🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கவர்னர் பதவியும்! கம்பளத்தார் வீட்டு கைராசியும்!

பாஞ்சையில் அமைந்துள்ள மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை, கயத்தாறில் அமைந்துள்ள நினைவு மண்டபம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள மாவீரன் சிலைக்கு மரியாதை செய்தால் அரசியல்வாதிகள் வகிக்கும் பதவிக்கு ஆபத்து என்ற விஷமக்கருத்தை அரசியல் வட்டாரங்களில் சிலர் திட்டமிட்டு பரப்பிவைத்து, மூடநம்பிக்கைக்கு எதிராக திராவிடம், பெரியாரியம், அம்பேத்காரியம் பேசுபவர்களின் மனங்களில் கூட அச்சத்தை ஏற்படுத்தி இன்றுவரை அங்குவராமல் பார்த்துக்கொள்கின்றனர். ஆனால் கம்பளத்தார்கள் அரசியல் கவனம் பெற்றுவிடக்கூடாது என்ற தீய எண்ணத்தில் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டுள்ள சதி என்பது பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்தபின் துணைகுடியரசுத்தலைவர் பதவிவரை உயர்ந்த வெங்கையாநாயுடு அவர்களே சாட்சி.


உண்மையாக கட்டபொம்மன் மீது பற்றாகவும், கம்பளத்தாரோடு உற்றார் உறவினர் போல் நெருங்கிய தொடர்பில் இருந்த பல தலைவர்கள் குறிப்பாக காமராஜர், தங்கபாண்டியன், காதர்பாட்ஷா (எ) வெள்ளைச்சாமி, வைகோ, கே.கே.எஸ்.எஸ்.ஆர், தங்கப்பாண்டியன், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, சக்கரபாணி, ஜோதிமணி, விஜயபாஸ்கர், செந்தில்பாலாஜி என பலர் அரசியலில் அசைக்கமுடியாத சக்திகளாக இருந்து வருகின்றனர் என்பதே நிதர்சனம்.


அந்த வரிசையில் கம்பளத்தார் இல்லம் வந்துசென்ற பலர் இன்று கவர்னராக பதவி வகிக்கின்றனர் என்ற சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. திருப்பூர் பாரப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரத்தினசாமி. 13-வயது சிறுவனாக இருந்தபொழுது பாஜக மூத்த தலைவர் அத்வானி அவர்கள் மேற்கொண்ட ரதயாத்திரை பயணத்தால் கவரப்பட்டு பாஜக-வில் ஈடுபாடுகொண்டார். அன்று முதல் இன்றுவரை கட்சியின் தீவிர விசுவாசியாக பல்வேறு பொறுப்புகளில் இருந்துவருகிறார் ரத்தினசாமி. இந்நிலையில் கட்சி பெரிய அளவில் வளராத 90-களில் இருந்து பாஜக-வின் பல முன்னனி தலைவர்களோடு ரத்தினசாமி நெருக்கமாக இருந்துள்ளார். இந்த நட்பின் அடிப்படையில் கோவை வரும் பெரும்பாலான பாஜக தலைவர்களை தனது திருப்பூர் இல்லத்திற்கு அழைத்துவந்து விருந்தோம்பல் செய்வது வழக்கம்.


முதன்முதலில் ரத்தினசாமி இல்லம் வந்து சென்ற கேரளாவைச்சேர்ந்த மூத்த பாஜக தலைவர் ஓ.ராஜகோபாலுக்கு மத்திய அமைச்சராகும் யோகம் கிட்டியது. அதேபோல் தமிழகத்தைச் சேர்ந்த திருமதி.தமிழிசை, இல.கணேசன் வரிசையில் தற்போது சி.பி.இராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் 2000-வது ஆண்டு நடைபெற்ற ரத்தினசாமி திருமணத்திற்கு அன்றைய மத்திய அமைச்சராக இருந்து வாழ்த்திய வெங்கைய நாயுடு துணைஜனாதிபதி அளவுக்கு உயர்ந்தார். தன் இல்லம் வரும் அனைத்து தலைவர்களையும் சாலையின் முகப்பில் (பாரப்பாளையம்) அமைந்துள்ள மாவீரன் கட்டபொம்மன் சிலைக்கு அழைத்துச்சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்த வைப்பது வாடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப காலம்தொட்டு நல்ல நட்புறவோடு இருந்துவரும் சி.பி.இராதாகிருஷ்ணன் அவர்கள் ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ள ரத்தினசாமி, பாரப்பாளையத்தில் அமைந்துள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்த தலைவர்கள் உயர்ந்த இடத்திற்கு வருவது கட்டபொம்மனாரின் தியாகத்திற்கு கிடைத்த சிறப்பு என்றார். இதில் இன்னொரு கூடுதல் தகவல் என்னவெனில், தன் இல்லம் வருகைதர இருந்த ஒருசில விரல்விட்டு எண்ணக்கூடிய தலைவர்கள், தவிர்க்கமுடியாத காரணங்களால் மிக அருகில் வந்து திரும்பியதுண்டு. தற்செயலாக இது நடைபெற்றிருந்தாலும் அவர்களுக்கு இன்னும் சரியான பதவிகள் கிடைக்காமல் உள்ளது வியப்பாக இருப்பதாக தெரிவித்தார்.   

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved