🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உயிர்களின் உற்பத்திக்கு ஆண் இனம் அவசியமில்லை?

ஒரு உயிர் உருவாக ஆண், பெண் என்னும் இரு இனக்கலப்பு நடைபெற வேண்டும். எவ்வுயிரினமாக இருந்தாலும் இயற்கையின் விதி இதுதான். விதி இதுவானாலும் விதிவிலக்குகள் இல்லாமல் இல்லை. 

பரிணாமத்தின் கீழ்ப் படிநிலையிலிருக்கும், சிக்கலில்லா உயிர்க்கலக் கட்டமைப்புக்கொண்ட உயிரினங்கள் இவ்விதிவிலக்கைக் கொண்டவைதான். அவற்றின் இனவிருத்திக்கு ஆண், பெண் வேறுபாடு பெரும்பாலும் இருப்பதில்லை. ஆனால், பரிணாம வளர்ச்சியில் மேல் படிநிலையிலிருக்கும் விலங்குகள் ஆண், பெண் என இரு இனங்களாகப் பிரிந்திருக்கின்றன. ஆண், பெண் ஒன்று சேர்ந்தால் மட்டுமே இனவிருத்தி நடைபெறும். ஆனாலும், அங்கும் ஒருசில விதிவிலக்குகள் நடைமுறையில் உண்டு. ஆண் தொடர்பில்லாமல், பெண் கருத்தரிப்பதைப் (Parthenogenesis) பல உயிரினங்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. பூச்சிகள், பல்லிகள், மீன்கள் போன்ற சிறு விலங்குகளில் ஆணில்லாமல் பெண் மட்டும்  கருத்தரித்திருப்பது கண்டறியப்பட்டிருக்கின்றது. ஆனால், பெருவிலங்குகளுக்கு இது சாத்தியமாக இருக்கவில்லை. இப்போது, ஒரு பெண் முதலை அதைச் சாத்தியப்படுத்தியிருப்பது செய்தியாகியிருக்கிறது. 

ஆண் உறவின்றிக் கருத்தரித்த கன்னிப் பெண்களின் கதைகள், அனைத்து மதங்கள் சார்ந்த தொன்மங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. சிலவற்றின் பிரதானக் கதையே, அதிலிருந்துதான் ஆரம்பிக்கும். தொன்மங்களில் சொல்லப்பட்ட கன்னித் தாய்மை, இறை மறுப்பாளர்களால் பலவிதங்களில் விமர்சிக்கப்பட்டாலும், “அது நடைமுறைச் சாத்தியம்தானா?” என்று கேட்டால், “சாத்தியம்” என்றுதான் பதில் சொல்ல வேண்டும். காரணம், சமீபத்தில் நடந்த அந்தச் சம்பவம். 

‘டாக்டர் வாரன் பூத்’ (Dr. Warren Booth) என்பவரது தலைமையிலான ஆராய்ச்சிக் குழு, 7 ஜூன்  2023 அன்று ‘Biology Letters’ என்னும் அறிவியல் இதழில், அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றது. 

ஜனவரி 2018 ஆம் ஆண்டு, கொஸ்டோரிகாவில் உள்ள வனவிலங்குப் பூங்காவில், 16 ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்த ஒரு பெண் முதலை, எந்தவொரு ஆண் முதலையின் தொடர்புமில்லாமல், பதினான்கு முட்டைகளை இட்டிருக்கிறது. அம்முட்டைகளைக் கண்ட  பூங்கா ஊழியர்கள், அவற்றில் ஏழு முட்டைகள் கரு வளர்ச்சிக்கு உகந்தவை என்பதைத் தெரிந்து கொண்டனர்.  அவற்றைச் செயற்கை அடைகாத்தலுக்கு உற்படுத்தினார்கள்.

மூன்று மாதங்களின் பின், முட்டைகளிலிருந்து குஞ்சுகள் எதுவும் வெளிவரவில்லை. ஏமாற்றத்துடன் அவற்றை ஆராய்ந்தபோது, அதில் ஒரு முட்டையில் முழுமையான உருவம்கொண்ட பெண் முதலைக் குஞ்சு  உயிரற்ற (Stillborn) நிலையில் காணப்பட்டது. அதை டி.என்.ஏ (DNA) பகுப்பாய்வு செய்தபோது, தாய் முதலையுடன் 99.9% மரபணுவில் ஒற்றுமையைக் கொண்டிருந்தது. கிட்டத்தட்டத் தன்னையே மறு பதிப்பாகப் பிரதியெடுத்தது போலத் தன் குழந்தையையும் உருவாக்கியிருந்தது. ஆணின் பங்களிப்பில்லாமல் முழுமையான உயிரினத்தைப் பெண்ணொன்று தனியே உருவாக்கும் என்னும் உண்மையை அது உலகிற்கு அறிவித்தது. 

