🔴 LIVE | முப்பெரும் விழா 2023


காந்தி மண்டபம் வந்தார்! கம்பளத்தார் மனங்களை வென்றார்!

இந்திய சுதந்திரத்திற்கு முதல்முழக்கமிட்ட மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 226-வது நினைவுநாள் நாடெங்கும் எழுச்சியுடன் அனுசரிக்கப்பட்டது. தலைநகர் சென்னையில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வில்  தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு மாவீரன் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தியது தமிழகத்தில் வாழும் 40 லட்சம் கம்பளத்தார்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விவரம் வருமாறு,


வடபுலங்களை எளிதில் வென்று இந்தியாவின் பெரும்பகுதியை விரைவில் கைப்பற்றிய ஆங்கிலேயர்களுக்கு தென்னகத்தில் சிம்மசொப்பனமாக விளங்கியவர்கள் குறுநில மன்னர்களாக பாளையப்பட்டுக்களை ஆண்டுவந்த பாளையக்காரர்கள். பாளையக்காரர்கள் மத்தியில்  சுயமரியாதை உணர்வையும், மக்கள் மத்தியில் விடுதலை உணர்வையும் ஏற்படுத்தியவர் பாஞ்சாலங்குறிச்சியை ஆண்டுவந்த மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன். அந்நியரின் ஆயுதங்களைக்கண்டு அஞ்சாமல் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு வெள்ளையரை வெற்றிகொள்ள முடியும் என்று நம்பிக்கை ஊட்டியவர் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன். இறுதியில் ஆங்கிலேயர்களால் தூக்கிலடப்பட்டாலும் அவர்களின் கண்களில் பயத்தைக்காட்டியவர் கட்டபொம்மன் என்றால் மிகையல்ல.


மாவீரன் கட்டபொம்மனுக்கு எதிராக ஒவ்வொரு காலகட்டத்திலும் எத்தனை எத்தனை அவதூறுகள் பரப்பப்பட்டாலும், அதை சுக்குநூறாக்கி வீரம் என்றால் மக்களுக்கு உடனுக்குடன் நினைவுக்கு வருபவராக கட்டபொம்மன் விளங்குவதற்கு காரணம் அவரின் தியாகம் மட்டுமே.

வரலாற்றிலிருந்து அழித்தொழிக்கப்பட்டு, மண்ணோடு மண்ணாக்கி 175 ஆண்டுகள் புதைக்கி வைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனாரின் தியாகத்தையும், பாஞ்சாலங்குறிச்சி மண்ணின் வீரத்தையும் மீட்டெடுத்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் என்பதை யாரும் மறுத்துவிடமுடியாது. இரண்டுமுறை அழிக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை, நூற்றாண்டுகள் கடந்து மீண்டும் ஒருவர் வந்து கட்டியெழுப்புவார் என்று யாரும் கற்பனை செய்திருக்கமுடியாது. வரலாற்றில் அதை சாத்தியப்படுத்திக்காட்டிய பெருமை கலைஞர் மு.கருணாநிதி அவர்களையே சாரும்.  வரலாற்றில் இந்தப்பெருமை கட்டபொம்மனுக்கு மட்டுமே நடந்துள்ளது என்பது தனிச்சிறப்பு.


தியாகத்தாலும், வீரத்தாலும் வரலாற்றில் நீடித்து நிலைத்துவிட்ட மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாருக்கு தமிழகத்தின் தலைநகராம் சென்னைப்பட்டணத்தில் சிலை வேண்டும் என்பது கம்பளத்தாரின் அரைநூற்றாண்டுக்கனவு. 1974-இல் பாஞ்சாலங்குறிச்சியில் கோட்டை அமைந்தபின்பு வந்த ஆட்சியாளர்கள் பாரபட்சம் காட்டினார்கள் என்று சொல்லமுடியாத அளவிற்கு கலைஞர் மு.கருணாநிதி, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா, புரட்சித் தமிழர் எடப்பாடி க.பழனிச்சாமி என ஒவ்வொருவரும் தங்களது ஆட்சிகாலத்தில்  மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு பெருமை சேர்க்கும்வகையில் ஏதாவது ஒரு திட்டத்தை செயல்படுத்தியே வந்துள்ளனர். 

இவையெல்லாம் அவ்வப்போது போற்றி கொண்டாடப்பட்டாலும், தங்களது ஆதர்ஷ புருசனுக்கு தலைநகர் சென்னையில் சிலையில்லையே என்ற வருத்தமே கம்பளத்தார்களின் மனங்களில் நீடித்த மனக்குறையாக மேலோங்கி இருந்தது. ஒருகட்டத்தில் சமுதாய மக்கள் நம்பிக்கையிழந்திருந்த வேளையில், 2021-சட்டமன்றத் தேர்தலில் தானாக முன்வந்து கட்டபொம்மனுக்கு தலைநகரில் சிலை அமைக்கப்படுமென வாக்குறுதி அளித்தார் இன்றைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை அணுகி காரியம் சாதிக்கக்கூடிய அரசியல் செல்வாக்குமிக்க ஆளுமை கம்பளத்தார் சமுதாயத்தில் இல்லாதநிலையில்,  தேர்தல் வாக்குறுதியை முதல்வர் எப்போது நிறைவேற்றப்போகிறாரோ என்ற அச்சம் நிலவியவேளையில், கட்டபொம்மன் சிலை நிறுவும் அறிவிப்பை தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் வெளியிட்டு மக்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினார். வெற்று அறிவிப்பாக இல்லாமல் குறித்த காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டு தனது பொற்கரங்களால் திறந்தும் வைத்தார்.

இந்நிலையில், தமிழக முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டு, அவரது பொற்கரங்களால் திறக்கப்பட்ட சிலை என்ற பெருமையோடு தலைநகர் மட்டுமல்லாது வெளியூரிலிருந்து சென்னை வரும் கம்பளத்தார்களும் பார்த்துச்செல்லும் சிலையாக கிண்டி கட்டபொம்மன் சிலை இருந்துவருகிறது. ஒவ்வொரு பிறந்தநாள், நினைவு நாட்களின்போதும் அரசு சார்பில் மாவீரன் கட்டபொம்மனாருக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்த அமைச்சர் பெருமக்களும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் முதலமைச்சரால் அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனர். எனினும் மாண்புமிகு முதல்வர் அவர்கள் வருகையே சமுதாய மக்களின் எதிர்பார்ப்பாக இருந்துவந்தது. 40 லட்சம் இராஜகம்பள சமுதாய மக்களின் உள்ளக்கிடக்கை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் உரிய முறையில் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றது.

இதற்கு கைமேல் பலனாக கடிதம்கொடுத்த 48 மணி நேரத்தில்  துணைமுதல்வர், அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகர மேயர், துணைமேயர் உள்ளிட்ட படை பரிவாரங்களோடு  கிண்டி காந்திமண்டபம் வருகை தந்த தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 226-வது நினைவுநாளை முன்னிட்டு, அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.  வீரவணக்கம் செலுத்தவந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை  வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் செ.இராதாகிருஷ்ணன் "பாஞ்சாலங்குறிச்சி போர்கள்" என்ற புத்தகத்தை வழங்கி வரவேற்றார், துணை முதலவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழக பொதுச்செயலாளர் கே.இராமகிருஷ்ணன் அவர்கள் "கட்டபொம்மன் வரலாற்று உண்மைகள்" என்ற புத்தகத்தை வழங்கி வரவேற்றார். 

தமிழகத்தில் வாழும் 40 லட்சம் இராஜகம்பள சமுதாய மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்து, சட்டமன்றக்கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், பல்வேறு பணிகளுக்கு மத்தியில் 48 மணிநேரத்தில் ஒப்புதல் வழங்கி, காந்தி மண்டபம் வருகை தந்து கட்டபொம்மனாருக்கு மரியாதை செலுத்திய தமிழக முதல்வர் இராஜகம்பள சமுதாய மக்களின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்தார் என்றால் மிகையல்ல.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved