சகல வரம் தரும் சங்கமுத்து பெருமாள்-மத்தரசலு குலத்தார் தெய்வம்!
12-ஆம் நூற்றாண்டில் இன்றைய கர்நாடக-ஆந்திர பகுதியான கம்பளியை ஆட்சி செய்த யது வம்சத்தைச் சேர்ந்த ஒருபிரிவினர் சுல்தான்களோடு நடைபெற்ற போரில் மன்னரையும், ஆட்சியையும் இழக்கின்றனர். சிற்றரசர்களாக இருந்தாலும் பல போர்க்களங்களை சந்தித்து நிலப்பரப்பை இழப்பதும், மீட்பதுமாக இருந்த யது வம்சத்தினர், எஞ்சியிருந்த படை வீரர்களையும், மக்களையும் பாதுகாத்தால் மட்டுமே மீண்டும் அரசமைக்க முடியும் என்ற முடிவுக்கு வருகின்றனர். இதனையடுத்து சுல்தான்களிடம் சிக்காமல் அங்கிருந்து தப்பி அருகிலிருந்த தேசங்களில் தஞ்சமடைகின்றனர். வடபுலங்களில் சுல்தான்களின் ஆதிக்கம் வலுப்பெற்று வரும் நிலையில், தங்கள் நாட்டிற்கும் எப்போதுவேண்டுமானாலும் ஆபத்துவரலாம் என்றுணர்ந்த அண்டை தேசத்து மன்னர்களும், கம்பிளி தேசத்திலிருந்து வந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து, தங்கள் படைகளில் அமர்த்தி கௌரமாக நடத்துகின்றனர்.
சுல்தான்களிடம் இழந்த பகுதிகளை மீட்கும் வேட்கையில் உறுதியோடு இருந்த இளவரசனின் மனைவிக்கு, குழைந்தை இல்லாத குறை அவளது மனதை வாட்டி வதைத்து வந்தது. வாரிசே இல்லாத பொழுது, கணவன் எதற்காக மீண்டும் மீண்டும் போர்செய்ய விரும்புகிறான் என்ற கவலையோடு, இளவரசி சதா காலமும் பெருமாளிடம் உருகி உருகி பிராத்தினை செய்து வந்தாள். ஒருநாள் இளவரசியின் கனவில் தோன்றிய பெருமாள், தனக்குப் பிரியமான சங்கை எடுத்துக்கொண்டு தென்திசை நோக்கி செல்லுமாறும், அப்படி செல்கையில் ஓரிடத்தில் தானே உனக்கு மகனாகப்பிறப்பேன் என்று சொல்லி மறைகிறார். இதனால் மகிழ்ச்சியடைந்த இளவரசி, கணவனிடம் பெருமாள் தனது கனவில் வந்ததை சொல்லி, தென்திசையை நோக்கிச்செல்லாம் என்று வற்புறுத்துகிறாள். மனைவியின் தொடர் வற்புறுத்தலுக்குப்பிறகு வேறு வழியின்றி சம்மதிக்கும் கணவன், தனது சகோதரர்களில் ஒருவரையும், உதவியாக சிறு குழுவையும் அங்கே விட்டு விட்டு , மனைவியை அழைத்துக்கொண்டு தென்திசை நோக்கி புறப்படுகின்றான்.

பெருமாளின் குரலில் மயங்கிய இளவரசி தனது எல்லா ஆபரணங்களையும் மக்களுக்கு தானமாக வழங்கிவிட்டு, பெருமாளை வணங்கி "சங்கு"ஐ மட்டும் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியோடு புறப்படுகிறாள். அண்டை தேசங்களை கடந்து வரும் வழிகளிலெல்லாம் மன்னர்களின் ஆதரவோடு தன்னோடு வந்த படைவீரர்களையும், மக்களையும் சிறுசிறு குழுக்களாக ஆங்காங்கே குடியமர்த்தும் இளவரசனின் பயணம், எங்கே நிறைவு பெறும் என்பது தெரியாமல் தொடர்கிறது. இளவரசியோ தான் எடுத்து வரும் சங்கை, தரையில் இறக்கி வைக்க மனமில்லாமல், “தொட்டில்” கட்டி அதில் படுக்கவைத்து, குழந்தையாகவே பாவித்து வந்தாள். பயணத்தின் தூரமும், காலமும் கூடக்கூட தங்களுடன் வந்த கூட்டத்தின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
ஒருநாள் இரவு நெடுநேரமாகிவிட்டபடியால் செடிகளும், வேலமரங்களும் அடர்ந்து வளர்ந்திருந்த காட்டுப்பகுதியில் தங்கநேர்கிறது. தான் பொத்திப்பொத்தி பாதுகாத்து வந்த சங்கை வைப்பதற்கான இடத்தை தேடுகிறாள் இளவரசி. அப்பொழுது பெரும்கிளைபரப்பி, அடர்ந்து வளர்ந்திருந்த வேலமரம் ஒன்று அவள் கண்ணில் படுகிறது. அருகே சென்று பார்த்தவளுக்கு மரத்தில் “ஊஞ்சல்” ஒன்று கட்டப்பட்டிருப்பதைக் கண்டு பேரானந்தம் கொள்கிறாள். “பெருமாள்” தனக்கு கனவில் சொன்ன இடம் இதுதான் என்ற முடிவுக்குவந்தவள், தான் கொண்டுவந்த “சங்கை" அந்த ஊஞ்சலில் இறக்கி வைத்து மகிழ்கிறாள். அங்கேயே குடில் அமைத்து தங்கியிருக்கும் ஒருசில மாதங்களில் இளவரசி கர்ப்பமாகிறாள். பெருமகிழ்ச்சியடைந்த இளவரசன் தங்கள் நீண்ட பயணம் முடிவுக்கு வந்ததை அடுத்து, ஹெய்சாள மன்னனிடம் உதவிகேட்டு தூதனுப்பிய அதேவேளையில், இந்த மகிழ்ச்சியான தகவலை சகோதர்களுக்கும், உறவினர்களுக்கும் தெரிவித்துவர ஒற்றர்களை அனுப்பி வைத்தான்.
தங்கள் இளவரசனுக்கு வாரிசு கிடைத்துள்ள செய்தியைக்கேட்டு மகிழும் உறவினர்கள், பிரசவ காலத்தை கணக்கிட்டு தென்னகம் நோக்கி வருகின்றனர். அதுசமயம், இளவரசி இங்குவந்து ஊஞ்சலைக் கண்டுகொண்ட அதேநல்லிரவு வேளையில் அழகான ஆண் மகனைப் பெற்றெடுக்கிறாள். இளவரசி குழந்தையாகவே பாவித்து வந்த சங்கில் தாய்பாலை ஊற்றி பிறந்த குழந்தைக்கு கொடுக்கிறார்கள். குழந்தையை தொட்டிலில் போடும் நாளான்று, வந்திருந்த உறவினர்களெல்லாம் ஒன்றுகூடி, ("சங்கு" என்றால் தெலுங்கில் "ஸங்கம்" என்று பொருள்) சங்கிலிருந்து தோன்றியவன் என்பதால் "சங்கமுத்து" என்ற நாமம் சூட்டி, தங்கள் குல வழக்கப்படி மூன்றுமுறை சங்கமுத்து என்று நாமத்தைச் சொல்லி குழந்தையை தொட்டிலில் கிடத்தினர். எல்லோரும் ஒன்றாய்க்கூடி மகிழ்ந்திருந்த வேளையில், தன்னிடம் தளபதியாய் வந்துசேர்ந்த இளவரசனின் சகோதரனுக்கு தனது மகளை திருமணம் செய்துவித்து, ஆட்சி செய்ய சிலபகுதிகளையும் வழங்குவதாக ஹொய்சாள மன்னனிடமிருந்து செய்தி வந்து சேர்கிறது.
சங்கமுத்து பிறந்தநேரம் மீண்டும் தங்கள் ஆள்வதற்கு நாடுகிடைத்ததை எண்ணி சந்தோசப்படும் "மத்தரசலு குல" மக்கள், தங்கள் குலத்தைக்காக்க பெருமாளே சங்கமுத்துவாக அவதாரம் எடுத்ததாக நம்பி மகிழ்ந்தனர். இதன்பிறகு பெருமாளை "சங்கமுத்து பெருமாளாக" மத்தரசலு குலத்தினர் வழிபடத்தொடங்கினர்.
தன்குலத்திற்கு வாரிசு வழங்கிய மண்ணை விட்டு போக விரும்பாத இளவரசனும், இளவரசியும் சங்கமுத்துவோடு இங்கேயே தங்கிவிடுகின்றனர். அப்பகுதி "ஊஞ்சல் வேலம் பட்டி" என்றும், பின்னாளில் ஊஞ்சவேலம்பட்டி என்று மருவி அழைக்கப்படுகிறது. இவனது சகோதரன் ஹொய்சாள மன்னன் அளித்த பகுதியை அந்நாட்டு இளவரசியை மணந்துகொண்டு ஆட்சி செய்து வருகிறான். அப்பகுதியே "ஆச்சிபட்டி" என்றழைக்கப்படுகிறது. அதிலிருந்து ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை ஒன்றுகூடும் "மத்தரசலு" குல சகோதரர்கள், தங்கள் மூத்த சகோதரனிடம் ஆசிபெற்று, சங்கமுத்து -வை பார்த்துச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.
பொள்ளாச்சி-பழனி சாலையில் அமைந்துள்ள ஊஞ்சவேலம்பட்டியில் உள்ள மத்தரசலு குல தெய்வகோவில் கம்பிளி தேசத்திலிருந்து வந்த இளவரசிக்கு கனவில் தோன்றிய “பெருமாள்” ரூபத்தில் "சங்கமுத்து பெருமாளாக" அருள்பாலித்துக்கொண்டுள்ளார். சுமார் எழுநூறு, எட்நூறு வருடங்களுக்கு முன்பே பொள்ளாச்சி பகுதியில் குடியேறிய மத்தரசலு குலத்தினர், தற்போது சிலநூறு குடும்பத்தைச் சேர்ந்தவர்களே வசிக்கின்றனர். பொள்ளாச்சி பகுதி தவிர, இவர்களோடு வந்து பல்வேறு பகுதிகளில் தங்கிவிட்ட பங்காளிகள் பிற்காலத்தில் கொண்டுலு, கொண்டிமத்தலு, கெவுடுலு, உடும்பு மத்தலு என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். காலப்போக்கில் போக்குவரத்து வசதில்லாத காரணத்தால் ஆங்காங்கே ”நடுகல்" நட்டு பெருமாளை தங்கள் குலதெய்வமாக வணங்கிவருகின்றனர்.
ஆச்சிபட்டி வம்சம் விஜயநகர பேரரசு காலத்தில் பாளையமாகவும், பெண்வழி வாரிசுகள் மூலம் ஆட்சி மாறுகையில் இராமபட்டணம் கிராமத்திற்கும் மாறியதாக தெரிய வருகிறது. இவர்களின் கொடி வழி தொடர்புகள் தெலுங்கில் பாடப்படும் சாலி பாடல்கள், செவிவழி செய்திகளை, தற்காலத்தில் வெளிவந்த சில கல்வெட்டு ஆவணங்கள் உறுதி செய்கிறது. இப்போதும் கொங்கு மண்டலத்தில் வசிக்கும் கொண்டுலு, உடும்புலு, கெவுடுலு குலத்தைச் சேர்ந்த வயது முதிர்ந்தவர்கள், மத்தரசலு குலத்தினரை தங்களின் மூத்த அண்ணன் வம்சமாக சொல்வதை கேட்க முடிகிறது. (ஆண்டுதோரும் கம்பளத்தார்கள் வசிக்கும் கிராமங்களில் இல்லந்தோறும் சென்று, தட்டில் வெற்றிலை பாக்கு வைத்து , மணியாட்டிக்கொண்டே தெலுங்கிலுள்ள சாலி பாடல்களை பாடும் ஒரு பிரிவினர் தொண்டாமுத்தூர் பகுதியில் வசிக்கின்றனர் என்று தெரியவருகிறது).
தற்போதும் கொங்குமண்டலத்தைச் சேர்ந்த கொண்டுலு, கெவுடுலு குலத்தைச் சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதிகள், திருமண தடை மற்றும் தீராத பிரச்சினை உள்ளவர்கள் விவரமறிந்த வயதானவர்கள் சொல்லக்கேட்டு ஊஞ்சவேலம்பட்டியில் குடிகொண்டுள்ள ஆதிபெருமாளான "சங்கமுத்து பெருமாளை" வழிபட்டு செல்கின்றனர். அதிகம் பேசப்படாததான இக்கோவிலின் சிறப்பு அம்சங்கள் மத்தரசலு குலத்தைச் சேர்ந்தவர்களுக்கே சரிவர தெரியவில்லை என்பது வேதனையானதாக இருந்தாலும், பல நூறாண்டுகளுக்குப் பிறகு தன்னை புதுப்பித்துக்கொண்டு, தன்னை நாடி வந்தோருக்கு நல்லருள் புரிந்துகொண்டுள்ளார் சங்கமுத்து பெருமாள்.
சகல வரம்தரும் “சங்கமுத்து” பெருமாளை வணங்கி சௌபாக்கியமாய் வாழ வாழ்த்துகிறோம்.

