வரலாற்றை மாற்றிய தமிழக முதல்வரை நேரில் சந்தித்து நன்றி!
இரண்டு வரலாற்றுச் சாதனைகளை செய்துமுடித்த தமிழக முதல்வரை நேரில் சந்தித்து நன்றி!
மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 226-வது நினைவுநாளை முன்னிட்டு கிண்டி காந்திமண்டப வளாகத்திற்கு நேரில் வருகைதந்து மரியாதை செலுத்திய தமிழக முதல்வரை இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக்கொண்டனர். இதன் விவரம் வருமாறு,
இந்திய வரலாற்றில் முதல் சுதந்திரப்போர் என்று வர்ணிக்கப்படுகிற சிப்பாய்க்கலகத்திற்கு பல பத்தாண்டுகளுக்கு முன்பே விடுதலை முழக்கமிட்டு தன் இன்னுயிர் துறந்த பாஞ்சைப் பெருவேந்தன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 226-வது நினைவுநாள் அக்டோபர்'16 இல் நாடெங்கும் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.
சுதந்திரத்திற்குப்பின் ஆட்சிக்கு வந்த மத்திய, மாநில ஆட்சியாளர்கள் யாராக இருந்தாலும் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் தியாகத்தைப் போற்றத்தவறியதில்லை என்றபோதிலும், தலைநகர் சென்னையில் கட்டபொம்மனுக்கு சிலை இல்லையே என்ற மனக்குறை கம்பளத்தார்கள் மத்தியில் நீண்டநாட்களாக இருந்துவந்தது. இந்த ஒற்றைக் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி கடந்த அரைநூற்றாண்டுகளாக சமுதாய அமைப்புகள் சந்திக்காத அரசியல் கட்சித்தலைவர்களே இல்லை என்ற அளவில், ஒவ்வொரு அமைப்பும் தனது முதன்மைக் கோரிக்கையாக இந்த ஒன்றைமட்டுமே மையப்படுத்தி தமிழக அரசையும், அரசியல் கட்சிகளையும் அணுகி வந்தன. அரசியல் கட்சிகளுக்கும் அதில் உடன்பாடு இருதாலும் நிறைவேற்றுவதில் மட்டும் பல்வேறு காலங்களில் பல்வேறு சூழ்நிலைகளால் நிறைவேற்றப்படாமல் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் நீதிமன்ற தீர்ப்புகள் சிலைகள் வைப்பதற்கு எதிராக இருந்ததால், இனி தலைநகரில் கட்டபொம்மன் சிலை வைப்பதற்கான சாத்தியமே இல்லை என்ற நிலை உருவானது.

இவ்வாறான நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலின்போது திமுக தானாக முன்வந்து சுதந்திரப் போராட்டத்தியாகி வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை அமைப்போம் என தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால் நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி, இது வெற்று அறிவிப்பு, வாக்கு அரசியலுக்காக திமுக போலியான வாக்குறுதி வழங்குவதாக விமர்சனம் எழுந்தது. எனினும் 2021 இல் ஆட்சிக்கு வந்த திமுக, இப்பிரச்சினையை லாவகமாகக் கையாண்டு, நீதிமன்ற தலையீடு இல்லாத வகையில், கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை வைக்கப்படுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவிப்புச் செய்தபின்னர்தான் இராஜகம்பள சமுதாய மக்களின் மனங்களில் மீண்டும் நம்பிக்கை பிறந்தது. முதல்வரின் அறிவிப்பானது வெற்று அறிப்பாக இல்லாமல் போதுமான நிதி ஒதுக்கீடும் செய்து சிலை வருவதை உறுதிப்படுத்தினார். அத்தோடு நிற்காமல் குறித்த காலத்தில் சிலை அமையவும், நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டபோது கூடுதல் நிதி ஒதுக்கியும் கம்பளத்தாருக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தமிழக முதல்வர் உறுதியாக இருந்தார். இறுதியாக தமிழக முதல்வரே நேரடியாக வந்து கட்டபொம்மன் சிலையை திறந்துவைத்தபோது சமுதாய மக்கள் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.
எந்த சட்ட சிக்கலும் இல்லாத காலங்களில் எளிதாக நிறைவேற்றியிருக்கக்கூடிய கோரிக்கை, பல்வேறு சட்டசிக்கலுக்கு மத்தியில் எவ்வித தடங்கலுமின்றி குறித்த காலத்தில் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு இராஜகம்பள சமுதாய மக்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
இதனையடுத்து தமிழக முதல்வராகப்பொறுப்பு வகிக்கும் யாரும் கட்டபொம்மனாரின் பிறந்தநாள், நினைவுநாட்களின்போது நேரடியாக சிலைக்கு மாலை அணிவிக்க வருவதேயில்லை என்ற மனக்குறை இருந்துவந்தது. கட்சி அலுவலகங்களில் அல்லது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணங்களின்போது ஆங்காங்கே கட்டபொம்மனாரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் அரசியல் கட்சித் தலைவர்கள் (மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ தவிர), முதலமைச்சர் பதவியில் இருப்பவர்கள் யாரும், கட்டபொம்மன் சிலை இருக்குமிடம் தேடி வருவதில்லை என்பது சமுதாய மக்களின் மிகப்பெரிய மனக்குறை. சமூக வலைதளங்களின் ஆதிக்கம் வந்தபின் இதுகுறித்து ஒவ்வொரு கட்சி ஆட்சியில் இருக்கும்போதும் எதிர்கட்சி, ஆளும்கட்சி என மாறி, மாறி விமர்சனம் செய்துகொள்வது வெளிப்படையானது.
இந்நிலையில், மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 226-வது நினைவுநாள் அக்டோபர்'16 அனுசரிக்கப்படவிருந்த நிலையில், வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் கடந்த 13.10.2025 அன்று தமிழக முதல்வருக்கு ஒரு கடிதம் வழங்கப்பட்டது. அதில் இராஜகம்பள சமுதாய மக்களின் அரைநூற்றாண்டுக்கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தலைநகர் சென்னையில் சிலை அமைத்துக்கொடுத்து, தனது பொற்கரங்களால் திறந்துவைத்த மாண்புமிகு தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், அம்மாவீரனின் 226-வது நினைவுநாளன்று காந்தி மண்டபம் வருகைதந்து அன்னாரின் தியாகத்திற்கு சிறப்பு சேர்க்க வேண்டும் என்று அக்கடிதத்தில் வேண்டுகோள் வைக்கப்பட்டிருந்தது.
குறுகிய கால இடைவெளியில், சட்டமன்றக்கூட்டத் தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், பல்வேறு பணிச்சூழலுக்கு மத்தியில் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சாமிநாதன் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், சென்னை மாநகர மேயர் ப்ரியா, துணைமேயர் மகேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளோடு காந்தி மண்டபம் வருகை தந்த தமிழக முதல்வர், மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் சிலை பீடத்திற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியதின் மூலம் தமிழக அரசுவிழாவாக நடத்திமுடித்தார்.
இதன் மூலம் தமிழக முதல்வர் பொறுப்பு வகிக்கும் யாரும் கட்டபொம்மனாரின் நினைவுநாளன்று நேரில் வந்ததில்லை வந்ததே இல்லை என்ற விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய வரலாறு படைத்தார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
இதனையடுத்து, தனது ஆட்சிகாலத்தில் இரண்டு வரலாற்றுச் சாதனையைச் சத்தமின்றி செய்துமுடித்துள்ள மாண்புமிகு தமிழக முதல்வரை நேரில் சந்தித்து இராஜகம்பள சமுதாய மக்களின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
கடந்த சனிக்கிழமை (அக்'18) அன்று இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில்குமார் இராமராஜ், துணைத்தலைவர் ஆர்.பெருமாள், மண்டல பொறுப்பாளர் ஆர். ஆறுமுகசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் மாண்புமிகு தமிழக முதல்வரை நேரில் சந்தித்து பொன்னாடை வழங்கி நன்றி தெரிவிக்கும் கடிதத்தை வழங்கி சமுதாய மக்களின் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

