🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமூகநீதியின் பெயரால் சமூக அநீதியா? திமுக அரசுக்கு கடும் எதிர்ப்பு!

தமிழ்நாட்டில் இயங்கி வரும் தனியார் சுயநிதி கல்லூரிகள், அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள் ஆகியவற்றை தனியார் பல்கலைக்கழகங்களாக்க (Brown field University) அனுமதிக்கும் வகையில் கொண்டுவந்துள்ள தனியார் பல்கலைக்கழக திருத்த மசோதா 2025 வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் விவரம் வருமாறு,

பழுப்பு பல்கலைக்கழகம் (Brown Field University) என்றால் என்ன? 

பிரவுன்பீல்ட் யுனிவர்சிட்டி என்பது ஏற்கனவே இயங்கிவரும் கல்வி நிறுவனங்களை (அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள்) பல்கலைக்கழகமாக மாற்றுவதைக் குறிக்கும். தமிழ்நாடு சூழலில், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி, பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதி போன்ற அரசு மானியத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள், அரசு நிதியில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், பொதுமக்களின் வரிப்பணத் தில் உருவாக்கப்பட்ட வசதிகள் அனைத்தையும் தனியார் கைகளுக்கு தாரை வார்ப்பது.

உயர்கல்வியை தனியார்மயத்தை நோக்கித் தள்ளும் வகையில், தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்த மசோதா இருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையிலும், இந்த சட்டத் திருத்த மசோதாவை, திமுக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. 2019-ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்டத்தில் மேலும் திருத்தம் செய்வதற்கான சட்ட முன்வடிவு, தமிழக சட்டமன்றத்தில் வியாழனன்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியனால் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தது.

திமுக அரசு கொண்டு வந்திருக்கும் சட்டத் திருத்த முன்வரைவின் அடிப்படையில், தமிழ்நாட்டில் இப்போது செயல்பட்டு வரும் தனியார் சுயநிதி கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் ஆகியவற்றை அவற்றின் நிர்வாகங்கள் விரும்பினால் தனியார் பல்கலைக்கழகங்களாக (பிரவுன்பீல்ட் யுனிவர்சிட்டி) மாற்றிக் கொண்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 30-ஆம் பிரிவின்படி பல்கலைக்கழகங்களாக நிர்வகிக்க முடியும். அவ்வாறு மாற்றப்படும் போது, மருத்துவம் சார்ந்த படிப்புகளை நடத்தும் சிறுபான்மை பல்கலைகள் 50 சதவீத இடங்களையும், சிறுபான்மையினர் அல்லாத பல்கலைக்கழகங்கள் 65 சதவீத இடங்களையும் மட்டும் அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கினால் போதுமானது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் ஆகியவை பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும் போது, அவற்றுக்கு இந்த கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது. பொதுமக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளைப் பெற்றுக்கொள்ளும் நிறுவனங்கள்  அவற்றின் விருப்பம் போல மாணவர்களை சேர்த்து கொள்ளவும், 69 சதவிகித இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டியதில்லை என்பதும் சமூகநீதியை குழிதோண்டிப்புதைக்கும் செயலாக விமர்சிக்கப்படுகிறது.

மேலும், பல்கலைக்கழகங்கள் அமைய நிலத்தின் பரப்பளவை குறைத்திருப்பதால் “பழுப்பு பல்கலைக் கழகங்கள்” - (அதாவது, அரசு உதவி யுடன் உருவான கட்டமைப்பை தனியார் கொள்ளைக்காக மாற்றுவது) அதிக எண்ணிக்கையில் உருவாகும். அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 8,500 கவுரவ விரிவுரையாளர்களை பணியமர்த்தி, 3,000 நிரந்தரப் பேரா சிரியர் பணியிடங்களை கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களாக உருவாக்கியுள்ளது அரசு. இதன் தொ டர்ச்சியாக பழுப்பு பல்கலைக்கழகங்களாக மாற்ற முயற்சிப்பது உயர் கல்விக்கான சமூகக் கடமையிலிருந்து அரசு விலக முயற்சிப்பதாகவே அமையும். இது தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ அமல்படுத்துவதற்கான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

மேலும், கல்விக்கட்டணம் மற்றும் பாடத்திட்டங்கள் விஷயத்தில் தனியார் பல்கலைக்கழகங்களை தமிழக அரசு கட்டுப்படுத்த முடியாது. அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு அரசு நிதி உதவி வழங்குகிறது. அவை பல்கலைக்கழகங்களாக மாறும்போது, இந்த நிதி உதவி தொடருமா என்பது தெளிவாகக் கூறப்படவில்லை. ஆனால், சட்டத் திருத்தத்தில், தற்போது பயிலும் மாணவர்கள் அதே சூழலில் படிப்பை முடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் பொருள், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அரசின் நிதி உதவி நிறுத்தப்படும் என்பதாகும். இதனால், புதிதாக சேரும் மாணவர்கள் அதிகக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். மேலும், பேராசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியமும் குறையக்கூடும். இவை அனைத்தும் சமூக நீதிக்கு துரோகம் இழைக்கும் செயல் என்ற கடும் குற்றச்சாட்டுக்கு அனைவருக்கும் அனைத்தும் என்று சொல்லும் திராவிட மாடல் அரசு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சட்டதிருத்த மசோதாவிற்கு எதிரான அம்சங்களை சுட்டிக்காட்டும் அதேவேளையில்,இச்சட்டதிருத்தத்தின் வாயிலாக  உயர்கல்வியில் தமிழகம் தற்போது சந்தித்துவரும் சவால்களுக்கு ஒரு புதுமையான தீர்வை வழங்குகிறது என்ற ஆதரவு கருத்துகளும் முன்வைக்கப்படுகிறது. அதன்படி 'பிரவுன்ஃபீல்ட் பல்கலைக்கழகங்கள்' எனும் இந்தப் புதிய அமைப்பு, தற்போது இயங்கிவரும் தனியார் மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளை முழுமையான பல்கலைக்கழகங்களாக உயர்த்துவதற்கான வழியைத் திறக்கிறது.

இது, 2019-ஆம் ஆண்டு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் முக்கியப் பிரிவுகளைத் திருத்தி, நிலத் தேவை, இட ஒதுக்கீடு, ஊழியர் பாதுகாப்பு போன்றவற்றில் தளர்வுகளை அளிக்கிறது. இத்திருத்தம், உயர்கல்வியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் ஒரு மைல்கல்லாகும்.

ஒரு முக்கிய சாதக அம்சம், புதிய தனியார் பல்கலைக் கழகங்களுக்கான குறைந்தபட்ச நிலத் தேவையை 100 ஏக்கரிலிருந்து குறைத்திருப்பதாகும். பிரவுன்ஃபீல்ட் பல்கலைக்கழகங்களுக்கு, மாநகராட்சிப் பகுதிகளில் 25 ஏக்கர், நகராட்சி அல்லது பேரூராட்சிப் பகுதிகளில் 35 ஏக்கர், மற்றும் பிற பகுதிகளில் 50 ஏக்கர் போதுமானது. இது, நகரங்களில் நிலம் கிடைப்பது கடினமான சூழலில், பெரிய அளவிலான நிலத் தேடலைத் தவிர்த்து, உள்ளடக்கிய உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி பல்கலைக்கழகங்களை அமைக்க எளிதாக்குகிறது.

அண்டை மாநிலமான கர்நாடகாவின் வெற்றி மாதிரிகளைப் பின்பற்றி, இத்தளர்வு தமிழ்நாட்டின் நகரப்பகுதிகளில் உயர்கல்வி விரிவாக்கத்தை விரைவுபடுத்தும். இதன் மூலமாக, உள்ளூர் உள்கட்டமைப்புகளைப் பயன்படுத்தி, விரைவாகப் புதிய கல்வி நிறுவனங்கள் உருவாகும் – இது பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புகளுக்கும் வழிவகுக்கும்.

மற்றொரு பெரிய சாதகம், சிறுபான்மையினர் அல்லாத தனியார் பல்கலைக்கழகங்களில் மருத்துவம், பல் மருத்துவம், துணை சுகாதாரம் மற்றும் இந்திய மருத்துவப் படிப்புகளில் 65 சதவீத இடங்களையும், சிறுபான்மையினர் பல்கலைக்கழகங்களில் 50 சதவீத இடங்களையும் அரசுக்கு ஒதுக்குவதாகும். இது, ஏழை மற்றும் பின்தங்கிய சமூக மாணவர்களுக்கு உயர்கல்வி அணுகலை வலுப்படுத்துகிறது. தற்போது இயங்கும் கல்லூரிகளைப் பல்கலைக்கழகமாக உயர்த்துவதன் மூலம், இட ஒதுக்கீடு பாதிக்கப்படாமல், அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பயனடையலாம். உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் அவர்கள் கூறியதுபோல், இத்திருத்தங்கள் மாணவர்களின் நலனை முதன்மையாகக் கொண்டவை. இதன் மூலம், தமிழ்நாட்டின் சமூக நீதி கொள்கை வலுவடையும், மேலும் மருத்துவம் போன்ற முக்கியத் துறைகளில் திறமையான மாணவர்கள் அதிகரிக்கும்.

அதேபோல், அரசு உதவிபெறும் நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் சேவை நிபந்தனைகள் மாற்றமின்றி தொடரும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இது, ஊழியர்களுக்கு வேலைநிலை பாதுகாப்பை அளித்து, கல்வித்துறையில் நிலைத்தன்மையை உருவாக்கும். சில எதிர்க்கட்சிகள் இட ஒதுக்கீடு பாதிக்கப்படலாம் என வாதிட்டாலும், இத்திருத்தம் அரசு கோட்டாவை உறுதிப்படுத்தி, ஏழை மாணவர்களைப் பாதுகாக்கிறது என்பதை நிரூபிக்கிறது. இதன் மூலம், கல்வி நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து, தரமான கல்வியை உறுதி செய்யும்.

மாநிலத்தின் எதிர்காலத்திற்கான முதலீடு இத்திருத்தத்தின் மிகப்பெரிய சாதகம், தனியார் கல்லூரிகளைப் பல்கலைக்கழகமாக உயர்த்துவதன் மூலம் தமிழ்நாட்டின் உயர்கல்வி அமைப்பை வலுப்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதாகும். குறைந்த நிலத் தேவையால், விரைவான விரிவாக்கம் சாத்தியமாகும்; அரசு இட ஒதுக்கீட்டால் சமூக அணுகல் அதிகரிக்கும்; ஊழியர் பாதுகாப்பால் திறமையான ஆசிரியர்கள் தக்கவைக்கப்படுவர்.

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தம்) மசோதா, பிரவுன்ஃபீல்ட் பல்கலைக்கழகங்கள் மூலம் உயர்கல்வியின் எதிர்காலத்தைப் பிரகாசப்படுத்துகிறது. நிலத் தேவை தளர்வு, அரசு இட ஒதுக்கீடு, ஊழியர்-மாணவர் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி போன்ற சாதக அம்சங்கள், இத்திருத்தத்தை ஒரு புரட்சிகரமான படியாக்குகின்றன.

அரசுக்கு ஆதரவானோர் சட்டதிருத்தத்தின் சாதக அம்சங்களை எவ்வளவு பட்டியல்போட்டு விளக்கினாலும், தனியார்மயம் என்று வரும்போது உயர்கலவி கல்வி வணிகமாவதைத் தடுக்கமுடியாது . கடந்தகாலத்தில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கியபோது இடஒதுக்கீடு முறைக்கு முடிவு கட்டியதுபோல் உயர் கல்வியிலும் முடிவு கட்டப்படும் என்பதே எதார்த்தம். சமூக அநீதிக்கு வழிவகுக்கும் இந்த சட்ட திருத்த மசோதாவை சமூகநீதியின் பெயரால் நடத்தப்படும் அரசே கொண்டுவந்துள்ளது அக்கட்சிக்கு தீராத கலங்கத்தை உருவாக்கும்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved