கவனத்தை ஈர்க்கும் உயிர்மூச்சு திரைப்படம் - திரைத்துறையில் சிம்மாசனம் கிட்டுமா?
அரசியல், மீடியாத்துறை போன்று மக்களிடம் அதிக செல்வாக்கும், தாக்கத்தையும் ஏற்படுத்துவது சினிமா. திரைத்துறையில் கவனம் பெறக்கூடிய அளவிற்கு வளர்ந்துவிட்டால் மற்ற இருதுறைகளும் சிவப்புக்கம்பள விரித்து வரவேற்க காத்திருக்கும் என்பது எதார்த்தம். அவ்வளவு தூரம் ஆதிக்கம் செலுத்தும் சினிமாத்துறையில் நுழைந்து சாதித்து, மக்களின் நினைவில் நிற்கக்கூடிய வெற்றிப்படங்களை இயக்கிய நமது கம்பளத்தார் சமூகத்தைச் சேர்ந்த ஒற்றை முகம் திருப்பூரைச் சேர்ந்த மணிவாசகம் அவர்கள் மட்டுமே. திரைத்துறையில் நுழைந்து படிப்படியாக வளர்ந்து, பிரபல நடிகர் முரளி, கௌதமி நடிப்பில் 1990-இல் வெளியான "நம்ம ஊரு பூவாத்தா" என்ற திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தொடர்ந்து தனது துணைவியார் திருமதி ராஜேஸ்வரி அவர்களை தயாரிப்பாளராக்கி "ராஜபுஷ்பா பிக்ஸர்" என்ற பெயரில் பிரபல நடிகர்களான பிரபு, சரத்குமார், கார்த்திக், விஜயகுமார் ஆகியோரை வைத்து வைதேகி கல்யாணம், பெரிய கவுண்டர் பொண்ணு, பட்டத்துராணி, ராக்காயி கோயில், கட்டபொம்மன், ஜல்லிக்கட்டுக்காளை, மருமகன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் எனதொடர்ச்சியாகப் படங்களை தாயாரித்து, இயக்கி வெளியிட்டார். 2001-இல் மணிவாசகம் அவர்களின் திடீர் மரணத்தைத் தொடர்ந்து திரைத்துறையில் கம்பளத்தாரின் ஒற்றை முகவரியும் தொலைந்துபோனது.

இதனைத்தொடர்ந்து நீண்டகால இடைவெளிக்குப்பிறகு 2018-இல் மணிவாசகம் அவர்களின் மகன் காந்தி மணிவாசகம் களவாணி மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ராஜபுஷ்பா பிக்ஸர்ஸ் தயாரித்த இப்படத்தில் அட்டக்கத்தி, லப்பர் பந்து திரைப்படங்களில் நாயகனாக நடித்த தினேஷ், ஆனந்தராஜ், தேவயானி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் வெளியான தினத்தில் விஜய் நடித்த சர்க்கார் திரைப்படம் வெளியாவதில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக மற்ற படங்கள் கவனத்தை ஈர்க்காமல் போனது. இதன்பிறகான வெற்றிடம் நிரப்படாமல் இருந்துவரும் நிலையில், சின்னத்திரை ஷோவிலும், துணை இயக்குநராகவும் ஒருசிலர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பர்பிள் கிளப் உறுப்பினரும், தூத்துக்குடி ஏஎல் ஜுவல்லரி உரிமையாளருமான திரு.ஏ.லட்சுமணன் அவர்களின் மருமகனும், தொழிலதிபருமான "கோல்டு சின்னா" அவர்கள் கடந்த ஆண்டு வெளியான 'கருப்புப்பக்கம்' திரைப்படத்தில் சிபிஐ அதிகாரி வேடத்தில் நடித்து திரைத்துறையில் அடியெடுத்து வைத்தார். இதனையடுத்து வெளியான 'கிராக்கி' திரைப்படத்தில் வில்லனாக நடித்தார். தற்போது பிராட் வே சுந்தர் தயாரிப்பில் 'கோல்டு சின்னா' குணச்சித்திர வேடமேற்று நடித்த 'உயிர் மூச்சு' திரைப்படம், திரைப்படத்தயாரிப்பாளர் கே.ராஜன், பிரபல விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோரின் பாராட்டுக்களைப் பெற்று ஐம்பது நாட்களைக் கடந்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.
மகளின் திருமண ஏற்பாடுகளில் தீவிரம் காட்டிவரும் விவசாயியின் திடீர் மரணம் ஒருபுறம், மகளின் திருமணச் செலவை ஈடுகட்ட விவசாயி நம்பியிருந்த வாழைத்தோட்டம் பெருமழையால் அணைக்கட்டு நிரம்பி வெளியேறும் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்ட துயரம் மகளின் திருமணத்தை கேள்விக்குள்ளாக்குகிறது. கதையின் நாயகனாக வரும் மகனுக்கோ கிராம நிர்வாக அதிகாரி (விஏஓ) வேலை பார்த்துவந்த அப்பாவின் மரணத்துக்குப்பின் கருணை அடிப்படையில் கிடைக்கவேண்டிய வேலைக்கு அதிகாரிகள் கேட்கும் லஞ்சத்திற்கு எதிரான போராட்டம். குடிகார அப்பா தன் தங்கைகள் முன்பே மதுபோதை தலைக்கேறி தாயை பாலியல் இச்சைக்கு இணங்கச்சொல்ல, எந்தத்தாய் தான் உடன்படுவாள். காமம் தலைக்கேறிய கணவன் இரண்டு குழந்தைகளையில் சுவற்றில் மோதச்செய்து கொள்கிறான். வெகுண்டெழுந்த தாய் கணவனைக்கொன்றுவிட்டு, குடியால் தான் என் கணவனையும், குழந்தைகளையும் இழந்து கொலைகாரியாக நீதிமன்றத்தில் நிற்கின்றேன். நான் குற்றவாளியா? அல்லது வீதிதோறும் மதுக்கடைகளைத் திறந்துவைத்து மக்களை குடிக்கத்தூண்டு அரசு குற்றவாளியா? என்று நீதிமன்றத்தில் அனல் பறக்கும் வசனம் பேசி பரசக்தி வசனத்தை ஞாபகப்படுத்துகிறார். அரசால் பாதிக்கப்பட்ட நாயகனும், நாயகியும் எப்படி இப்போராட்டத்தில் வென்று ஒன்று சேர்கிறார்கள் எனபதே இப்படத்தின் கதை.

நிகழ்கால எதார்த்தத்தை பிரதிபலிப்பதால் திரைத்துறையினராலும், பார்வையாளர்களாலும் கவனிக்கப்படும் படமாக உயிர் மூச்சு மாறியுள்ளது. இதன் காரணமாக 'கோல்டு சின்னா' தயாரித்து நடிக்கும் 'கிராக்கர்' திரைப்படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையில் கம்பளத்தார்களுக்கு நிரந்தர சிம்மாசனம் கிடைக்க 'கிராக்கர்' திரைப்படம் வெற்றிப்படமாக அமையட்டும் என வாழ்த்துவோம்.

