ஒரேநாளில் ஐவர் விருப்பமனு - சட்டமன்றத்திற்குள் நுழையும் முனைப்பில் கம்பளத்தார்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ள நிலையில், அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டும் இராஜகம்பளத்தாரின் எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத அளவில் அதிகரித்துள்ளது. இதன் விவரம் வருமாறு,
அடுத்து ஆட்சியமைக்கும் நோக்கோடு சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் காத்திருக்கும் நிலையில், கட்சித் தொண்டர்களும் தேர்தலில் போட்டியிட மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். எல்லோரையும் முந்திக்கொண்டு அமமுக கட்சியினரிடமிருந்து விருப்பமனு பெறுவதற்கான அறிவிப்பு வெளியிட்டது. அதனையடுத்து பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் டிசம்பர் 15 முதல் விருப்பமனு வழங்கிய நிலையில் நேற்றுடன் அது நிறைவுபெற்றுள்ளது. விருப்பமனு விநியோகம், திருப்பியளிக்கும் வைபவங்கள் நடக்கும் இறுதிநாளான நேற்று அதிமுக கூட்டணிக்கட்சியான பாஜக மேலிடப்பொறுப்பாளர் அதிமுக பொதுசெயலாளரைச் சந்தித்துள்ளது என அரசியல் வட்டாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இராஜகம்பளத்தாரைப் பொறுத்தவரை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மட்டுமே ஆர்வம் காட்டிவந்த நிலைமாறி, முதல்முறையாக இந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மிகுந்த ஆர்வம் காட்டிவருவது தெரியவருகிறது. விருப்பமனு அளிப்பதற்கான கடைசிநாளாக 23-ஆம் தேதிக்கு முந்தையநாளான 22 ஆம் தேதி மட்டும் இராஜகம்பள சமுதாயத்தைச் சேர்ந்த 5 பேர் விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளது மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, இராஜகம்பள சமுதாயத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நகர மன்றத் தலைவருமான திரு.கலாநிதி, மு.மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திரு.நாகராஜன், ஒன்றியச் செயலாளர் திரு.கண்ணன், நகரமன்ற உறுப்பினர் திரு.சரவணன் மற்றும் திரு.திலீப்குமார் ஆகியோர் விருதுநகர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்தனர்.
இதற்கிடையே கடைசிநாளான நேற்று (23ஆம் தேதி) முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆர்.வரதராஜன் அவர்கள் விருப்பமனு அளித்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் அதிமுக அதிகாரப்பூர்வ தகவலின்படி 9200 பேர் விருப்பமனு அளித்துள்ளதாக தெரியவருகிறது. மிக அதிகமாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடியார் போட்டியிட வேண்டுமென அவரது சார்பில் கட்சியினர் விருப்பமனு அளித்துள்ளனர். மேலும், அவரவர் சார்ந்த தொகுதியில் மட்டுமே விருப்பமனு அளிக்க வேண்டுமென்ற புதிய கட்டுப்பாடு காரணமாக ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் விருப்பமனு அளிப்பது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன,
இராஜகம்பளத்தாரைப் பொறுத்தவரை முன்பெப்போதுமில்லாத அளவில் பத்துக்கும் மேற்பட்டோர் அதிமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இதுவரை உள்ளூர் அரசியல் மட்டுமே செய்துவந்த நிலை மாறி மாநில அரசியலில் கவனம் செலுத்தும் வகையில் விருப்பமனு வழங்கியுள்ள இராஜகம்பளத்தார் அனைவருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் செ.இராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துக்கொண்டுள்ளார்.

