மக்களுக்கு வாக்குறுதியளித்து விட்டு இப்போது வாய்ப்பில்லை என்றால் எப்படி முதல்வரே சரியாகும்?
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 68 டிஎன்டி சமூகங்களின் மனம் திறந்த மடல்!
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவரான தாங்கள் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி பரப்புரைக்கூட்டத்தில் பேசும்போது, எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு 68 சாதிகளை உள்ளடக்கிய சீர்மரபினர் சமூகங்களுக்கு DNT/DNC என்று இரட்டை சாதிச்சான்று வழங்கிவரும் இழிவை திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்ததும் சரிசெய்து DNT ஒற்றை சான்று வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தீர்கள்.
ஆனால் ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் தங்களின் வாக்குறுதியை நினைவூட்டும் வகையில் அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர்கள், அரசுத்துறை செயலாளர்கள் வாயிலாக எங்கள் கோரிக்கைகளை மனுவாக பலமுறை அளித்தும் எதுவும் தெரியாததுபோல் கள்ள மெளனம் காக்கின்றீர்கள். தங்களை பலமுறை சந்திக்க முயன்றும் அனுமதி கிடைக்காமல் கடந்த மூன்றாண்டுகளாக அவதியுற்று வருகிறோம். ஆனால் எங்கள் கருத்துக்களை கேட்க செவி கொடுக்கத் தயாராக இல்லாத தாங்கள் அதிகாரிகளின் பொய்மூட்டைகளை வேதவாக்காக நம்புகின்றீர்கள்.
சட்டம் 45/1994ல் DNC என்று பயன்படுத்தப்பட்டுள்ளதால் அச்சட்டத்தை திருத்தித்தான் DNT வழங்க முடியும் ,இப்போதைக்கு திருத்த முடியாது, வழக்கு முடியவும் வழங்கலாம் என்று ஆலோசனை வழங்கிவிட்டனர் என்று சப்பைக்கட்டு கட்டுகின்றீர்கள். இதனால் நீங்களும் உங்கள் கட்சியும் அதிகாரிகளின் தவறான ஆலோசனையால் மக்களிடமிருந்து எப்படி அன்னியப்பட்டுக்கொண்டுருக்கின்றீர்கள் என்பதை உங்கள் பார்வைக்காக சமர்ப்பிக்கின்றோம்.
1. 2018ல் அதுல்யா மிஸ்ரா IAS தலைமையில் 4 IAS அதிகாரிகள் குழு DNT பெயர் மாற்றத்திற்கு சட்டத்தை திருத்த வேண்டிய அவசியமில்லை 69% இடஒதுக்கீடு நீதிமன்ற வழக்கிற்கும் இக்கோரிக்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அரசாணை மூலமே பெயர் மாற்றம் செய்துகொள்ளலாம் என்று பரிந்துரை செய்து அதன் அடிப்படையில் 8.3.2019ல் DNTயை DNCயாக மாற்றிய அரசாணையை திரும்பப்பெறப்பட்டது. இருப்பினும் பத்தி 4ல் இழிவான இரட்டைச்சான்று வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்போது மீண்டும் அதிகாரிகள் அதே பல்லவியைப் பாடுவது அரசை தவறாக வழிநடத்தும் நோக்கம் கொண்டது.
2. சட்டம் 45/1994 பிரிவு 7 அரசு அரசாணை மூலமே அவ்வப்போது சமூகங்களை வகைப்பாடும், உள் வகைப்பாடு (Govt can by notification classify or sub classify BC citizens for the purpose of this Act) செய்துகொள்ளலாம் என்று தெளிவாக உள்ளது. அதன்படி DNC பிரிவினர் இனிமேல் DNT என்று MBC பிரிவில் இருப்பர் என்று அரசாணை போட முழு அதிகாரமுள்ளது. உண்மையில், இதே அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்து இந்த பிரிவு மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது என்று கூறிவிட்டு, இப்போது முதல்வருக்கு அதிகாரம் இல்லை என்று கூறுவதை முதல்வர் ஏற்கின்றீர்கள் என்றால் இது யாரை ஏமாற்றும் செயல் என்பதை முதல்வர் உணரவேண்டும். ஆனால் எம்மக்கள் உணர்ந்துவிட்டார்கள்.
3. மேலும் 1979ல் அநீதியாக DNT செய்த பெயர் மாற்ற அரசாணை 1310-ஐ 1.2.1980ல் அரசாணை 72ன் மூலம் திரும்பப் பெறப்பட்டுவிட்டது. 1994 சட்டத்தில் DNC என்று குறிப்பிட்டிருப்பது பெரும்பிழை. அதனால் அச்சட்டத்தின் வரையறை சரத்து 3ன் துவக்கத்திலேயே சந்தர்ப்பம் தேவைப்பட்டாலே ஒழிய BC என்றார் யார் என்றும், அதில் MBCயும் DNCயும் அடங்கும் என்று குறிப்பிட்டுள்ளது (in this act, unless otherwise context refers). எனவே DNTயை தவறுதலாக DNC என்று பயன்படுத்தியுள்ளதால் இப்போது அரசாணைமூலம் DNT என்று படித்துக்கொள்ள சட்டம் அனுமதிக்கும்போது. உங்கள் அதிகாரிகள் மட்டும் முடியாது என்பது எம்மக்களை ஏமாற்றும் செயல்.
4.அநீதியின் உச்சமாக அதே சரத்தில் BC, MBC, DNC மட்டும்தான் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அச்சட்டத்தை திருத்தாமல் இஸ்லாமியர்களுக்கு மட்டும் BCM புதுப்பெயரை அதே ஆணையமும், அதே அதிகாரிகளும் அதே வழக்கு நிலுவையில் இருக்கும் போது, அதே சட்டத்தின் சரத்து 3(a) வை குறிப்பிட்டு மதம் மாறிய இஸ்லாமியர் இஷ்டம்போல் 7 இஸ்லாம் பிரிவில் எதில் வேண்டுமானாலும் சாதிச்சான்று வாங்கிக்கொள்ளலாம் என்று கடந்த சனிக்கிழமை 9.3.2024ல் அன்று அரசாணை 31 மூலம் வழங்கியிருக்கின்றீர்கள். ஆனால் 68 திராவிட சமூக மக்களை மட்டும் தவிக்கவிட்டுள்ளீர்கள்.
உங்களுக்கு திராவிடர்கள் மீது உண்மையான பற்று இருந்தால், நீங்கள் அம்மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதியை உடனே நிறைவேற்றுங்கள். அரசாணை 26 நாள் 8.9.2019ல் பத்தி 4லைத் திருத்தி ஒரே DNT சான்று வழங்க அரசாணை வெளியிடுங்கள். அது சட்டப்படி சரியா? தவறா? என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கட்டும். மக்களுக்கு தாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொறுப்பு உங்களுடையது தானே தவிர அதிகாரிகள் அல்ல. கொள்கை முடிவை எடுக்க வேண்டியது முதல்வரே. இதில் நீதிமன்றங்கள் தலையிடாது. தேர்தல் அறிவிப்பு வரும்வரை திராவிட மக்களுக்கான நீதி வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையோடு 68 சமூக DNT மக்கள் காத்திருக்கின்றோம். தமிழக முதல்வருக்கு ஒன்றை மட்டும் உணர்த்த விரும்புகிறோம் 2024 போல் 2026 தேர்தல்களம் இருக்காது. அன்று இந்த அதிகாரிகள் துணைநிற்கமாட்டார்கள்.
இவண்,
சீர்மரபினர் நலச்சங்கம்,
தமிழ்நாடு

