🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சீமான்களின் விளையாட்டில் சாம்பியன் பட்டம் வென்ற சாமானியன்!

வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்க ஆலோசகரும், பர்பிள் கிளப் நன்கொடையாளரும், தொழிலதிபருமான திரு.எ.துரைசாமி அவர்கள் மாநில அளவிலான கோல்ஃப் விளையாட்டில் சாம்பியன் பட்டம் வென்றார். இதனைத்தொடர்ந்து சமுதாயத் தலைவர்கள் பலரும் துரைசாமி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுபற்றிய முழுவிவரம் வருமாறு,


நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அருகேயுள்ள பெரியூரைச் சேர்ந்தவர் திரு.எ.துரைசாமி. இயந்திரவியல் துறை பொறியியல் பட்டதாரியான இவர், உள் மற்றும் வெளிநாடுகளிலுள்ள கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் அதுசார்ந்த துணை நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப உதவி மற்றும் ஆலோசனை வழங்கும் நிறுவனத்தை சென்னையில் நடத்தி வருகிறார். வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்திற்காக 2012-13 காலகட்டத்தில் ரூபாய் இரண்டு லட்சம் நன்கொடைவழங்கி "கட்டபொம்மன் பர்பிள் கிளப்" உருவாக  விதை போட்டவர் திரு.துரைசாமி.


இவர் சர்வதேச சொகுசுக்கார் சந்தையில் முன்னனி நிறுவனமான, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஜெர்மன் நாட்டின் மெர்சிடிஸ் - பென்ஸ் (Mercedes - Benz) நிறுவனத் தயாரிப்பு சொகுசுக்காரை கடந்த பதினைந்து ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறார். ' செல்வச்சீமான்கள்' வீட்டு விளையாட்டான 'கொல்ஃப்' பெருங்குளிர் பிரதேசமான ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மேற்கத்திய நாடுகளில் பரந்து விரிந்த புல்வெளி மைதானங்களில் பிரபல நடிகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பெரும் செல்வந்தர்களால் விளையாடப்படுகிறது. 


இப்பின்னனியில் மெர்சிடிஸ் - பென்ஸ் நிறுவனம், சர்வதேச அளவிலுள்ள தனது வாடிக்கையாளர்களை ஒருங்கிணைத்து முதற்கட்டமாக அந்தந்த நாடுகளில் "கோல்ஃப்" விளையாட்டுப் போட்டிகளைப் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது. ஒவ்வொருநாட்டிலும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப மாகாண அளவில் இப்போட்டிகளை நடத்துகிறது. தொடக்க சுற்றுகளில் சுமார் 60000 முதல் 70000 பேர் வரை பங்கேற்கும் இப்போட்டி, தமிழக அளவில்  மெர்சிடஸ் - பென்ஸ் 25வது வருட  கோல்ஃப் விளையாட்டுப் போட்டி (Mercedes Benz 25th year Golf Tournament) தலைநகர் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. நேற்று முன்தினம் (04.02.2026) நடைபெற்ற இறுதிச்சுற்றுப் போட்டியில் 'Mercedes Benz 25th year Golf Tournament Winner in Category B State Level' பிரிவில் திரு.எ.துரைசாமி அவர்கள் அதிக புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றார்.


இதனைத்தொடர்ந்து, மாகாண அளவிலான சாம்பியன்களை ஒன்றிணைந்து, இந்தியாவில் மெர்சிடிஸ் - பென்ஸ் கார் உற்பத்திச்சாலை அமைந்துள்ள, மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் பிரபல 'ஆக்ஸ்போர்டு கோல்ஃப் ரிசார்ட்' கோல்ஃப் மைதானத்தில்  'தேசிய அளவிலான கோல்ஃப் சாம்பியன்' போட்டி நடைபெறவுள்ளது. இதில் வெற்றிபெருபவர்கள் மெர்சிடிஸ் - பென்ஸ் தலைமையகம் அமைந்துள்ள ஜெர்மனி நாட்டின் ஸ்டட்கார்ட் (Stuttgart) நகரில் நடைபெறும் 'சர்வதேச அளவிலான' இறுதிச்சுற்றுப் போட்டியில் பங்கேற்பர் என்பது குறிப்பிடத்தக்கது.


நமது இராஜகம்பள  சமுதாயத்தின் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து முதல்தலைமுறை பட்டதாரியாக மட்டுமல்ல, முதல் தலைமுறை தொழில்முனைவோராக, சர்வேத நிறுவனங்களோடு போட்டிபோட வேண்டிய 'பெட்ரோல் & எரிவாயுத்துறை' யில் போட்டியிட்டு வெற்றிவாகைசூடிய திரு.எ.துரைசாமி அவர்கள், செல்வச்சீமான்கள் நிறைந்த கோல்ஃப் கிளப்பில் உறுப்பினராக நுழைந்து, பிரபல ஜாம்பவான்களோடு மோதி, மாநில அளவில் வெற்றிக்கொடி நாட்டியமைக்காக, நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளைத் தலைவர் மு.பழனிச்சாமி, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் செ.இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தொழிலும் மட்டுமல்ல விளையாட்டிலும் சர்வதேச அளவில் சாதிக்க நாமும் வாழ்த்துவோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved