தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• மாணவர்களின் குரலாய் நாடாளுமன்றத்தில் ஒலித்த துரை வைகோ, சு. வெங்கடேசன்! • எம்.ஜி.ஆர். பாதையா? விஜயின் புதிய அரசியல் பிராண்டிங்கா? - பகுதி 2 • எம்ஜிஆரைப் பின்தொடர்கிறாரா விஜய்? – உலக அரசியல் வரலாறும் விஜயின் அரசியல் பயணமும் | பகுதி – 1 • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • மாணவர்களின் குரலாய் நாடாளுமன்றத்தில் ஒலித்த துரை வைகோ, சு. வெங்கடேசன்! • எம்.ஜி.ஆர். பாதையா? விஜயின் புதிய அரசியல் பிராண்டிங்கா? - பகுதி 2 • எம்ஜிஆரைப் பின்தொடர்கிறாரா விஜய்? – உலக அரசியல் வரலாறும் விஜயின் அரசியல் பயணமும் | பகுதி – 1 • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம்
விளம்பரங்கள்
மாணவர்களின் குரலாய் நாடாளுமன்றத்தில் ஒலித்த துரை வைகோ, சு. வெங்கடேசன்!

மாணவர்களின் குரலாய் நாடாளுமன்றத்தில் ஒலித்த துரை வைகோ, சு. வெங்கடேசன்!

Admin 30 Jul 2026 | 02:26 PM
பகிர்:

ஜந்தர் மந்தரிலிருந்து மக்களவைக்கு… மாணவர் எழுச்சி எழுதிய புதிய ஜனநாயக வரலாறு!

"இளைதாக முள்மரம் கொல்க; களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து." — திருக்குறள்

தொடக்கத்திலேயே தவறுகளைத் தடுத்து நிறுத்தத் தவறினால், பின்னர் அவை சமுதாயத்தையே காயப்படுத்தும் என்பதே வள்ளுவரின் இந்தக் குறளின் பொருள். கல்வி அமைப்பில் தொடர்ந்து நிகழ்ந்த வினாத்தாள் கசிவுகளும், தேர்வு முறைகேடுகளும், அந்த எச்சரிக்கையைப் புறக்கணித்ததன் விளைவாக இன்று நாட்டின் மிகப்பெரிய அரசியல் விவாதமாக வெடித்துள்ளன.

டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் தொடங்கிய போராட்டம், ஒரு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைத் தாண்டியது. அது இந்திய ஜனநாயகத்தின் இதயத்தில் எழுப்பப்பட்ட அடிப்படைக் கேள்வி—"நேர்மையாக உழைத்த மாணவனின் கனவுக்கு இந்த நாடு நீதியளிக்கிறதா?"—என்ற கேள்வியாக மாறியது.

அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். அதனைத் தொடர்ந்து, பொதுத்தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்கும் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது.

இந்த விவாதத்தில் தமிழ்நாட்டின் குரலாக ஒலித்தவர்கள் மறுமலர்ச்சி திமுகவைச் சேர்ந்த துரை வைகோவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு. வெங்கடேசனும். அவர்களின் உரைகள் வெறும் எதிர்க்கட்சியின் விமர்சனங்களல்ல; கல்வி, சமூகநீதி, ஜனநாயகம் ஆகிய மூன்றின் உறவை மீண்டும் நினைவூட்டிய வரலாற்றுப் பதிவுகள்.

மாணவர்களின் கண்ணீருக்கு மொழி கொடுத்த துரை வைகோ

"யாதும் ஊரே; யாவரும் கேளிர்." — புறநானூறு, கணியன் பூங்குன்றனார்

ஒரு மாநிலத்தின் பிரச்சினை அல்ல; ஒரு தலைமுறையின் வேதனைதான் இது என்பதை துரை வைகோவின் உரை தெளிவுபடுத்தியது.

மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞர் ஆக வேண்டும் என்று ஆண்டுகளாக உழைத்த மாணவர்களின் கனவு, ஒரே ஒரு வினாத்தாள் கசிவால் சிதைந்து போகிறது. அதைவிட பெரிய அநீதி கல்வியில் இருக்க முடியுமா என்ற கேள்வியை அவர் எழுப்பினார்.

"சட்டங்கள் இல்லை என்பதல்ல பிரச்சினை; அவற்றை நடைமுறைப்படுத்த அரசியல் மனவுறுதி இல்லை" என்ற அவரது கருத்து, மசோதா விவாதத்தின் மையமாக அமைந்தது.

கடந்த பத்து ஆண்டுகளில் 152 முறை வினாத்தாள் கசிவுகள் நடைபெற்றுள்ளன. ராதாகிருஷ்ணன் குழுவின் 101 பரிந்துரைகள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. ஒவ்வொரு முறையும் குழுக்கள் அமைக்கப்படுகின்றன; அறிக்கைகள் தாக்கல் செய்யப்படுகின்றன; ஆனால் மாணவர்களின் வாழ்க்கை மட்டும் தொடர்ந்து சோதனைக்குள்ளாகிறது என்ற அவரது வாதம் நிர்வாகத்தின் தோல்வியை வெளிச்சமிட்டுக் காட்டியது.

