பாஜக மாநிலச் செயலாளராக வழக்கறிஞர் வை.பெ.தனபால் நியமனம்!
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மிகமுக்கியப் பிரிவுகளில் ஒன்றான வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் பதவிக்கு இராஜகம்பள சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் வாழும் 40 லட்சம் கம்பளத்தார்களுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவம் வழங்காமல் பாராமுகம் காட்டிவந்த பிரதான அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை இழந்துவந்த கம்பளத்தார்களுக்கு மாநில அளவிலான பதவி வழங்கி நம்பிக்கை வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது பாஜக. இதன் விவரம் வருமாறு,
சாதி. மொழி சிறுபான்மை சமூகங்களில் இராஜகம்பளத்தார் சமூகம் ஒரு தனிப்பெரும் சமூகமாக உள்ளது. தமிழகத்தில் இருந்த 72 பாளையங்களில் 60-க்கும் மேற்பட்ட பாளையங்களை ஆட்சி செய்த வரலாற்றுக்கு சொந்தமானது. சுதந்திரத்திற்குப் பிந்தைய தேர்தல் ஜனநாயக அரசியலில் உரிய பிரதிநிதித்துவமின்றி 75 ஆண்டுகளாகத் தவித்து வருகிறது. அரசியல் கட்சிக்கொடி பறக்காத கம்பளத்தார் கிராமங்களே இல்லை என்ற அளவில் அரசியலில் இரண்டறக் கலந்திருந்தும் இதுதான் நிலை என்பது வேதனையானது. தெலுங்கு மொழி பேசும் இரண்டாவது பெரிய சமூகமான தொட்டிய நாயக்கர் சமூகம், 20 -க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 50 முதல் 60 தொகுதிகளில் 5000 முதல் 50000 வாக்காளர்களைக் கொண்டிருந்தும் பிரதான அரசியல் கட்சிகள் உரிய பிரதிநிதித்துவம் வழங்காமல் புறக்கணித்தே வருகின்றன.

இந்தியாவிலேயே சமூகநீதி பேசும் திராவிட இயக்கங்களின் ஆட்சியில் தான் ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான திட்டங்கள் வகுத்து மேன்மையடையச் செய்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. அதேபோல் திமுக, அதிமுக கட்சிகள் ஆட்சியில் இருந்தபோதெல்லாம் போட்டி போட்டுக்கொண்டு கட்டபொம்மனாருக்கும், விருப்பாச்சி கோபால நாயக்கருக்கும் சிறப்பு செய்துள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லை.
எனினும் கல்வி, வேலைவாய்ப்புகளில் அனைத்து சமூகங்களுக்குமான சமூகநீதியைப் பின்பற்றும் திராவிடக் கட்சிகள் இரண்டும் ஆட்சி, அரசியல் என்று வந்துவிட்டால் சாதி பெரும்பான்மை, மத சிறுபான்மை சமூகங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கின்றன. சரிபாதி மக்கள்தொகை கொண்ட சாதி, மொழி சிறுபான்மை சமூகங்களின் எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல், பொருளாதார வலிமையை மட்டுமே கணக்கில்கொண்டு ஒருசில சமூகத்தினருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கிவிட்டு சமூகநீதிக் கணக்கை முடித்துக் கொள்வது வேதனையான விசயம். இதுகுறித்து கேள்வி எழுப்பினால் மழுப்பலான பதிலே வருகிறது. வாரியங்கள், அறநிலையத்துறை, அரசு வழக்கறிஞர் போன்ற நேரடி நியமனங்களில் நூற்றுக்கணக்கான வாய்ப்புகள் இருந்தாலும் அவை எதுவும் தங்கள் கட்சியிலுள்ள வாய்ப்பற்ற எளிய சமூகத்தினருக்கு வழங்கப்படுவதில்லை.
ஆனால் தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் பாரதிய ஜனதா கட்சி, சமூகநீதி இயக்கங்கள் எந்த இடத்தில் கோட்டை விட்டுள்ளதோ அதையெல்லாம் "சோசியல் இஞ்சினியரிங்" என்ற பெயரில் சரி செய்கிறது. இதன் பலனாக ஒவ்வொரு சமூகங்களையும் அடையாளங்கண்டு அரசியல் மயப்படுத்தி வருகிறது.
திராவிட இயக்கங்கள் கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு கொள்கைகளை முன்வைத்து ஒட்டுமொத்த சமூகங்களையும் சமத்துவப்படுத்துகிறது. ஆனால் பாஜகவின் செயல்திட்டம் இடஒதுக்கீட்டுக்கொள்கைக்கு நேரெதிரானது என்றாலும், ஒவ்வொரு சமூகங்களையும் தேடித்தேடி கண்டுபிடித்து அரசியல் வாய்ப்புகளை வழங்கி கவரப்பார்க்கிறது. இது பல மாநிலங்களில் வெற்றியைக் கொடுத்துள்ளது போல் தமிழகத்திலும் பலனளிக்கும் என்று நம்புகிறது. ஏனெனில் களத்தில் வேலை செய்ய அரசியல்வாதிகள் தான் தேவைப்படுகிறார்கள். அவர்கள் தான் மக்கள் மத்தியில் தாக்கத்தை உருவாக்கமுடியும் என்று நம்புகிறர்கள்.
சமூகநீதி திட்டங்களால் பயன்பெற்றவர்கள் தாங்கள் கடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்ப்பதில்லை. குறிப்பாக இடஒதுக்கீடே தேவையில்லை என்ற மேட்டுக்குடி மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள். மக்களின் இந்த மனமாற்றத்தை பாஜக உணர்ந்துள்ளதுபோல் திராவிடக் கட்சிகள் உணர்ந்து செயல்படுவதாகத் தெரியவில்லை. அதற்காக இடஒதுக்கீடு தேவையில்லை என்பதாகப் பொருள் கொள்ளத்தேவையில்லை. அனைத்து இடங்களிலும், துறைகளிலும் சமூகநீதி பின்பற்றப்பட வேண்டும் என்பதே வலியுறுத்தப்படுகிறது.
எது எப்படியிருந்தாலும் இராஜகம்பள சமுதாய மக்களின் மன எண்ணவோட்டத்தை அறிந்து பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டு வருவது கவனத்தைப் பெறுகிறது. ஏற்கனவே தமிழகத்தின் பல பகுதிகளில் இளைஞர்கள் பலருக்கும் கட்சிப்பொறுப்பு வழங்கியுள்ள நிலையில், தற்போது இராகம்பள சமுதாயத்திற்காக அரும்பங்காற்றிய இராஜகம்பள மகாஜன சங்கத்தின் முன்னாள் தலைவர் அமரர் வையப்ப நாயக்கர் அவர்களின் மகன் வழிப்பெயரனான வழக்கறிஞர் வை.பெ.தனபால் M.A., B.L., அவர்களுக்கு மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பதவி வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது. இவர் ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சியின் விருதுநகர் கிழக்கு மாவட்டத் தலைவராக பணியாற்றி வந்த நிலையில், தென்னக ரயில்வே அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று (28.11.2025) தற்போது மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தனபால் அவர்களை வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளராக நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
இராஜகம்பள சமுதாயத்தின் பெருந்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த தன்பால் அவர்களின் தந்தையார் வை.பெருமாள் நாயக்கர் மேலமுடி மன்னார் கோட்டையின் ஊராட்சி மன்றத் தலைவராகவும், ஒன்றியக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
40 லட்சம் இராஜகம்பள சமுதாயத்தினருக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவம் வழங்கிவரும் தமிழக பாஜக தலைமைக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளையில், வை.பெ.தனபால் அவர்கள் அரசியலில் மேலும் பல உயரங்களைத்தொட வாழ்த்துவோம்.

