இனி அர்த்தமற்றதா மருத்துவப்படிப்பு? - மருத்துவம் பார்க்கவரும் ஆப்டிமஸ் ரோபோக்கள்.
"என் பிள்ளை ஒரு டாக்டர் ஆக வேண்டும், சமூகம் எங்களை அண்ணாந்து பார்க்க வேண்டும்" - இது பல பெற்றோர்களின் நீண்டகால ஆசை.
ஆனால், உலகப் புகழ்பெற்ற பணக்காரர் எலோன்மஸ்க் சமீபத்தில் வெளியிட்ட கருத்துக்கள், இந்த ஆசைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப் போகின்றது.
AI-யால் இயங்கும் ரோபோக்கள், குறிப்பாக டெஸ்லாவின் ஆப்டிமஸ், மூன்று ஆண்டுகளுக்குள் மனித அறுவை சிகிச்சை நிபுணர்களை விட சிறப்பாக செயல்படக்கூடும் என்பதால், மருத்துவப் பள்ளிக்குச் செல்வது "அர்த்தமற்றதாக" மாறக்கூடும் என்று எலோன் மஸ்க் சமீபத்தில் கூறினார்.
மனித மருத்துவர்கள் நீண்ட நேர வேலைக்குப் பின் சோர்வடையலாம், மன அழுத்தத்திற்கு உள்ளாகலாம்; ஆனால் ரோபோக்களுக்கு சோர்வு கிடையாது. அவை ஒரு மில்லிமீட்டர் அளவில் கூட தவறு செய்யாமல் அறுவை சிகிச்சைகளைச் செய்யும். மருத்துவம் அறிவார்ந்த இயந்திரங்களை நிர்வகிப்பதை நோக்கி மாறும் என்பது அவரது கருத்து.
இதுவரை மருத்துவத் துறை என்பது ஒரு ‘பாதுகாப்பான’ வேலையாகப் பார்க்கப்பட்டது. ஆனால் AI தொழில்நுட்பம் இந்த வேலையை முற்றிலுமாக பறிக்க இருக்கிறது.
ஒரு காலத்தில் ஒரு மருத்துவமனையில் 50 மருத்துவர்கள் செய்த வேலையை, எதிர்காலத்தில் ஒரே ஒரு AI மென்பொருளும், இரண்டு தொழில்நுட்ப வல்லுநர்களும் செய்துவிடுவார்கள்.
பல கோடி ரூபாய் செலவு செய்து மருத்துவப் பட்டம் பெற்ற பிறகு, தங்களுக்குக் கிடைக்கும் ஊதியம் ஒரு சாதாரணத் தொழிலாளியின் ஊதியத்தை விடக் குறைவாக இருப்பதை எதிர்கால மருத்துவர்கள் உணரப்போகிறார்கள்.
செயற்கை நுண்ணறிவு (AI) நோய்களைக் கண்டறிந்து மருந்துகளைப் பரிந்துரைக்கத் தொடங்கும்போது, மருத்துவர்களின் தேவை இல்லாமல் போகும். படித்துவிட்டு வேலையின்றி, கையில் பட்டத்துடன் உணவிற்காக மற்றவர்களிடம் கையேந்தும் ஒரு பரிதாபகரமான நிலைக்கு எதிர்கால மருத்துவர்கள் தள்ளப்படலாம்.
பெற்றோர்களே, நீங்கள் இன்று கோடிக்கணக்கில் வரதட்சணை வாங்கலாம் என்று கனவு காண்கிறீர்கள். ஆனால் எதிர்காலத்தில் "வேலையில்லாத டாக்டர்" என்ற அடையாளம் திருமணச் சந்தையில் ஒரு சுமையாகவே பார்க்கப்படும்.
தொழில்நுட்பம் மருத்துவரின் சமூக அந்தஸ்தை ஒரு "இயந்திர இயக்குனராக" (Machine Operator) குறைக்கும்போது, நீங்கள் எதிர்பார்க்கும் கௌரவமும் கிடைக்காது, வரதட்சணையும் கைகூடாது.
இன்று நீங்கள் மருத்துவப் படிப்புக்காக செலவிடும் கோடிக்கணக்கான ரூபாய், எதிர்காலத்தில் எந்தப் பலனையும் தராத ஒரு நஷ்டமான முதலீடாக மாறப்போகிறது.
எலோன் மஸ்க்கின் Neuralink போன்ற திட்டங்கள் மனித மூளையையே கணினியுடன் இணைக்கும்போது, மனித மருத்துவர்களின் ஆலோசனை என்பது தேவையற்ற ஒன்றாக மாற இருக்கிறது.
பெற்றோர்களே, உலகம் மாறுகிறது, காலாவதியான கனவுகளுக்காக உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பணையம் வைக்காதீர்கள்.
மருத்துவம் என்பது இனி ஒரு "பணக்காரத் தொழில்" அல்ல. அது ஒரு "தொழில்நுட்பத்தால் ஆக்கிரமிக்கப் போகும் துறை".
உங்கள் பிள்ளைகளைத் தகவல்களை மனப்பாடம் செய்யும் மருத்துவர்களாக்காமல், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் சிந்தனையாளர்களாக மாற்றுங்கள். இல்லையெனில், நீங்கள் கண்ட கனவு உங்கள் பிள்ளைகளை நடுவீதியில் கொண்டு வந்து நிறுத்தும் அபாயம் இருக்கின்றது.
இப்படி அச்சுறுத்தும் கருத்துகள் சமூகத்தில் முன்வைக்கப்படுவதைப் பரவலாகப் பார்க்கமுடிகிறது.
எனினும், எலோன் மஸ்க்கின் இந்தக்கூற்றிற்கும், அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் கருத்துகளுக்கும் கடுமையான எதிர்வினைகளும் இருக்கவே செய்கிறது. மருத்துவர் ஒருவர் நோயாளியின் கரங்களை பரிதாபத்துடனும், வாஞ்சையுடன் பற்றுவதிலிருந்தே மருத்துவம் தொடங்குகிறது. மருத்துவரின் அன்பையும், ஸ்பரிசத்தையும் ஒரு இயந்திரத்தால் வழங்கமுடியாது என்ற பார்வை பிரதானமாக முன்வைக்கப்படுகிறது.

