குடியரசு துணைத் தலைவராக சி.பி.ஆர் தேர்வு - கம்பளத்தாரின் வாழ்த்துகள்
இந்தியாவின் இரண்டாவது மிக உட்சபட்ச பதவியான குடியரசு துணைத்தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.இராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொங்குமண்டல கம்பளத்தார்களோடு மிக நெருங்கிய நட்புகொண்டுள்ள சி.பி.இராதாகிருஷ்ணன் குடியரசு துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு இராஜகம்பளத்தார் சார்பில் வாழ்த்து தெருவிக்கப்பட்டுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு,
இந்தியாவின் 14-வது குடியரசுத்துணைத் தலைவராகப் பதவி வகித்துவந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் திடீரென பதவி விலகினார். இதனையடுத்து ஆளும் தேசிய ஜனநாயகக்கூட்டணி வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநரும், தமிழக பாஜகாவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சி.பி.இராதாகிருஸ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் இந்தியாக்கூட்டணி வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன ரெட்டி அறிவிக்கப்பட்டார்.

இதனையடுத்து நேற்று (09.09.2025) துணைஜனாதிபதி தேர்வுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மொத்தம் பதிவான 767 வாக்குகளில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவரை எதிர்த்துப்போட்டியிட்ட இந்தியாக்கூட்டணி வேட்பாளருக்கு 300 வாக்குகள் கிடைத்தது. 15 வாக்குகள் செல்லாத வாக்குகளாக பதிவாகின. ஒருவர் வாக்களிக்கவில்லை. முன்னதாக 2022-இல் பாஜக கூட்டணி வேட்பாளர் ஜகதீப் தன்கர் 528 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றது வரலாற்றில் உட்சபட்ச வெற்றியாகும்.
துணைகுடியரசுத்தலைவராக சிபிஆர் தேர்வு செய்யப்பட்டதையொட்டி அவரது சொந்த ஊரான திருப்பூரில் பாஜகவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக்கொண்டாடினர். வரும் 12-ஆம் தேதி சி.பி.இராதாகிருஷ்ணன் இந்தியாவின் 15-வது துணைக்குடியரசுத் தலைவராக பொறுப்பேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொங்குமண்டலத்தைச் சேர்ந்தவரும், இராஜகம்பள சமுதாய மக்களோடு நெருங்கிய தொடர்புகொண்டவருமான சிபிஆர் அவர்கள் துணைஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டதற்கு வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளைத் தலைவர் மு.பழனிச்சாமி, சமூகநீதிக்கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பி.இராமராஜ் மற்றும் சென்னை ராஜேஷ்குருசாமி, தேனி பொன்.ஆனந்தன், நாமக்கல் பூபதி, திருப்பூர் ரத்தினசாமி, பொள்ளாச்சி தர்மப்பிரகாஷ், வழக்கறிஞர் சுப்புராஜ் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

