🔴 LIVE | முப்பெரும் விழா 2023


50 ஆண்டுகள் குடியிருந்தாலும் வாடகைதாரருக்கு வீடு சொந்தமாகாது!

வாடைக்கு குடியிருப்போர் எத்தனை ஆண்டுகள் அந்த வீட்டில் வசித்தாலும் வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியாது என்ற வரலாற்றுச்சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். அதாவது ஒருவர் வாடகை வீட்டில் ஐந்து வருடங்கள் வசித்தாலும் சரி, ஐம்பது வருடங்கள் வசித்தாலும் சரி, அதை ஒருபோதும் சொந்த வீடாக உரிமைகோர முடியாது என்று  உச்சநீதிமன்ற வழங்கிய தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பல தொழில்களை விட வாடகைக்கு வீடு கொடுப்பது நிலையான வருமானத்தை தரும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஐடி துறையினர் தவிர வேறு வேலைகளுக்கு மாதசம்பளத்திற்குச் செல்வோர் கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து, இடம் வாங்கி சொந்த வீடு கட்டுவதற்கு குறைந்தபட்சம் 45 வயதைத் தாண்டிவிடுகிறது. அப்போதே தங்கள் ஓய்வுகாலத்தில் ஒரு நிலையான வருமானத்திற்காக தங்கள் கட்டும் வீட்டிலேயே கூடுதலாக ஒரு மாடிகட்டி வாடகைக்கு விடுவது என்பது நாம் அறிந்த ஒன்றே.

இதுதவிர, வசதிபடைத்தோர் ஆங்காங்கே வீடுகளை வாங்கி வாடகைக்கு விடுவதுண்டு. அப்படி வீட்டை வாடகைக்கு விடும் உரிமையாளர்கள் வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள், திரைத்துறையினர், காவல்துறையினர் போன்ற சிலருக்கு அவர்கள் எவ்வளவு வாடகை உயர்த்திக்கொடுக்க முன்வந்தாலும் வாடகைக்குக் கொடுப்பதில்லை. காரணம் பயம் தான். இவர்களுக்கு ஒருமுறை வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டால் பின்பு காலி செய்வது கடினம் என்ற பயம் தான். இதனால் நல்லவர்களுக்குக்கூட வீடு கிடைப்பதில்லை என்ற ஒரு வருத்தம் இருந்தாலும், சமூகத்தில் செல்வாக்கானவர்களாக இருப்பதால் மாதமாதம் வாடகை கொடுப்பதிலிருந்து, காலி செய்வதுவரை பிரச்சினைகளை சந்திக்க வேண்டும் என்ற பயம் ஒவ்வொருவருக்கும் உண்டு. இதற்காக ஆயிரக்கணக்கான வழக்குகள் நீதிமன்றங்களில் நடந்து வருகின்றன. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதுபோல் அமைந்துள்ளது சமீபத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு. இதனால் பல காலமாக இருந்த குழப்பங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாக இருக்கிறது.

சமீபத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், "ஒரு நபர், உரிமையாளரின் அனுமதியுடன் மட்டுமே அந்தச் சொத்தில் (வீட்டில்) வசிக்கிறார் ; எனவே, Adverse Possession விதி இங்குப் பொருந்தாது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. 

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். 

ஜோதி ஷர்மா என்ற வீட்டு உரிமையாளர், தனது வீட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த விஷ்ணு கோயல் என்பவருக்கு எதிராக இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார். 30 ஆண்டுகளாக வாடகைக்கு இருக்கும் கோயல், இப்போது வீட்டைச் சொந்தம் கொண்டாடுவதாகவும், இதனால் அவரை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என வழக்குத் தொடர்ந்தார். 

வாடகைதாரரான கோயல் தனது வாதத்தில், 1980கள் முதல் அவர் தொடர்ந்து அங்கு வசித்து வருவதாகவும், வாடகை செலுத்துவதை நிறுத்திய பிறகும், வீட்டு உரிமையாளர் தன் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால், Adverse Possession விதியின் கீழ் தான் அந்தச் சொத்து தனக்கே சொந்தம் என வாதத்தை முன்வைத்தார்.

லிமிட்டேஷன் சட்டம், 1963இன் கீழ், ஒருவர் 12 ஆண்டுகள் தொடர்ந்து மற்றும் வெளிப்படையாக உரிமையாளரின் அனுமதியின்றி ஒரு இடத்தில் வசித்து அல்லது ஆக்கிரமித்திருந்தால், அந்த நபரே அந்தச் சொத்தின் உரிமையைக் கோர முடியும். இந்த சட்டத்தை மேற்கோள் காட்டியே கோயல் வீடு தனக்கே சொந்தம் என்ற வாதத்தை முன்வைத்தார். 

இதைத் திட்டவட்டமாக மறுத்த ஜோதி ஷர்மா தரப்பு, தொடக்கம் முதலே கோயல் வாடகை கொடுத்தே வசித்து வந்தார் என்றார். மேலும், தனது அனுமதி உடனேயே வசித்து வந்ததால் இந்த இடத்தில் Adverse Possession சட்டத்தின் கீழ் உரிமையாளராக மாற முடியாது என்று வாதிட்டார். 

இந்த வழக்கு கீழமை நீதிமன்றத்தில் ஆரம்பித்து இப்போது சுப்ரீம் கோர்ட் வரை சென்றுவிட்டது. ஒவ்வொரு நீதிமன்றமும் மாறுபட்ட தீர்ப்பை அளித்துவந்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கில்  நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் கே. வினோத் சந்திரன் அமர்வு மிகத் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. 

இதில் வீட்டின் உரிமையாளரான ஜோதி ஷர்மாவுக்கு ஆதரவான தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் 'வாடகை என்பது சட்ட உறவு என்றும், உரிமையாளரின் சம்மதத்துடனேயே ஒருவர் வசிப்பதால், இது Adverse Possession கீழ் வராது என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், நீண்ட காலம் ஒரு வீட்டில் வாடைக்கு இருக்கிறார் என்பதாலேயே... அவர் அந்த வீட்டின் உரிமையாளராக மாற்ற முடியாது என்பதை நீதிபதிகள் தெளிவாகத் தெரிவித்தனர்.

மேலும், பல்வந்த் சிங் Vs பஞ்சாப் மாநிலம் (1986) மற்றும் ரவீந்தர் கவுர் கிரேவால் Vs மன்ஜித் கவுர் (2019) போன்ற வழக்குகளிலும் Adverse Possession கீழ் வர வேண்டுமென்றால், ஒருவர் உரிமையாளர் அனுமதி இல்லாமல் குறிப்பிட்ட சொத்தில் இருந்திருக்க வேண்டும் என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இது வாடகை வீடு தொடர்பான விவகாரங்களில் மிக முக்கியமான ஒரு தீர்ப்பாகக் கருதப்படுகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற தவறான உரிமை கோரல் வழக்குகளைத் தடுக்க உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாகவே இந்த வழக்கில் தீர்ப்பை வழங்கியுள்ளதாகச் சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved