வௌவால்கள் மட்டும் இல்லையென்றால் மனித இனத்துக்கே ஆபத்து?
எல்லாப் பறவைகளுமே பாலூட்டிகள் இனம் கிடையாது. அதே போல், எல்லாப் பாலூட்டிகளும் சிறகை விரித்துப்பறக்க முடியாது. ஆனால், வெளவால் மட்டும் இதற்கு விதிவிலக்கு.
முதுகெலும்புள்ள, வானில் பறக்கும் திறன் படைத்த பாலூட்டி உயிரினம் வெளவால் மட்டுமே. உலகில் 1,300 க்கும் மேற்பட்ட வௌவால் இனங்கள் வாழ்கின்றன. என்னதான் வெளவால்களுக்கு இறக்கைகள் இருந்து பறந்தாலும் இதை நாம் பறவையாக கருத முடியாது. இது பாலூட்டி வகுப்பைச் சேர்ந்ததால் இது ஒரு விலங்காகப் பார்க்கப்படுகிறது. பாலூட்டி விலங்குகள் போல் இது கர்ப்பம் தரித்து பின்பு குட்டியை ஈன்று பால் கொடுக்கும்.
பகல் முழுவதும் தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கும் வெளவால், சூரியன் மறைந்த பிறகு இரவு நேரத்தில் தான் தன்னுடைய உணவை தேடிச் செல்லும்.
வெளவால்களின் கால்களுக்கு போதுமான வலிமை கிடையாது. அதன் உடல் எடையை தாங்கும் அளவிற்கு அதன் கால்களில் வலு இல்லை. மேலும் அதனுடைய இறக்கைகள் அதன் கால்களை விட பெரியதாக இருப்பதால், அவற்றால் அதன் உடலை தூக்கிக்கொண்டு தரையிலிருந்து மேல் எழும்பி பறக்க முடியாது.
மேலும் அதன் கால்களை தரையில் ஊன்றி சிறிது நேரம் வரை அதனால் நிற்கவோ, நடக்கவோ முடியாது. வளர்ச்சி அற்ற கால்களும், கனமான உடல் இறக்கைகளும் தான் இதற்கு காரணம். வெளவால் தலைகீழாக தொங்கிக்கொண்டு இருந்தால் அதனால் எளிதாக பறக்க முடியும். இதனால் தான் வெளவால் தலைகீழாக தொங்குகிறது.
இந்த தனிச்சிறப்பை பெற்ற வெளவால் மனித குலம் நீடித்திருக்க ஒரு மகத்தான பங்களிப்பை இன்று வரை செய்து வருகிறது.
சர்வதேச அளவில் மனித உயிரிழப்புகள் பல வழிகளில் நிகழ்கின்றன. ஆனால், ஒரு ஆண்டில் அதிகளவில் மனிதர்களை உயிரிழக்க வைக்கும் ஒரு விஷயம் இருப்பதென்றால் அது கொசுவால் பரவும் நோய்களால் தான்.
உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, கொசுவால் பரவும் மலேரியா, டெங்கு காய்ச்சல், சிகா வைரஸ் உள்ளிட்ட நோய்களால் ஒரு ஆண்டில் மட்டும் 10 லட்சம் மனிதர்கள் உயிரிழக்கின்றனர் என குறிப்பிடுகிறது.
10 லட்சம் மனிதர்களை கொசுக்கள் மட்டுமே கொல்கிறது என்பது சாதாரண விஷயம் அல்ல. ஒருவேளை, கொசுக்களின் எண்ணிக்கை வருடா வருடம் அதிகரித்தால் மனிதர்களின் உயிரிழப்பும் அதிகரிக்கும்.
ஆக, இங்கு தான் வெளவால்கள் மனிதர்களின் உயிரிழப்புகளை கட்டுக்கள் வைத்துள்ளன. ஏனெனில், வெளவால்களின் முதன்மை உணவே கொசுக்கள் தான்.
ஒரு நாளில் மட்டும் ஒரு வெளவால் சுமார் 1,000 கொசுக்களை உணவாக சாப்பிடுகின்றன. கொசுக்கள் எங்கெல்லாம் மிகுதியாக காணப்படுகின்றனவோ அங்கு வெளவால்களும் அதிகமாக காணப்படும்.கொசுக்கள் மிகுதியாக இல்லாத இடங்களில் வெளவால்களும் அதிகமாக இருக்காது.
இதற்கு ஒரு சிறந்த உதாரணம், உலக நாடுகளில் ஐஸ்லாந்து நாட்டில் மட்டும் ஒரு கொசுக்கூட இருக்காது.
(கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய வேண்டும் எனில், தேங்கிய நீர் நிலைகள், குளம், குட்டைகள் இருக்க வேண்டும். ஆனால், ஐஸ்லாந்து நாட்டில் ஒரே இடத்தில் தேங்கிய நீர் நிலைகள் இருப்பது அரிது. அப்படியே அரிதாக காணப்பட்டாலும், அங்குள்ள அதிக குளிரான காலநிலை கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு சாதகமாக இருக்காது. எனவே, ஐஸ்லாந்தில் ஒரு கொசுக் கூட இல்லை)
ஐஸ்லாந்து நாட்டில் கொசுக்கள் இல்லாத காரணத்தினால் அந்நாட்டில் வெளவால்களும் இல்லை. ஒரு சில நாட்களில் வெளவால்கள் இருந்தாலும், அவை கூட்டமாக ஒரு நாட்டிலிருந்து ஐஸ்லாந்து வழியாக வேறு நாட்டிற்கு புகலிடம் தேடி போவதாக தான் இருக்கும்.
உணவுச் சங்கிலியில் வௌவால்களின் பிரதான உணவாக கொசுக்கள் அமைந்துள்ளதால், அவற்றின் மூலம் பரவும் நோய்கள் தடுக்கப்பட்டு மனித உயிரிழப்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

