இடஒதுக்கீட்டை மீட்டெடுத்த இரும்பு மனிதர் இல்லத் திருமணவிழா!
இடஒதுக்கீட்டை மீட்டெடுத்த இரும்பு மனிதர் இல்லத் திருமணவிழா!
108 சாதிகளை உள்ளடக்கிய மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட 20% இடஒதுக்கீட்டில் ஒரு சாதிக்கு மட்டும் 10.5% இடஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்தி வெற்றிவாகைசூட காரணகர்த்தாவாக விளங்கிய திரு.காசிமாயன் இல்லத் திருமணவிழாவில் தொட்டிய நாயக்கர் சமுதாயத் தலைவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதன் விவரம் வருமாறு,
எடப்பாடியார் தலைமையிலான முந்தைய அதிமுக ஆட்சியில் 2021 சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் ஒருசில மணித்துளிகளுக்கு முன் தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக அமலில் இருந்த 108 சாதிகளை உள்ளடக்கிய 20% மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் வன்னியர் ஒரு சாதிக்கு மட்டும் 10.5% இடஒதுகீடு வழங்க வழிவகை செய்யும் சட்டம் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டது. இதனால் தொட்டிய நாயக்கர், முத்தரையர், வேட்டுவக்கவுண்டர், முக்குலத்தோர், வண்ணார், குயவர், ஆண்டிப்பண்டாரம் உள்ளிட்ட 107 சாதியினருக்கு கிடைக்க வேண்டிய கல்வி, வேலைவாய்ப்பு உரிமை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதை எதிர்த்து 2021 சட்டமன்றத் தேர்தல் களத்தில் மட்டுமல்லாது, நீதி மன்றங்களிலும் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. ஒருபுறம் வன்னியர் இடஒதுக்கீடுக்கு ஆதரவாக அரசின் ஒத்துழைப்போடு சகலவிதான சூழ்ச்சிகளையும் முறியடிக்க வேண்டிய கட்டாயம், மறுபுறம் இடஒதுக்கீட்டின் அருமை புரியாத 107 சமுதாய மக்களையும் ஒன்றுதிரட்டிப்போராட வேண்டிய கட்டாயம். இந்த இரண்டு சவால்களையும் எதிர்கொண்டு சென்னை உயர்நீதிமன்றம் தொடங்கி, உச்சநீதிமன்றம் வரை சட்டப்போராட்டம் நடத்தி வெற்றிகான ஒற்றைக்காரணமாக இருந்தவர் எஸ்.காசிமாயன்.

உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டியை பூர்வீகமாகக் கொண்ட திரு.எஸ்.காசிமாயன் எளிய குடும்பத்தில் பிறன்மலைக் கள்ளர் சமூகத்தில் பிறந்து இந்திய ரெவின்யூ சர்வீஸ் (IRS) தேர்வில் வெற்றிபெற்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தில் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். அரசுப்பணியில் இருந்துகொண்டே வெளியே முகம் காட்டாமல் சமுதாயப்பணியையும் தலையில் போட்டுக்கொண்டு செயலாற்றி வருபவர். 1979-க்குப்பின் டிஎன்டி என்பதே என்னவென்று தெரியாத காலத்தில், 2014 முதல் டிஎன்டி சமூகங்களை ஒருங்கிணைக்கும் பணியில் திரைக்குப் பின்னாலிருந்து செயலாற்றி வருபவர்.
2021-இல் கொண்டுவரப்பட்ட வன்னியர் 10.5% இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்திலும், உச்சநீதி மன்றங்களிலும் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் வைத்த சட்டநுணுக்க வாதங்களையெல்லாம் ஒற்றை ஆளாகத் தயார் செய்து வழங்கியவர். இவரின் உரைக்கு வழக்கறிஞர்கள் டப்பிங் குரல் மட்டுமே கொடுத்தனர் என்று சொல்லுமளவிற்கு நீதிமன்றத்தால் புறக்கணிக்கமுடியாத ஆணித்தரமான வாதங்களை முன்வைத்து, வரலாற்றுச்சிறப்புமிக்க தீர்ப்பைப் பெற்றுக்கொடுத்ததில் 100 சதவீதப்பங்களிப்பு திரு.காசிமாயன் என்றால் மிகையல்ல. இவருக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் எவ்வளவோ அடக்குமுறையை ஏவியபோதும் சற்றும் மனம் தளராமல், தனது ஐஆர்எஸ் வேலையைக்கூட தூக்கியெறியத் தயங்காமல் போராடியவர் திரு.காசிமாயன் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது அன்புமகள் கா.ரோஜா - அ.தேவகிருஷ்ணா ஆகியோரது இணையேற்புவிழா பிறன்மலைக்கள்ளர் சமுதாய பாரம்பரிய முறைப்படி மதுரையிலுள்ள ஆகாஷ் பேமிலி கிளப் திருமண மண்டபத்தில் நேற்று (07.09.2025) காலை நடைபெற்றது. இதில் சீர்மரபு பழங்குடியினர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 68 சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளைத் தலைவர் மு.பழனிச்சாமி, மூத்த வழக்கறிஞர் பழனிச்சாமி, சமூகநீதிக்கூட்டமைப்பின் தலைவர் பி.இராமராஜு, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொருளாளர் எஸ்.இராமராஜு ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்தினர்.