இனப்பெருக்கத்திற்கு ஆண் கிடைக்க வாய்ப்பேயில்லை என்னும் ஒரு இறுதிச் சூழ்நிலையில், பெண்ணில் உருவாகும் ‘போலார் பாடி’ (Polar body) என்னும் மரபணுக் கலம், கரு முட்டையைத் தூண்டி உயிராக்கத்தைத் தொடக்கி வைக்கும் என்கிறார்கள். இப்படி உருவாகும் உயிர், தாயின் மரபணுவை மட்டுமே கொண்டிருக்கும். அதைக் குளோளிங் (Clone) என்று சொல்ல முடியாவிட்டாலும், கிட்டத்தட்ட , ‘அரைக் குளோன்’ (Half-Clone) என்று சொல்லலாம். அப்பெண் முதலையும் தன்னையே 99.9 விழுக்காடு படியெடுத்துத் தன் குஞ்சை உருவாக்கியிருந்தது. அது உருவாக்கிய முதலைக் குஞ்சு இறந்து போயிருந்தாலும், இப்படியான உருவாக்கத்தில் எல்லாம் இறந்துபோகும் என்று சொல்ல முடியாது. இது மட்டுமே மனிதர்களால் அவதானிக்கப் பட்டிருக்கிறது. ஆனால், அவதானிக்கப்படாமல் உலகெங்கும் சதுப்பு நிலங்களில் பதுங்கி வாழும் கோடிக்கணக்கான முதலைகளில், பல இனவிருத்திகள் இப்படி நடந்திருக்கலாம். இப்போதும் நடந்து கொண்டிருக்கலாம்.

இதன்மூலம் நாம் தெரிந்துகொள்ளக் கூடிய இன்னுமொரு விசயமும் இருக்கிறது. முதலைகளுக்கு  நெருங்கிய உறவான டைனோசர்களின் இனப்பெருக்கத்தில் ஆராய்ச்சியாளர்களுக்குப் பெரும் சந்தேகம் இருந்து வந்தது. ஒருவேளை அவை, இதுபோன்ற முறையிலேயே இனத்தைப் பெருக்கியிருக்கலாம் என்னும் கருத்தும் இப்போது சொல்லப்படுகிறது. ‘ஜூராசிக் பார்க்’ (Jurassic Park) திரைப்படத்தில்கூட, “பெண் டைனோசர்கள், ஆண்கள் இல்லாமல் இனப்பெருக்கம் செய்வதற்கான வழியை இயற்கையே கண்டுபிடித்துக் கொடுக்கும்” என்னும் கருத்துச் சொல்லப்பட்டிருப்பதை நாம் கவனிக்க வேண்டும். 

பெண் முதலையொன்று தானாகவே இனப்பெருக்கத்தை ஆரம்பித்திருக்கிறது என்பது எளிதாகக் கடந்துபோகும் செய்தியல்ல. இது முதலைக்கானது, முட்டையிடும் உயிரினத்திற்கானது என்றும் கடந்துவிட முடியாது. ‘கரு முட்டை’ என்பது பெரும்பாலான உயிரினங்களுக்குப் பொதுவானது. மனிதரிலும், பிற பாலூட்டிகளிலும் பெண்களுக்குக் கரு முட்டை இருக்கிறது. பறவைகள் முட்டையாக வெளியே இடுகின்றன. பாலூட்டிகள் உடம்பினுள்ளே வைத்துப் பாதுகாக்கின்றன. மொத்தத்தில் பெண் உயிரி, கரு முட்டையைக் கொண்டிருப்பது பொதுவான ஒன்றுதான். பெண் முதலையால் ஆணில்லாமல் தன் முட்டையைக் கருக்கட்ட முடியுமென்றால், மனிதர்களுக்கும் (பெண்) அது ஏதோவொரு தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சாத்தியமாகலாம். 

“மதங்களின் தொன்மக் கதைகளிலும் இதுபோலவே நடந்திருக்கலாம் என்று எடுத்துக் கொள்ளலாமா?” என்று கேட்டால், 

“இல்லை, அப்படி நடக்கச் சாத்தியமே இல்லை”. 

இந்த இடத்தில் நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விசயம் ஒன்று இருக்கிறது.  

எந்த மதத்தின் தொன்மக் கதையை எடுத்தாலும், அதில் வரும் கன்னித் தாய்கள், ஆண் சிசுக்களையே பெற்றிருப்பார்கள். பொதுவாகப் பெண் சிசுவைப் பெற்றெடுத்த சம்பவம் எதிலும் இல்லை. மேலே கூறிய சம்பவத்தின் அடிப்படையில், ஒரு ஆண் இல்லாமல், ஒரு பெண், இன்னுமொரு பெண்ணைத்தான் உருவாக்க முடியுமேயொழிய, ஆணை உருவாக்கவே முடியாது. விளங்கக் கூறுவதானால், பெண்ணாக இருப்பதற்கு X,X குரோமோசோம்களும், ஆணாக இருப்பதற்கு X, Y குரோமோசோம்களும் தேவை. இதில் Y குரோமோசோமை ஆண் மட்டுமே வைத்திருப்பான். பெண்ணிடம் Y குரோமோசோம் இருக்கவே இருக்காது. 

அதனால், “புராணக் கதைகளின் கன்னித் தாய்மைக்கு, அறிவியல் ரீதியில் காரணத்தைச் சொல்ல முடியாது. நம்பிக்கை சார்ந்தே பதில் சொல்ல வேண்டும்”. 

*முதலைகளின் குஞ்சுகளுக்கு ஆண், பெண் தேர்வு (X,X), (X,Y) குரோமோசோம்களால் தீர்மானிக்கப்படுவதில்லை. அது மனிதர்களுக்கானது. கன்னித் தாய்மை அதாவது பார்த்தினோஜெனோசிஸ் (Parthenogenesis) முறையால் மனிதர்களும், பாலூட்டிகளும் கருத்தரிக்கலாம் என்பது இதுவரை அறிவியலால் நிரூபிக்கப்படவில்லை. எலியொன்றில்  செய்து பார்த்ததில் தோல்வியே கிட்டியது.

நன்றி - ராஜ்சிவா.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved