வாழ்வாதார மீட்பில் கம்பளத்தாருக்குத் துணை நிற்பாரா துரைவைகோ?
சுல்தான்களிடமிருந்து மதுரையை மீட்டு, விஜயநகரப்பேரரசின் ஆளுகையின்கீழ் நாயக்கர் சாம்ராஜ்ஜியத்தை நிறுவி, மதுரையின் காவல் அரணாக நாளாபுறமும் குடியமர்ந்தவர்கள் இராஜகம்பளத்தார் சமூகத்தினர். மாமதுரைக்குத் தெற்கே தேனியை ஒட்டிய இயற்கை எழில்கொஞ்சும் மேற்குத்தொடர்ச்சிமலையின் அடிவாரத்தின் காடுகளைக் களையெடுத்து, மேடு பள்ளங்களைச் சமன்படுத்தி வயல்வெளிகளாக்கி போடி, தேவாரம், கண்டமனூர் உள்ளிட்ட பல பாளையங்களைக் கண்ட இராஜகம்பளத்தார்கள்,மேய்ச்சல் வாழ்க்கையின் தொடர்ச்சியாக குன்றுகள் தோறும் தொழுவங்கள் அமைத்து கால்நடைகளை பராமரித்து வருகின்றனர்.
நவீன அறிவியல் கோலோச்சும் இக்காலத்தில், பழக்க வழக்கங்களிலும், வாழ்க்கை முறையிலும் சமூகம் எத்தனையோ மாற்றங்களை வேகமாகச் சந்தித்துவருகிறது. ஆனாலும் தேனி மாவட்டத்தில் ஏறத்தாழ ஐநூறு ஆண்டுகள், பலதலைமுறைகள் தாண்டி இப்பகுதிகளில் தொடர்ந்து வசித்துவரும் இராஜகம்பளத்தார் சமூகத்தினர், மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டியுள்ள போடி ஒன்றியத்திற்குட்பட்ட தேவாரம், தம்பிநாயக்கன்பட்டி, டி.புதுப்பட்டி, பெரிய பொட்டிபுரம், சீன்னப்பொட்டிபுரம், கொடி பொம்மநாயக்கன்பட்டி, ராசிங்காபுரம், சிலமலை, மேற்கு சூலப்புரம், கிழக்கு சூலப்புரம், வடக்கு சூலப்புரம், கரட்டுப்பட்டி, ஜக்கமநாயக்கன்பட்டி, பெரியகுளம் ஒன்றியத்திற்குட்பட்ட கடமலைநாயக்கன்பட்டி, வடவீரநாயக்கன்பட்டி, கைலாசபட்டி, முருகமலை, எண்டபுலி, தண்ணீர்ப்பந்தல், ஆண்டிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட சித்தார்பட்டி, எஸ்.கதிர் நரசிங்கபுரம், வேலாயுதபுரம், தொப்பம்பட்டி, கண்டமனூர், கடமலை நாற்பது குண்டு உள்ளிட்ட கிராம மக்கள் அன்றுமுதல் இன்றுவரை வருசநாடு வேலப்பர்மலையிலும், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளான நியூட்ரினோ பாறை முதல் குரங்கணி வரையிலும், கொடைக்கானல் மலையடிவாரப் பகுதிகளான குரங்கருவி முதல் முருகமலை வரையிலான பகுதிகளில் தொழுவம் அமைத்து தங்கள் வாழ்வாதாரத்தின் அடிநாதமாகவுள்ள நாட்டு மாடு, வெள்ளாடு, செம்மறி ஆடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து பராமரித்து வருகின்றனர். மேலும், தங்கள் கால்நடைகளின் மேய்ச்சலுக்காக காலங்காலமாக இம்மலைகளை நம்பியே வாழ்கின்றனர்.

ஆனால், கடந்த சில மாதங்களாக மலைகளில் கால்நடைகள் மேய்ச்சலுக்கு செல்லும்போது வனத்துறையினர் தடுத்து நிறுத்தி வன்முறையில் ஈடுபடுவதோடு, கண்ணியத்திற்கும், கட்டுப்பாட்டிற்கும் பெயர்போன இச்சமூக மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுகின்றனர். வனத்துறையினரின் இந்த அடாவடிப்போக்கும், அத்துமீறிய பேச்சுக்களும் மேற்குத்தொடர்ச்சி மலையை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் பூர்வகுடி மக்களைக் கொதிப்படையச் செய்துள்ளது. இப்பிரச்சினையில் அரசின் கவனத்தை ஈர்க்கும்வகையில் பலபோராட்டங்களை நடத்தியும், அதிகார வர்க்கம் கண்டும் காணாமல் இருந்துவருகிறது. கனிம வளங்களைக் கொள்ளையடிப்போருக்கும், தாது மணல்களைச் சுரண்டுவோருக்கும், சுற்றுச்சுழலுக்கு கேடு விளைவிப்போருக்கும் வெண்சாமரம் வீசித்துணைநிற்கும் அதிகார வர்க்கம், சமானிய மக்களின் வாழ்வாரத்தை முடக்கும் வனத்துறையினரின் அடவாடிச்செயலை கண்டும் காணாமல் இருப்பது வெட்கக்கேடானது.
அரசின் தலைமை பீடத்திற்கு இப்பிரச்சினையைக் கொண்டு சென்று கம்பளத்தார் உள்ளிட்ட பல சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றித்தரும்படி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் இளைஞர் அணி துணைச் செயலாளரும், மதிமுக பிரமுகருமான சுருளிமணி.
இதுகுறித்து திரு சுருளிமணி நம்மிடம் பேசும்போது, அரசியல் இயக்கங்களைச் சேராதவர்களே கிடையாது என்ற அளவில் கம்பளத்தார்கள் வசிக்கும் ஒவ்வொரு கிராமங்களிலும், ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராவது ஏதாவதொரு இயக்கங்களில் உள்ளனர். எனினும், நாற்பது லட்சம் கம்பளத்தார்களின் எந்தத் தேவையையும் தாங்கள் சார்ந்துள்ள கட்சித் தலைமை நேரடியாகச் சந்தித்து கூறிவிடமுடியாத தூரத்தில் தான் கட்சிகள் நம்மை வைத்துள்ளது. ஆனால் மதிமுக சிறிய கட்சியாக இருந்தாலும் கம்பளத்தார்களின் குரலை காதுகொடுத்துக் கேட்கும் தலைமையாக வைகோ தலைமையானாலும், துரைவைகோ தலைமையானாலும் இருந்துவருகிறது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் நமது மக்களின் பாரம்பரிய உரிமையாகவும், வாழ்வாதாரமாகவும் விளங்கும் மேய்ச்சல் பகுதிகளுக்குள் கால்நடைகள் எவ்வித தங்குதடையுமின்றி சென்றுவரும் உரிமையை நிலைநிறுத்தித் தரும்படி எங்களின் முதன்மைச் செயலாளரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளேன். கோரிக்கையின் நியாயத்தைப் பொறுமையுடன் செவிமடுத்த முதன்மைச் செயலாளர் துரை வைகோ நிச்சயம் நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதியளித்துள்ளார் என்றார்.
நேற்று (18.07.2025) தாயகத்தில் நடைபெற்ற முதன்மைச் செயலாளருடனான சந்திப்பின்போது தேனி மாவட்ட மதிமுகதேனி மாவட்ட இளைஞரணிச் செயலாளர் சிந்துவம்பட்டி சி.இரமேஷ் உடனிருந்தார்.
ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டு கம்பளத்தாரின் துயர்துடைப்பார் துரைவைகோ என்று நம்புவோம்.

