தொடங்கியது விருப்பமனு விநியோகம் - தலைநகருக்கு படையெடுக்கும் கம்பளத்தார்கள்!
2026 - இல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் விருப்பமனு விநியோகத்தைத் தொடங்கியுள்ளன. இதனையடுத்து அக்கட்சிகளிலுள்ள இராஜகம்பள சமுதாயத் தலைவர்கள் விருப்பமனுவைப் பெறுவதற்காக சென்னைக்குப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதன் விவரம் வருமாறு,
தமிழகத்தில் 17-வது சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் முழுவீச்சில் தயாராகிவருகின்றன. ஆளும்கட்சியான திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சியில் 2019 முதல் மிகவும் இணக்கமாக இருந்து தேர்தல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்தத் தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்பதைக் கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொருமுறையும் தெளிவுபடுத்தி வருகின்றன. எனவே இக்கூட்டணியில் கூடுதலாகக் கட்சிகள் இணையுமே தவிர, பிரிந்து செல்வதற்கான வாய்ப்பு மிகக்குறைவாகவே இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
எதிர்கட்சி வரிசையில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 2019, 2021 மற்றும் 2024 ஆகிய மூன்று தேர்தல்களிலும் கூட்டணியில் பல மாற்றங்கள் நடந்துள்ளது. தற்போதைய நிலையில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில் பிற கட்சிகளை இணைப்பது சுணக்கமாகவே இருந்து வருகிறது. எனினும் இப்பிரச்சினைகள் அனைத்து ஜனவரி இரண்டாவது, மூன்றாவது வாரத்திற்குள் சரிசெய்யப்பட்டு விடும் அக்கட்சி வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.
இதற்கிடையே கூட்டணி இறுதி செய்வதற்கு முன்பாகவே சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட விரும்புவர்களிடமிருந்து விருப்பமனு பெறத்தொடங்கியுள்ளது அதிமுக. இதை ஒரு யுக்தியாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். கூட்டணி உறுதி செய்யப்பட்டால் சீட் கேட்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து, கடும் போட்டி நிலவும். சீட் கிடைக்காதவர்கள் அதிருப்தியில் அணி மாற வாய்ப்புள்ளது. எனவே கூட்டணி இறுதி செய்வதற்கு முன்பே விருப்பமனு பெற்றுவிட்டால் நெருக்கடி குறையும் என்று அதிமுக தலைமை நினைப்பதாகச் சொல்லப்படுகிறது.
அதன்படி நேற்று (15.12.2025) முதல் அதிமுகவில் விருப்பமனு விநியோகம் தொடங்கியுள்ளது. இது ஒருவாரகாலம் 23ஆம் தேதிவரை வழங்கப்படுமென அக்கட்சி அறிவித்துள்ளது. அதேபோல் டிடிவி தினகரனின் அமமுகவும் விருப்பமனு விநியோகத்தைத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே கூட்டணி அறிவிப்புக்கு முன்பே விருப்பமனு விநியோகம் தொடங்கியுள்ளதால், பதவியை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு கட்சியில் இருப்பவர்கள் குழப்பமான மனநிலையில் உள்ளனர். அதேவேளையில், கட்சியின் உண்மை விசுவாசிகள் இதைத் தங்களுக்கான வாய்ப்பாகக் கருதி விருப்பமனுவைப் பெற்று வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக அதிமுகவில் உள்ள இராஜகம்பள சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் இத்தேர்தலில் விருப்பமனு அளிக்க மிகுந்த ஆர்வம்காட்டி வருகின்றனர். இதுவரை கிடைத்துள்ள தகவலின்படி 10-க்கும் மேற்பட்டோர் விருப்பமனு அளிக்க இருப்பதாகத் தெரியவருகிறது.

