🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வன்னியர் உள் இட ஒதுக்கீடு - பாமக அன்புமணி பொது விவாதத்திற்கு தயாரா?

சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி ஒவ்வொரு கட்சியும் தனது வாக்குவங்கியை தக்கவைத்துக் கொள்ள களத்தில் இறங்கியுள்ளன. தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் தொடங்கி சிறிய கட்சிகளின் தலைவர்கள் வரை நடைபயணம், மக்கள் நலத்திட்ட உதவிகள், பொதுக்கூட்டம், ரோடு ஷோ என பல நிகழ்வுகள் மூலமாக மக்களைச் சந்திக்கத் தொடங்கியுள்ளனர்.

இதனொரு பகுதியாக சாதிக்கட்சிகள் தங்கள் சமுதாயம் சார்ந்த வாக்குகளைக் குறிவைத்து தங்கள் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை முன்வைத்து கூட்டங்களில் பேசிவருகின்றனர். அந்தவகையில் பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சமுதாய வாக்குகளைக் குறிவைத்து வன்னியர் உள் ஒதுக்கீடு விவகாரம் குறித்துப் பேசத்தொடங்கியுள்ளனர். 2021 தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் பாமக வன்னியருக்கு 10.5% உள் ஒதுக்கீட்டை பெற்றுத் தந்ததைப்போல் காட்டுவதற்காக, அம்மக்களை ஏமாற்றும் விதமாக சட்டமன்றத்தின் இறுதி ஆயுள் நாளன்று அவசர அவசரமாக வன்னியர்க்கு உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்றினர். சட்டவிரோதமான வன்னியர் உள் இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. பின்னர் இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.

தற்போது மீண்டும் 2026 சட்டமம்றத் தேர்தல் வருவதையொட்டி வன்னியர் சமுதாய வாக்குகளைக் குறிவைத்து, திமுக கூட்டணிக்கு வன்னியர் வாக்குகள் செல்வதை தடுக்கும் வகையில், திமுக வன்னியர் சமூகத்தை ஏமாற்றிவிட்டதாகக் கூறி வாக்கு அறுவடைக்கு தயாராகியுள்ளது.

தற்போது பாமகவில் நிலவும் அப்பா மகன் பிரச்சைனையில் தனது தரப்பை வலுப்படுத்துவதற்காக நடைபயணம் மேற்கொண்டுள்ள அன்புமணி இராமதாஸ், வன்னியர் உள்ளொதுக்கீடு பிரச்சினையை பேசத்தொடங்கியுள்ளனர்.      

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சோசலிச மையத்தைச் சேர்ந்த மருதுபாண்டியன் உள் இடஒதுக்கீடு தொடர்பாக டாக்டர் அன்புமணி ராமதாஸ், சமூக நீதிப்பேரவையின் வழக்கறிஞர் பாலு ஆகியோர் பொது மேடையில் விவாதிக்கத் தயாரா? என்று வினவியுள்ளார்.

இதுகுறித்து மருதுபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

உள் இடஒதுக்கீடு கொள்கைகள் தொடர்பான, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட்டின் தீர்ப்பின்  10 முக்கிய அம்சங்கள்.

  1. இடஒதுக்கீடு என்பது தகுதிக்கு எதிரான கொள்கைகள் அல்ல, ஆனால் பகிர்ந்தளிக்கும்  நீதிக்கு அவசியமானது .

2. இடஒதுக்கீடுகள் செயல்திறனைப் பாதிக்காது, அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவத்தை மேம்படுத்துகின்றன.

3. போதுமான பிரதிநிதித்துவம் என்பது மொத்த எண்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு மட்டத்திலும் பயனுள்ள பிரதிநிதித்துவத்தை குறிக்கிறது.

4. SC/ST க்கு கிரீமிலேயரை பயன்படுத்த முடியாது.

5 பட்டியலிடப்பட்ட சாதி குழுக்களுக்குள் பாகுபாடு இருந்தால் மட்டுமே உட்பிரிவு வகைப்படுத்துதல் சாத்தியமாகும்.

6. உட்பிரிவு வகைப்படுத்துதல் மக்கள்தொகை சதவீதத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும், விலக்கு அல்ல.

7. குழுக்களுக்கு இடையேயான பின்தங்கிய நிலை மற்றும் போதிய பிரதிநிதித்துவத்தை காட்ட நேரடி விவர அடிப்படையிலான தரவுகள் அவசியம்.

8. SC மற்றும் ST பிரிவினருக்கான குழு மட்டத்தில் பின்தங்கிய நிலை கருதப்படுகிறது.

 9. மாநிலங்களுக்கு உட்பிரிவு  வகைப்படுத்தும் அதிகாரம் உள்ளது, ஆனால் கராறான  தரவுகள்  சோதனைகள் அவசியம்.

10. ஒரு குழு மிகவும் பின்தங்கியிருப்பதாக தரவு காட்டினால் மட்டுமே உட்பிரிவாக வகைப்படுத்துதல் அனுமதிக்கப்படும்.

அண்மையில் பட்டியலின மக்களின் உள் ஒதுக்கீட்டுக்கான தீர்ப்பில் தலைமை நீதிபதி அவர்கள் கொடுத்த தீர்ப்பின் முக்கிய சாராம்சம் மேலே பார்த்தோம்.  வரிசை எண் 5, 7, 9,10 மீண்டும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள். உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான மிக முக்கியமான காரணிகளை எடுத்தியம்புகிறது.

ஒரு தொகுப்பிற்குள் உள்ள பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றால் அந்தத் தொகுப்பில் உள்ள மற்ற சமூக பிரிவுகளை காட்டிலும் அவர்கள் மிகவும் பின்தங்கியவர்களாக இருக்க வேண்டும். அதற்கான தரவுகள் கராறான முறையில் இருக்க வேண்டும் என்றும் குறிப்பாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  இந்த தீர்ப்பிலும்  இது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. வன்னியர் உள் ஒதுக்கீட்டை ரத்து செய்த தீர்ப்பிலும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

ஆனால் அரசமைப்புச் சட்ட விதிகளையும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளையும் மறைத்து விட்டு, தன்னுடைய வாக்கு வங்கி அரசியல் நலனுக்காக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அவர்களும், தலைவர் அன்புமணி அவர்களும், வன்னியர் சமூகத்து அறிவுசீவிகளும் தொடர்ச்சியாகத்  தவறாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். 

சாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமே உள் ஒதுக்கீடு வழங்கி விடாது. எந்த ஒரு சமூகப் பிரிவும் உள் ஒதுக்கீடு பெற வேண்டுமானால், அது அங்கம் பெற்றுள்ள பிரிவிற்குள் மற்ற சமூகங்களை காட்டிலும் கல்வி ரீதியாக, சமூக ரீதியாக பின்தங்கி இருக்க வேண்டும் என்பதை தரவுகள் மூலம் உறுதிப்படுத்த வேண்டும். 

பல சாதிகளை உள்ளடக்கிய தொகுப்புக்கு தான் கம்யூனிட்டி என்று பெயர். வகுப்புவாரி இட ஒதுக்கீடு என்பது கம்யூனிட்டிக்கு தானே தவிர தனி சாதிக்கு அல்ல. தனி ஒரு சாதிக்கு இட ஒதுக்கீடு வழங்க இந்திய அரசமைப்புச் சட்டம் அனுமதிக்க வில்லை. இதையும் மறைத்துவிட்டு அன்புமணி ராமதாஸ் அவர்களும், மருத்துவர் ராமதாஸ் அவர்களும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று அந்த மக்களை திசை திருப்பி தன்னுடைய வாக்கு வங்கியைத் தக்க வைக்க முயல்கின்றனர்.

வன்னியர்கள் தற்பொழுது மிகவும் பிற்படுத்தப்பட்டப் பட்டியலில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் தனியாக இட ஒதுக்கீடு பெற வேண்டும் என்றால், இந்தப் பட்டியலில் உள்ள மற்ற சமூக மக்களை விட கல்வி சமூக நிலைகளில் பின்தங்கி இருப்பதை தரவுகளோடு மெய்ப்பித்துக் காட்ட வேண்டும். இந்த பிரிவில் உள்ள குறவர், வலையர், மீனவர், தொட்டிய நாயக்கர், வேட்டுவ கவுண்டர், கள்ளர், மறவர், ஊராளி கவுண்டர் இவர்களைவிட வன்னியர்கள் மிகவும் பின்தங்கி உள்ளனர் என்பதை தரவுகளோடு காட்ட வேண்டும். 

அப்படித் தரவுகளைக் காட்டினாலும் இவர்கள் தனியாக ஒரு சாதியாக இருப்பதால் தனிச் சாதிக்கு இட ஒதுக்கீடு வழங்க அரசமைப்புச் சட்டம் அனுமதிக்காது.

அருந்ததியரும் இஸ்லாமியரும் உள் ஒதுக்கீடு பெறுவதற்கு முக்கிய காரணங்கள்,  அவர்கள் இருந்த தொகுப்பில் மற்ற சமூகங்களைக் காட்டிலும் கல்வி சமூக ரீதியாக மிகவும் பின்தங்கி இருந்தது. இவர்கள் ஒரு தனி சாதியாக இல்லாமல் பல சாதிகளின் தொகுப்பாக இருந்தது மிக முக்கியம். அருந்ததியர் என்பது ஏழு சாதிகளின் தொகுப்பு. அதேபோல் இஸ்லாமியர் என்பதும் ஏழு சாதிகளின் தொகுப்பு. ஆனால் வன்னியர் என்பது மிகப் பிற்படுத்தப்பட்ட பிரிவில் ஒரே எண் கொண்ட தனிச் சாதி மட்டுமே. 

இந்த உண்மைகள் எல்லாம் மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கும், அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும், சமூக நீதிப் பேரவை பாலு அவர்களுக்கும் தெரிந்திருந்தாலும் கூட இதை மறைத்து, அரசியல் நடத்துவதற்காக அந்த மக்களை குழப்பி ஆதாயம் தேட முற்படுகின்றனர்.

ஆனால் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு சந்திர சூட் அவர்கள் தனது தீர்ப்பில் உள் ஒதுக்கீட்டுக்கான நிபந்தனைகளை, வழிகாட்டு நெறிமுறைகளை, விதிமுறைகளை மிகத் தெளிவாக வழங்கியுள்ளார். இப்போது மீண்டும் நீதியரசர் வழங்கி உள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் எண் 5 ,7 ,10 ஒருமுறை படித்து பாருங்கள். அன்புமணி இராமதாஸ் அவர்களின் பொய்மைகள் உங்களுக்குப் புரியும். இவ்வாறி அவர் கூறியுள்ளார்.

நன்றி: மருது பாண்டியன்.
சோசலிச மையம்

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved