கம்பளத்தார்க்கு கைகொடுப்பாரா அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார்?
இராஜகம்பள தொட்டிய நாயக்கர் சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட சமுதாய சொந்தங்கள் நேற்று (17.10.2025) திங்கள்கிழமை காலை 10.30 மணியளவில் தமிழக முன்னாள் முதல்வரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி திரு.க.பழனிச்சாமி அவர்களை சேலத்திலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, தங்களது சமூகம் சார்ந்த கோரிக்கைகளை வழங்கி, அதை நிறைவேற்றித்தருமாறு கேட்டுக்கொண்டனர். இது குறித்து அதிமுக பொதுச்செயலாரைச் சந்தித்த அமைப்புகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
விஜயநகரப் பேரரசு உருவான காலத்தில் தமிழகத்தில் இருந்த 72 பாளையங்களில் 50 க்கும் மேற்பட்ட பாளையங்களை ஆட்சி செய்த குறுநில மன்னர்களைக் கொண்டிருந்த சமுதாயம் இராஜகம்பளத்து தொட்டிய நாயக்கர் சமூகம். தமிழகத்திலுள்ள 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், ஏறக்குறைய 40 லட்சம் இராஜகம்பள சமுதாயத்தினர் வசித்து வருகின்றனர். இந்திய விடுதலைக்குப்பிறகான இந்த 78 ஆண்டுகளில், தமிழக சட்டமன்றத்திற்கு 16 முறையும், நாடாளுமன்றத்திற்கு 18 முறையும் தேர்தல் நடைபெற்றுளது. இதில் இதுவரை எட்டே எட்டுப்பேர் மட்டுமே சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதிலும் பாளையக்காரர்களின் தொடர்ச்சியாக இருந்த ஜமீன்தார்கள் ஐவரும், சாதாரண விவசாயக் குடும்பங்களில் பிறந்த மூவரும் மட்டுமே சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் சுமார் 60 ஆண்டுகளாக திமுக, அஅதிமுக என இரண்டு திராவிட இயக்கங்கள் மட்டுமே கோலோச்சி வருகின்றன. இந்த இரு கட்சிளும் தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை மூன்றாம் தலைமுறையாக இராஜகம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த பலர் அக்கட்சிகளில் இருந்து வருகின்றனர். இராஜகம்பளத்தார்கள் உறுப்பினர்களாக இல்லாத கிராமங்களோ, கட்சிக்கொடி பறக்காத கிராமங்களோ இல்லை என்ற அளவில் அடர்த்தியாக இவ்விரு கட்சிகளிலும் இன்றுவரை நீடித்துவருகின்றனர். இவ்வாறான நிலையில் 75 -வது ஆண்டு பவளகொண்டாடும் திமுக-விலிருந்து ஒருவர், பொன்விழா காணவுள்ள அதிமுக-விலிருந்து ஒருவர் மட்டுமே இதுவரை சட்டமன்ற மன்ற உறுப்பினராக இருந்துள்ளனர். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக கம்பளத்தார்கள் அதிகமாகவுள்ள மேற்படி கட்சிகள் சார்பில் யாரும் சட்டமன்றத்திற்குள் நுழையவேயில்லை என்பது கவலைக்குறியது.

1996-இல் இருந்து தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் உள்ளாட்சித் தேர்தலின் விளைவாக உள்ளாட்சிப் பிரதிநிதிகளாகும் வாய்ப்பை மட்டுமே இராஜகம்பளத்தார்கள் பெற்றுவருகின்றனர். அதுவும் விவசாயப்பின்னனி கொண்ட சமூகம், தொடர்ச்சியாக நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஒரே கிராமத்தில் கும்பலாக வசித்து வருவது ஆகிய காரணங்களே இந்தக்குறைந்தபட்ச அதிகார வாய்ப்பைச் சாத்தியமாக்கியதே தவிர, அவர்கள் சார்ந்துள்ள அரசியல் இயக்கங்கள் வழங்கிய வாய்ப்புகள் அல்ல என்பதே கசப்பான உண்மை. அதாவது சொந்த செல்வாக்கால் கிடைக்கும் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி, தவிர்க்கவே முடியாமல் கட்சிகளால் கொடுக்கப்படும் கிளைக்கழகச் செயலாளர் பதவி. இவைமட்டுமே கம்பளத்தார்கள் பெற்ற அதிகபட்ச பதவிகளாக இருந்துவருகிறது.
தேர்தல் அரசியலில் தான் இப்படி என்றால் கட்சிப்பதவிகளில் போதிய பிரதிநிதித்துவத்தைப்பெற முடிவதில்லை. பொருளாதார பின்புலத்தைக் காரணத்தைக்காட்டி இராஜகம்பள சமுதாயத்தினர் அதிக அளவில் வசிக்கும் பகுதிகளில் கூட ஒன்றிய அளவிலான தலைமைப் பதவிகள் கட்சிகளில் வழங்கப்படுவதில்லை. 40 லட்சம் மக்கள்தொகை கொண்ட கம்பளத்தார்களில் சமீப காலம் வரை திமுக வில் இருவர், அதிமுகவில் மூவர் மட்டுமே ஒன்றியச் செயலாளர் பதவிகளைப் பெற்றுள்ளனர். எண்ணிக்கைப் பெரும்பான்மை சமூகங்கள் தான் முதன்மை வாய்ப்புகளைப்பெறும் என்பதை ஏற்றுக்கொண்டாலும்கூட, துணைச்செயலாளர், இணைச்செயலாளர் பொறுப்புகள் கூட இராஜகம்பளத்தார் போன்ற சாதி, மொழி சிறுபான்மை சமூகத்தினர் பெறுவதற்குப் போராட வேண்டியுள்ளது. அதேபோல் ஒவ்வொரு கட்சியிலும் எவ்வளவோ துணை அமைப்புகள் இருந்தாலு,ம் அவை ஒன்றின் தலைமைப் பதவிகளைக்கூட பெறமுடிவதில்லை.

அரசியலில் நிலவும் இந்தப்போக்கு இராஜகம்பளத்தார் போன்ற நூற்றுக்கணக்கான வாய்ப்பற்ற சாதி சிறுபான்மை சமூகங்களின் நிறைகுறைகளை அதிகார பீடத்திற்கு கொண்டு சேர்க்கமுடிவதில்லை. இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டையைக் குறிப்பிடலாம். இராஜகம்பள சமுதாய மக்களின் அரசியல் அடையாளமாக க.சுப்பு அவர்கள் இருந்த காலகட்டத்தில், வரலாற்றிலிருந்து அழித்தொழிக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரத்தை அன்றைய முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றதின் அடிப்படையில், மாவீரன் கட்டபொம்மான் கோட்டை மீண்டும் நிறுவப்பட்டத்தின் காரணமாக இராஜகம்பள சமுதாயம் முகவரியைப் பெற்றது. கம்பளத்தாரின் குரல் அதிகாரத்தின் காதுகளுக்கு நேரடியாகச் சென்று சேர்ந்தபோது, அழிக்கப்பட்ட அடையாளத்தை 150 ஆண்டுகள் கழித்து மீட்கமுடிந்த சமுதாயத்தால், அரசியல் ஆளுமையை இழந்தபோது கட்டபொம்மனாருக்கு தலைநகர் சென்னையில் சிலை நிறுவ ஐம்பதாண்டுகாலமானதை கவனத்தில் கொள்ளவேண்டும். அதாவது, சமுதாயத்தினர் பெருமளவு அரசியலில் இருந்தும் உரிய வாய்ப்புகளை பெறமுடியாமல் இருந்துவருகிறது. இதேநிலைதான் பெருஞ்சாதிகள் தவிர்த்த 400க்கும் மேற்பட்ட சாதி, மொழி சிறுபான்மை சாதிகளின் நிலை.
எனவே, தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 5000 முதல் 50000 வாக்குகள் வரை பெற்றுள்ள சமூகத்தின் குரல், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களில் ஒலிக்க வேண்டுமென்பது மக்களின் நீண்டகால விருப்பமாக உள்ளது. இதுபோன்ற சமுதாயத்தின் எதிபார்ப்புகளை அரசியல்கட்சித் தலைமைகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று, இராஜகம்பளத்தார் போன்ற அதிகார வாய்ப்பற்ற சமூகங்களுக்கு கட்சிப்பொறுப்புகள், நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறைகளில் உள்ள பல்வேறு நியமனங்களில் உரிய பிரிதிநிதித்துவம் கிடைப்பதை அரசும், கட்சிகளும் உறுதி செய்யவேண்டும் என்ற அடிப்படையில் ஒருமித்த கருத்துடைய தொட்டிய நாயக்கர் சமுதாய அமைப்புகள் அரசியல் கட்சிகளை அணுக முடிவெடுக்கப்பட்டது.
இதனொருபகுதியாக, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான திரு.மு.க,ஸ்டாலின் அவர்கள் மாவீரன் கட்டபொம்மனாரின் 226 வது நினைவுதினமான கடந்த அக்டோபர் 16 அன்று கிண்டி காந்தி மண்டப வளாகத்திற்கு நேரில் வருகைதந்து கட்டபொம்மனாரின் புகழுக்கு பெருமை சேர்த்ததோடு, கட்டபொம்மனாரின் பிறந்தநாள், நினைவுநாள் எதிலும் இதுவரை தமிழக முதல்வர்கள் யாரும் நேரில்கலந்துகொண்டதில்லை என்ற வரலாற்றை மாற்றியமைத்தார். இதற்கு நன்றி தெரிவித்து வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட கடிதம் வழங்கப்பட்டபோதும் இதே கோரிக்கைகள் வழங்க வலியுறுத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தலைமையை சந்தித்து முறையிடவும் தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான திரு.எடப்பாடியார் அவர்களை தொட்டிய நாயக்கர் சமுதாய அமைப்பினர் சேலத்திலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
அப்போது அதிமுக மூத்த தலைவர் கலாநிதி அவர்களின் ஏற்பாட்டில் வீரபாண்டிய கட்டபொம்மானாரில் பிறந்தநாள் நினைவு நாளின்போது அதிமுக சார்பில் தலைமைக் கழக நிர்வாகிகள் கட்டபொம்மனாருக்கு மரியாதை செய்வதற்கான நிலையணை வெளியிடப்பட வேண்டும் என்ற வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் வைத்த கோரிக்கையை உடனடியாக ஏற்று அறிவிப்பு வெளியிட்டமைக்கு கம்பளத்தார் சமுதாயத்தின் சார்பில் நன்றி தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளருக்கு தனிக் கடிதம் வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, கட்சி அளவில் கம்பளத்தாருக்கு உரிய பிரதிநித்துவம், தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 சீர்மரபு வகுப்பினர் ஒற்றை சாதிச் சான்றிதழ் பெறுவதில் நீடித்து வரும் சிக்கல், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய வாக்குறுதிகள் குறித்து சமுதாயத்தலைவர்கள் அதிமுக பொதுச்செயலாளரிடம் எடுத்துரைத்தனர். இச்சந்திப்பில் கலந்துகொண்ட அனைத்து அமைப்புகளின் கோரிக்கைகளும் ஒரே இடம்பெற்றுள்ளதை கனிவுடன் கவனித்து கேட்டறிந்து மனுவைப் பெற்றுக்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர், மனுக்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
எதிர்க்கட்சித் தலைவருடனான தொட்டிய நாயக்கர் சமுதாய அமைப்புகளின் சந்திப்புக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேடசந்தூர் பரமசிவம், அதிமுக ஒன்றியச் செயலாளர் அரவக்குறிச்சி கலையரசன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். மேலும், இந்த சந்திப்பின்போது அதிமுக மூத்த தலைவர் கலாநிதி, ஒன்றியச் செயலாளர் கண்ணன், எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் அ.காசிராஜன், மதுக்கரை அம்மா பேரவைச் செயலாளர் சிவசாமி, மு.மாவட்டக்குழு உறுப்பினர் நாகராஜன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் சிறப்பான ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.
சமுதாய அமைப்புகள் சார்பில் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழக மாநிலத் தலைவர் பி.எஸ்.மணி, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் செ.இராதாகிருஷ்ணன், தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளைத் தலைவர் மு.பழனிச்சாமி, அஹிம்சா சோசலிஸ்டு தலைவர் காந்தியவாதி ரமேஷ், கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ் மற்றும் சமுதாயத் தலைவர்கள் கரூர் சின்னசாமி, நாமக்கல் முத்துச்சாமி, கோவை கணேஷன், திண்டுக்கல் செல்லத்துரை, செல்வராஜ், அன்பழகன், தேனி சேகர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இருந்து நூற்றி ஐம்பதிற்கும் மேற்பட்டோர் அதிமுக பொதுச்செயலாளருடனான சந்திப்பில் கலந்துகொண்டனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