அவரது உரையின் உச்சமாக அமைந்தது "கரப்பான் பூச்சிகள்" என்ற உருவகத்தின் மறுபரிசீலனை. மாணவர்களை இழிவுபடுத்தப் பயன்படுத்தப்பட்ட அந்தச் சொல்லையே அவர் எதிர்ப்பின் பெருமைச் சின்னமாக மாற்றினார். கரப்பான் பூச்சிகள் எத்தகைய பேரிடரையும் தாங்கி உயிர்வாழும் வியத்தகு ஆற்றல் கொண்டவை, விண்கற்களாலும்,  சிறுகோள்களாலும் அழிக்க முடியாதவை, அணு வெடிப்புக்குப் பிறகும் அவை உயிர்வாழும் திறன் கொண்டவை. என்ற அறிவியல் உண்மையை எடுத்துக்காட்டி, அதேபோல் கண்ணீர்ப் புகைக் குண்டுகளாலும், தடியடிகளாலும், பெல்லட் துப்பாக்கிகளாலும் அடக்க முடியாத தலைமுறையாக ஜென் Z மாணவர்கள் உருவெடுத்துள்ளனர் என்று அவர் கூறியது, அவரது உரைக்கு இலக்கியத் தன்மையையும் அரசியல் ஆழத்தையும் ஒருசேர வழங்கியது.

சு. வெங்கடேசன்: சட்டத்தைத் தாண்டி அரசியலைக் கேள்விக்குட்படுத்திய உரை

"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக." — திருக்குறள்

கல்வி என்பது மதிப்பெண் பெறும் இயந்திரமல்ல; மனிதனை உருவாக்கும் செயல்முறை. அந்த அடிப்படைக் கருத்திலிருந்தே சு. வெங்கடேசனின் உரை தொடங்கியது.

ஜூலை 19ஆம் தேதி நள்ளிரவு உலக இளைஞர்கள் உலகக்கோப்பை கால்பந்தாட்டத்தைப் ரசித்து பார்த்து முடித்து நான்கு மணி நேரத்துக்குப் பிறகு, இந்திய இளைஞர்களும் மாணவர்களும் ஜந்தர் மந்தரிலே இருந்து தங்களது ஆட்டத்தைத் தொடங்கினார்கள்.

"பாலில் எறும்பு விழுந்தால் எடுத்துவிட்டு குடிக்கலாம்; விஷத்தில் எறும்பு விழுந்தால் குடித்தால் என்ன? குடிக்கவில்லை என்றால் என்ன?" என்ற அவரது உவமை, இந்த விவாதத்தை சூடேற்றுவதாக அமைந்தது.

நீட் என்பது தேர்வல்ல, அது ஒரு தொழில். இன்றைக்கு அதனுடைய சந்தை மதிப்பு 60 ஆயிரம் கோடி; இன்னும் சில வருடங்களில் ஏறக்குறைய ஒரு லட்சம் கோடி. கோச்சிங் மாபியாக்களின் புகழிடமாகத் தேசிய தேர்வு முகமை மாறியிருக்கிறது என்ற அவரது பேச்சு நீட் தேர்வின் பின்னணியில் உள்ள சந்தையை அம்பலப்படுத்தியது.

முறைகேடுகளைத் தடுக்கும் சட்டம் வந்தாலும், அவரது பார்வையில் நீட் தேர்வே சமூக சமத்துவத்தைச் சிதைக்கும் அமைப்பாக இருக்கும்போது, சட்டத் திருத்தம் மட்டும் போதாது என்பதே அவரது வாதம்.

நீதியரசர் ஏ. கே. ராஜன் குழுவின் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி, நீட் அறிமுகத்திற்குப் பிறகு கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்புகள் குறைந்ததையும், மாநிலப் பாடத்திட்ட மாணவர்களின் பிரதிநிதித்துவம் சுருங்கியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

“2010ஆம் ஆண்டு நீட் அறிமுகமாவதற்கு முன்பு மாநிலப் பள்ளிக்கல்வித் திட்டத்தில் இருந்து மருத்துவக் கல்விக்குச் சேர்ந்த மாணவர்கள் 2,330 பேர். சி.பி.எஸ்.இ.-லிருந்து மருத்துவக் கல்விக்குச் சேர்ந்த மாணவர்கள் வெறும் 14 பேர்தான். ஆனால், நீட் அறிமுகமான பிறகு, 2020இல் சி.பி.எஸ்.இ.-யிலிருந்து மருத்துவக் கல்விக்குச் சேர்ந்தவர்கள் 1,604 பேர். நீட் அறிமுகமாவதற்கு முன்பு கிராமப்புற மாணவர்கள் 65% பேர் மருத்துவக் கல்லூரிக்குப் போனார்கள்; இப்பொழுது வெறும் 49%ஆக அது குறைந்திருக்கிறது.” என்ற புள்ளி விவரம் நீட் தேர்வு யாருக்கானது என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டினார்.

அவரது உரையின் மற்றொரு வலிமை, போராட்டத்தின் அரசியல் பரிமாணத்தை வெளிப்படுத்தியதில்தான் இருந்தது. "இது நிர்வாகப் பிரச்சினை அல்ல; அரசியல் கேள்வி" என்ற அவரது வரி, விவாதத்தின் திசையை மாற்றியது.

ஜந்தர் மந்தர்: புதிய தலைமுறையின் விடுதலைச் சின்னம்

பாரதியார் எழுதியுள்ளார்:

"அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே."

இந்த வரிகள் சுதந்திரப் போராட்டக் காலத்திற்காக எழுதப்பட்டவை என்றாலும், ஜந்தர் மந்தரில் நின்ற மாணவர்களின் மனநிலையையும் அதே அளவுக்கு பிரதிபலிக்கின்றன.

39 நாட்கள் நடைபெற்ற போராட்டம், ஒரு அமைச்சரின் ராஜினாமாவை மட்டும் ஏற்படுத்தவில்லை. அதிகாரம் மக்களின் குரலை எப்போதும் புறக்கணிக்க முடியாது என்பதை மீண்டும் நிரூபித்தது.

வரலாற்றில் பல மாற்றங்கள் ஆயுதங்களால் நிகழவில்லை; இளைஞர்களின் மனஉறுதியால் நிகழ்ந்துள்ளன. இந்திய விடுதலைப் போராட்டத்தில் மாணவர்கள் தெருக்களில் இறங்கியபோதும் அதுதான் நடந்தது. ஜே.பி. இயக்கத்திலும் அதுதான் நடந்தது. இன்று ஜந்தர் மந்தரிலும் அதே வரலாறு புதிய வடிவில் மீண்டும் எழுதப்பட்டது.

கல்வி: அதிகாரத்தின் கருவியா? சமத்துவத்தின் பாலமா?

டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் அழைப்பு இன்று மீண்டும் நினைவுக்கு வருகிறது:

"கல்வி கற்போம்; போராடுவோம்; ஒழுங்குபடுவோம்."

கல்வி என்பது வெறும் வேலைவாய்ப்புக்கான பாதை அல்ல; சமூக நீதிக்கான ஆயுதம். அந்த ஆயுதமே சந்தைமயமாக்கப்பட்டால், அதனால் முதலில் பாதிக்கப்படுபவர்கள் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்கள்தான்.

எனவே, தேர்வு முறையின் நம்பகத்தன்மையை மீட்டெடுப்பது மட்டுமல்ல; கல்வியில் சம வாய்ப்பை உறுதி செய்வதும் அரசின் அடிப்படைப் பொறுப்பாகும்.

ஜனநாயகம் இன்னும் உயிருடன் இருப்பதை நிரூபித்த நாள்

அறிஞர் அண்ணா ஒருமுறை கூறினார்:

"மக்கள் குரலே மகேசன் குரல்."

அந்த மக்களின் குரல், ஜூலை 25 அன்று நாடாளுமன்றத்தை அடைந்தது.

அது ஒரு அமைச்சரின் ராஜினாமா செய்த நாள் மட்டுமல்ல.

அது அதிகாரம் அகந்தையிலிருந்து இறங்கிய நாள்.

அது மாணவர்களின் குரல் ஆட்சியைக் கேட்க வைத்த நாள்.

அது உண்மை பொய்யை வென்ற நாள்.

அது ஜனநாயகம் அதிகாரத் திமிரை வென்ற நாள்.

அது இளைஞர் இயக்கம் வரலாற்றை எழுத முடியும் என்பதை நிரூபித்த நாள்.

நிறைவாக…

பாரதிதாசனின் வரிகள் இந்தச்சூழலுக்கு மிகவும் பொருத்தமானவை:

"புதியதோர் உலகம் செய்வோம்;
கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்."

கல்வி சமத்துவமாக இருக்கும் இந்தியாவே அந்த "புதிய உலகம்". அந்த உலகத்தை உருவாக்க வேண்டுமெனில், சட்டங்கள் மட்டுமல்ல; அரசியல் நேர்மையும், நிர்வாகப் பொறுப்புணர்வும், மாணவர்களின் குரலுக்கான மரியாதையும் தேவை.

துரை வைகோவும் சு. வெங்கடேசனும் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகள், கட்சி அரசியலைத் தாண்டி ஒரு தலைமுறையின் மனநிலையைப் பதிவு செய்த ஆவணங்களாக நிலைத்திருக்கும்.

ஏனெனில், வரலாறு எப்போதும் அதிகாரம் எழுதிய பதிவுகளை மட்டுமல்ல, அநீதிக்கு எதிராக எழுந்த குரல்களையும் நினைவில் வைத்திருக்கும்.

இளைஞர்களுக்கு வீர வணக்கம்!

ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் மாணவர் எழுச்சிக்கு வீர வணக்கம்!

குறிச்சொற்கள்

அரசியல் தமிழ்நாடு durai vaiko su.venkatesan neet scam Student Protest hottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண