் தேர்வில் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினருக்கான (EWS) 10% ஒதுக்கீட்டின் கீழ் 104 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். EWS ஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கம், ஆண்டுக்கு ₹8 லட்சத்திற்கும் குறைவான குடும்ப வருமானம் கொண்ட உயர்சாதி ஏழைகளுக்கு வாய்ப்பளிப்பதாகும். ஆனால் தேர்வானவர்களின் பின்னணி குறித்த ஆய்வுகள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.
எண்ணிக்கைகள் என்ன சொல்கின்றன?
2025 ஆம் ஆண்டு EWS ஒதுக்கீட்டின் கீழ் தேர்வான 104 பேரில்:
84 பேர் (80.8%) ஏதாவது ஒரு UPSC பயிற்சி நிலையத்தில் பயின்றவர்கள்.
67 பேர் (64.4%) பிரபலமான பயிற்சி மையங்களில் ₹2.5 லட்சம் முதல் ₹3.5 லட்சம் வரை கட்டணம் செலுத்தி பயின்றவர்கள்.
46 பேர் (44.4%) ஆண்டுக்கு ₹1 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளில் கல்வி கற்றவர்கள்.
28 பேர் (26.9%) வணிகம் அல்லது நிறுவன உரிமையாளர்கள் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
10 பேர் (9.6%) கார்ப்பரேட் அல்லது பெரிய தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்கள்.
47 பேர் (45%) நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களான IIT, NIT, Delhi University மற்றும் JNU போன்றவற்றில் கல்வி பயின்றவர்கள்.
இந்தப் புள்ளிவிவரங்கள் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகின்றன. பல லட்சம் ரூபாய் செலவில் UPSC பயிற்சி பெறும் பொருளாதார வலிமை கொண்ட குடும்பங்களும், EWS ஒதுக்கீட்டின் பயனாளிகளாக இருப்பது அதன் அடிப்படை நோக்கத்துடன் பொருந்துகிறதா?
உண்மையான ஏழைகளின் வெற்றியும் இருக்கிறது:
இந்த விவாதத்தின் மறுபுறம், பாதுகாப்பு காவலரின் மகன், ரயில்வே சுமைதூக்கும் தொழிலாளியின் மகள், பேருந்து நடத்துநரின் மகன் போன்ற பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் இந்த ஒதுக்கீட்டின் மூலம் முன்னேறியுள்ளனர். அதாவது, EWS ஒதுக்கீடு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது என்று கூற முடியாது. ஆனால் அதன் பலன்கள் மிகவும் தேவையுள்ளவர்களுக்கே சென்று சேருகிறதா என்ற கேள்வி தொடர்ந்து நிலவுகிறது. ஓபிசி இடஒதுக்கீட்டில் காட்டப்படும் கெடுபிடி EWS பிரிவில் இல்லை என்பதே நிதர்சனமாக உள்ளது.
பீமாரு மாநிலங்களின் ஆதிக்கம்:
EWS ஒதுக்கீட்டின் கீழ் தேர்வான 104 பேரில் 73 பேர் உத்தரப் பிரதேசம், பிகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா போன்ற வடஇந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இதில் உத்தரப் பிரதேசம் (25), பிகார் (17), மத்தியப் பிரதேசம் (14), ஹரியானா (9), ராஜஸ்தான் (8) ஆகிய மாநிலங்கள் சேர்ந்து மொத்த வெற்றியாளர்களில் சுமார் 70% பங்கைக் கொண்டுள்ளன.
இவற்றில் உத்தரப் பிரதேசம், பிகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்கள் கடந்த காலங்களில் "BIMARU States" என்று அழைக்கப்பட்டன. "BIMAR" என்ற இந்தி சொல்லுக்கு "நோய்வாய்ப்பட்ட" அல்லது "பின்தங்கிய" என்று பொருள். மக்கள் தொகை உயர்வு, கல்வி பின்தங்கல், வறுமை, குறைந்த தொழில்மயமாக்கல் போன்ற காரணங்களால் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலங்களைக் குறிக்க இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டது.
இந்தப் பின்னணியில், EWS ஒதுக்கீட்டின் பயனாளிகளில் பெரும்பான்மையானோர் இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது, இந்தியாவில் பிராந்திய வளர்ச்சி ஏற்றத்தாழ்வுகள் இன்னும் நீடிக்கின்றன என்பதை நினைவூட்டுகிறது.
EWS குறித்து உச்சநீதிமன்றம் கூறியது என்ன?
EWS ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டபோது அதன் அரசியலமைப்புச் சட்டப்பூர்வ தன்மை உச்சநீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டது. 2022 ஆம் ஆண்டு Janhit Abhiyan vs Union of India வழக்கில், ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு 3:2 என்ற பெரும்பான்மை தீர்ப்பின் மூலம் EWS ஒதுக்கீட்டை செல்லுபடியாக அறிவித்தது. உச்சநீதிமன்றம், பொருளாதார அடிப்படையில் மட்டும் இடஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை மீறுவதல்ல என்றும், EWS-க்காக வழங்கப்பட்ட கூடுதல் 10% ஒதுக்கீடு அரசியலமைப்புக்கு முரணானதல்ல என்றும் தீர்ப்பளித்தது.
அதே நேரத்தில், சிறுபான்மை கருத்தாக தீர்ப்பளித்த இரண்டு நீதிபதிகள், SC/ST/OBC பிரிவுகளில் உள்ள ஏழைகளை EWS ஒதுக்கீட்டிலிருந்து முழுமையாக விலக்குவது சமத்துவக் கொள்கைக்கு எதிரானதாக இருக்கலாம் என்ற கருத்தையும் முன்வைத்தனர்.
இதனால் EWS ஒதுக்கீட்டின் சட்டப்பூர்வத்தன்மை இன்று கேள்விக்குட்படுத்தப்படவில்லை. ஆனால் அதன் தகுதி விதிமுறைகள், பயனாளிகளின் அடையாளம் மற்றும் நடைமுறை அமலாக்கம் குறித்து அரசியல் மற்றும் சமூக விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சமூக நீதியின் நோக்கம் சலுகைகளை உருவாக்குவது அல்ல; மிகவும் தேவைப்படுபவர்களை சென்றடைவதுதான். EWS அமைப்பு அந்த நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றுகிறதா என்பது இன்று இந்தியா எதிர்கொள்ளும் முக்கியமான கொள்கைச் சவால்களில் ஒன்றாக மாறியுள்ளது.