மனித மூளையில் எவ்வளவு தகவல்களைப் பதிவு செய்ய முடியும்?
உங்கள் கணினியில் இருக்கும் வன்தட்டு நிலை நினைவகத்தில், அதாவது Hard Disc-இல் எத்தனை Terabyte பதிவு செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
500 gigabyte? 1 TB? 2 TB அல்லது 4 TB?, தற்போது தனிப்பட்ட பாவனைக்கு என்று அமைக்கப்பட்ட கணினிகளில் பொதுவாக 1-4 TB தான் இருக்கும். சரி, உங்கள் கணினி பற்றி இப்படி நன்றாகத் தெரிந்து வைத்திருக்கின்றீர்களே, ஆனால் உண்மை சொல்லப் போனால் உங்கள் மூளையும் ஒரு விதமான Hard Disc தானே? அதில், நமது சிறு வயதில் இருந்து இன்று வரை எவ்வளவோ விஷயங்களைப் பதிவு செய்து வைத்திருக்கிறோம். எனவே, மூளை எனும் இந்த Hard Disc - இல் எவ்வளவு பதிவு செய்ய முடியும் என்று உங்களுக்குத் தெரியுமா? தெரியவில்லை என்றால் கண்டிப்பாகத் தொடர்ந்து படியுங்கள்.
மனித மூளையில் எவ்வளவு தகவல்களைப் பதிவு செய்ய முடியும்? இதைப் பற்றி பல ஆராய்ச்சியாளர்கள் சிந்தித்து இருக்கின்றார்கள், ஆனால் ஒருவராலும் இதற்கு நிச்சயமாகப் பதில் கூற முடியவில்லை. எனவே இங்கு கூட உங்களுக்கு இதைக் கற்பனைப் பண்ணி பார்ப்பதற்காக ஒரு விளக்கம் தரப்படுகிறது.
சரி, முதலில் கணினியில் தகவல்கள் எப்படிப்பதிவு செய்யப் படுகின்றது என்பதைப் பார்ப்போம்.
இது மிகவும் இலகுவான ஒரு விஷயம் தான். கணினிக்கு இரண்டே இரண்டு விஷயங்கள் மட்டும் தான் தெரியும். ஒன்று அல்லது பூச்சியம், அதாவது One or Zero, Yes or No, On or Off. இதைத் தவிர்த்து வேறு ஒன்றுமே கணினிக்குத் தெரியாது. இப்படிப் பதிவு செய்யப்படும் ஒரு ஒன்று, அல்லது பூச்சியத்தை 1 இருமம் தகவல் (1 bit information) என்று அழைப்பார்கள். நாம் கணினியில் பதிவு செய்யும் ஒவ்வொரு விஷயமும் தொடர்ச்சியான பூச்சியம் மற்றும் ஒன்றால் பதிவு செய்யப் படுகின்றது.
சரி இது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இனி நமது மூளையை சற்று உத்துப் பார்ப்போம். மனித மூளை சுமார் 100 பில்லியன் நியூரான்களைக் கொண்டிருக்கிறது. இந்த நியூரான்கள் ஒவ்வொன்றும் சுமார் 1,000 நரம்பிணைப்புகளுடன், அதாவது Synapses உடன் இணையமுடியும் என்று எடுத்துக்கொள்வோம். அது மட்டும் இல்லை, இந்த ஒவ்வொரு நரம்பிணைப்பிலும் 1 Bit information அதாவது ஒரு ஒன்று அல்லது ஒரு பூச்சியத்தைப் பதிவு செய்ய முடியும் என்றும் எடுத்துக்கொண்டால், நமது மூளையில் எவ்வளவு பதிவு செய்ய முடியும் தெரியுமா? 1 கோடி கோடி பிட்ஸ், அதாவது 100 Terabyte பதிவு பண்ண முடியும். ஆனால், இது ஒரு குறைந்தபட்சமான எண்ணிக்கை தான் என்று சில விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். இவர்களின் கணிப்புப்படி சுமார் 2.5 Petabyte அதாவது 2500 Terabyte வரை பதிவு செய்ய முடியும் என்று கூட சொல்கிறார்கள். ஆச்சரியமாக இல்லையா?
பிறப்பில் இருந்து பார்த்தது கேட்டது எல்லாமே நம் மூளைக்குள்ளே இன்னும் பதிந்து இருக்கிறது. ஆனால், மூளையில் எந்த இடத்தில் பதிவு செய்து இருக்கிறது என்பது தான் தெரிவதில்லை. இப்படித் தெரியாமல் போவதைத் தான் நாம் மறதி என்று அழைக்கின்றோம்.
சரி, 2500 TB என்றால் எவ்வளவு என்று உங்களுக்குத் தெரியுமா? 2500 TBஇல் 30 லட்சம் மணி நேரம், அதாவது 342 வருடங்கள் தொடர்ந்து பார்க்கக்கூடிய சின்னத்திரை நாடகங்களைப் பதிவு செய்ய முடியும். இதே 2500 TBஇல் 4.2 கோடி மணி நேரம் அதாவது 4,800 வருடங்கள் தொடர்ந்து கேட்கக் கூடியதாகப் பாடல்களைப் பதிவு செய்ய முடியும். நம்பவே முடியவில்லை அல்லவா?
இனி நீங்கள் கூறுங்கள் நண்பர்களே, நமது மூளை ஒரு அதிசயம் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை, அல்லவா? இதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
நன்றி:SciNirosh

