🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பாஜக கோட்டப் பொறுப்பாளராக வழக்கறிஞர் வை.பெ.தனபால் நியமனம்!

பாரதிய ஜனதா கட்சியில் அமைப்பு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த கோட்டப்பொறுப்பாளர் பதவியில் நமது இராஜகம்பள சமுதாயத்திற்காக வாழ்நாளெல்லாம் உழைத்த அமரர்.வையப்ப நாயக்கர் அவர்களின் பெயரன் திரு.பெ.தனபால் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே பதினைந்து தினங்களுக்கு முன் பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதல் பொறுப்பாக கோட்டப்பொறுப்பாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் முழுவிவரம் வருமாறு,

இராமநாதபுரம் மாவட்டம், மேலமுடி மன்னார் கோட்டையைச் சேர்ந்தவர் அமரர்.வையப்ப நாயக்கர். 1950-இல் இராஜகம்பள மகாஜன சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டு, தன் இறுதி காலம் வரை சமுதாயப்பணியாற்றியவர். பெருந்தலைவர் காமராஜருடன் இருந்த நெருங்கிய நட்பின் காரணமாக, அவர் முதல்வராக இருந்தபோது, கத்தியின்றி இரத்தமின்றி, எவ்விதப் போராட்டமுமின்றி, தொட்டிய நாயக்கர் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் காரணமாக விளங்கியவர் வையப்ப நாயக்கர் என்பதை, இடஒதுக்கீட்டால் பயன்பெற்று, இன்று உயர்ந்த நிலையில் இருக்கின்ற ஒவ்வொரு கம்பளத்தாரும் நினைவில் கொள்ளவேண்டியது அவசியம். இப்படி, தனது தனிப்பட்ட நட்பை சமுதாய மேம்பாட்டிற்காக பயன்படுத்திய வையப்ப நாயக்கரின் மகன் வழிப்பெயரனான வை.பெ.தனபால், M.A., B.L., B.Ed., பட்டம் பெற்று விருதுநகரில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார்.


மாணவப் பருவத்திலிருந்தே தேசியப்பார்வை கொண்ட தனபால், பாரதிய ஜனதா கட்சியில் அடிப்படை உறுப்பினராக இணைந்து பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். அரசியலில் படிப்படியாக தன்னை உயர்த்திக்கொண்டே வந்த வழக்கறிஞர் தனபால், சில வருடங்களுக்கு முன்பு விருதுநகர் கிழக்கு மாவட்ட பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். அதனையடுத்து, தென்னக ரயில்வேயின் மத்திய அரசு வழக்கறிஞர் என்ற கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், பாஜக-வின் புதிய மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டதின் தொடர்ச்சியாக, உட்கட்சி அமைப்பு ரீதியான மாற்றங்கள், புதிய நியமனங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்த மாற்றங்களின் அடிப்படையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வை.பெ.தனபால் பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக, தற்போது விருதுநகர் கிழக்கு, விருதுநகர் மேற்கு மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு கோட்டப் பொறுப்பாளராக நியமனம் செய்து அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இதனையடுத்து, வழக்கறிஞர் தனபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக பாஜகவின் விருதுநகர் கிழக்கு, மேற்கு மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு கோட்டப் பொறுப்பாளராக தன்னை நியமனம் செய்த மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் M.L.A., மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் திரு.கேசவ விநாயகம் ஜி, வழக்கறிஞர் பிரிவு மாநிலத் தலைவர் திரு.ஆதி.குமரகுரு மற்றும் விருதுநகர் கிழக்கு மாவட்டத் தலைவர் பென்டகன் திரு பாண்டுரங்கன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மற்றும் மாநிலத் தலைமைகளின் நம்பிக்கையைப்பெற்று, அரசியலில் படிப்படியாக தன்னை உயர்த்திக்கொண்டு வரும் வழக்கறிஞர் வை.பெ.தனபால் அவர்களுக்கு, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் செ.இராதாகிருஷ்ணன், நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளைத் தலைவர் மு.பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved