🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கொடிய நோய்களுக்கு காரணமாகிறதா ஜான்சன் & ஜான்சன் பொருட்கள்?

உலகின் மூன்றாவது பெரிய மருந்து தயாரிக்கும் நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன்(J&J) தனது தயாரிப்பான பேபி ஷாம்பு அட்டையில் no more tears எனும் வாசகத்தை அச்சிட்டு இருக்கும். இந்நிறுவனம் செய்திருக்கும் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தி புலனாய்வு பத்திரிக்கையாளர் கார்டினர் ஹாரிஸ் no more tears எனும் பெயரிலேயே ஒரு புத்தகம் வெளியிட்டு இருக்கிறார். 

நியூ ஜெர்சியை தலைநகரமாகக் கொண்டு 1886 இலிருந்து இயங்கி வரும் J&J நிறுவனத்தின் சொத்து மதிப்பு சுமார் 32 லட்சம் கோடி ரூபாய். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியை விட சொத்து மதிப்பு ஒன்றரை மடங்கு அதிகம். 

இந்நிறுவனம் தயாரிக்கும் மருந்துகளின் பக்க விளைவுகளை ஆராய்ச்சி செய்து வெளியிடும் கம்பெனிகளை டாலரில் சரிக்கட்டி வெளியிடாமல் தடுப்பது, அமெரிக்க மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பான USFDA விற்கே கையூட்டு வழங்குவது, மருத்துவர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் மிகப்பெரிய தொகையாக அன்பளிப்பு வழங்குவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கச் சொல்லி நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் அந்த ஆணைகளை புறக்கணிப்பது என அத்து மீறல்களை ஆதாரங்களுடன் வெளியிட்டு இருக்கிறார் ஹாரிஸ். 

பேண்ட் எய்ட், ஷாம்பூ, சோப்பு, கேர் ஃப்ரீ, ஸ்டே ஃப்ரீ என இந்தியாவிலும் மிகப்பெரிய மார்க்கெட் J&J விற்கு உண்டு. 

இவர்களின் வாசனை பவுடர் கேன்சரை உருவாக்குகிறது என்று அமெரிக்க நீதிமன்றத்தில் 40,000  பேர் வழக்கு தொடுத்தனர். கேன்சர் உருவாவது நிரூபிக்கவும் பட்டது. 71,000 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப் பட்டது. J&J இழப்பீடு தந்ததா? அதெல்லாம் அவர்கள் அகராதியில் இல்லை. இழப்பீடு தருவதற்கு என்று தனியாக ஒரு துணை நிறுவனம் ஆரம்பித்தார்கள். ஆரம்பித்த சில மாதங்களிலேயே அந்த துணை நிறுவனம் திவால் நோட்டீஸ் கொடுத்துவிட்டது. வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இந்திய நீதிமன்றங்களிலும் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன.

EPO எனும் இவர்களின் தயாரிப்பு கேன்சர் நோயாளிகளுக்கு ரத்தத்தில் சிவப்பணுக்கள் அதிகம் உற்பத்தி செய்வதற்கான மருந்து. ஆனால் ஆராய்ச்சியில் இதை பயன்படுத்தும் நோயாளிகளின் கேன்சர் நோய் தீவிரம் அடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட AMGEN எனும் நிறுவனத்தை கையூட்டு வழங்கி மௌனித்துவிட்டது. 

Risperdal எனும் மாத்திரை குழந்தைகளுக்கானது. இதை உட்கொள்ளும் குழந்தைகள் எடை அதிகரிப்பு, ஆண் குழந்தைகளுக்கு மார்பகம் வளர்வது எனும் சிக்கல்களை எதிர்கொண்ட பொழுது J&J எச்சரிக்கை தரவில்லை. அதுமட்டுமல்லாமல் விற்பனையை தொடர்ந்து லாபத்தை அள்ளிக் கொண்டனர். Ortho Evra எனும் கருத்தடை மாத்திரை மாரடைப்பு ரத்தக்கட்டி போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டும் இம்மாத்திரை பல ஆண்டுகளாக மார்க்கெட்டில் நீடித்திருந்தது. அன்பளிப்பு மாத்திரை செய்யும் மாயம் .

பல்கலைக் கழகங்களுக்கு ஆராய்ச்சி நிதி என சிறு தொகையை வழங்கி விட்டு, ஆராய்ச்சியின் முழு முடிவுகளையும் தனதாக்கிக் கொள்வது இந்நிறுவனத்தின் வழக்கம். மருத்துவர்களுக்கு அன்பளிப்பு, நட்சத்திர ஓட்டல்களில் விருந்து, வெளிநாட்டு பயணம் என்பது எல்லா மருந்து நிறுவனங்களும் செய்கிற ஒன்றாக இருந்தாலும் J&J நிறுவனம்தான் இது போன்ற செலவுகளில் நம்பர் ஒன். 

சாதாரண 'பேண்ட் எய்ட்' தயாரிப்பில் பயணத்தை தொடங்கிய ஒரு நிறுவனம் பன்னாட்டு பகாசுர கம்பெனியாக வளர்ந்த ஊழல் கதை புத்தகமாகவே வந்து விட்டது. மோசடி செய்யாத கார்ப்பரேட் நிறுவனங்களை காண்பது அரிதிலும் அரிது. ஒவ்வொரு நிறுவனங்களை பற்றியும் பல புத்தகங்கள் எழுதலாம். உயிர் காக்க வேண்டிய மருந்து கம்பெனி இலாபத்திற்காக உயிர்களோடு விளையாடி இருப்பதைப் படிக்கும்போது நெஞ்சம் பதை பதைக்கின்றது.

நன்றி: தோழர் ஆறுக்குட்டி.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved