திருமதி கனிமொழி கருணாநிதியிடம் இராஜகம்பளத்தார் கோரிக்கை மனு அளிப்பு!
திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவிடம் திமுக தேர்தல் அறிக்கையில் இராஜகம்பள தொட்டிய நாயக்கர் சமூகம் சார்ந்து இடம்பெறவேண்டிய அம்சங்கள் குறித்து தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகம் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்த விவரம் வருமாறு,

1971 தேர்தலுக்குப்பின், திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ச்சியாக இருமுறை சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்ததில்லை என்ற விமர்சனத்திற்கு, 2026 சட்டமன்றத் தேர்தலில் வெல்வதின் மூலம் முற்றுப்புள்ளி வைக்க திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், அதிதீவிரமான முயற்சி செய்துவருகிறார் என்பது அனைத்து அரசியல் நோக்கர்கள் மற்றும் விமர்சகர்கள் பார்வையாக உள்ளது. இதற்காக ஒவ்வொருநாளும், ஒவ்வொரு மணித்துளியையும் மிக மிகத் திட்டமிட்டு பணியாற்றி வருகிறார் திமுக தலைவர். தினந்தோறும் சுற்றுப்பயணங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள், திறப்புவிழா நிகழ்ச்சிகள் என அரசு சார்ந்த நிகழ்சிகள் தவிர, கட்சி சார்பில் இளைஞரணி, மகளிரணி, வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடுகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், சட்டமன்றத் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளைச் சந்திக்கும் "ஊடன்பிறப்பே வா" நிகழ்ச்சி, காணொளிக் கூட்டங்கள், கூட்டணிக்கட்சிகளின் நிகழ்ச்சிகள், தன் சொந்தத்தொகுதி நிகழ்ச்சிகள், தனியார் அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகள், புத்தகக் கண்காட்சி, நூல் வெளியீடு, சுப, துக்க நிகழ்ச்சிகள் என 24 நான்கு மணிநேரமும், காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு, தனது 72 வயதிலும் சுற்றிச்சுழன்று வரும் முதல்வரின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது.

இந்நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை பிரதானக் கட்சிகள் வழங்கும் தேர்தல் அறிக்கை அகில இந்திய அளவில் முக்கிய இடத்தைப் பெறுவதை நாம் சமீபகாலங்களில் கண்கூடாகப்பார்த்து வருகின்றோம். தேர்தல் அறிக்கைகள் சட்டமன்றத் தேர்தல்களில் தங்கள் கூட்டணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்வதில் முக்கியப்பங்காற்றியுள்ளதாக கட்சிகள் நம்புகின்றன. 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெறுவதற்கு, அக்கட்சியின் தேர்தல் அறிக்கைதான் கதாநாயகனாக விளங்கியது என்று பலராலும் போற்றப்படக்கூடிய அளவிற்கு "இலவச வண்ணத்தொலக்காட்சி" அறிவிப்பு பிரதானப்பங்காற்றியது யாரும் மறந்துவிட முடியாது. அன்று தொடங்கி 2021 சட்டமன்றத் தேர்தல்வரை "இலவச மிக்சி, கிரைண்டர், ஸ்கூட்டர், மகளிர் உரிமைத்தொகை" போன்ற, தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்ட அம்சங்கள் அக்கட்சிகள் அரியணை ஏற பெருமளவில் உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சட்டமன்றத் தேர்தலானாலும், நாடாளுமன்றத் தேர்தலானாலும், தேர்தல் அறிக்கை வெளியிடுவதிலும், அதை நிறைவேற்றுவதிலும், எப்பொழுதும் முனைப்புக்காட்டக்கூடிய இயக்கமாகவும், இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய கட்சியாகவும் இருந்துவருவது திராவிட முன்னேற்றக் கழகம் என்றால் அது மிகையல்ல. அதேபோல், அறிவில் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கையாள்வதிலும், பயன்படுத்திக்கொள்வதிலும் இந்தியாவில் எந்தக்கட்சியோடும் ஒப்பீடு செய்துகொள்ள முடியாத அளவிற்கு திமுக முன்னனியில் உள்ளது. அதற்கு சமீபத்திய உதாரணம், எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில், எல்லா மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகள் செய்வதறியாது முடங்கிக்கிடந்த நிலையில், திமுக ஒருபுறம் சட்டப்போராட்டத்தை நடத்திக்கொண்டே, இதற்கென சிறப்பு செயலியை உருவாக்கி தேர்தல் ஆணையத்தையும், மத்திய அரசையும் ஒருசேர விழிபிதுங்கச் செய்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக தனது தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. திமுக தனது தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் பொத்தம் பொதுவாகக் குற்றச்சாட்டுகளை வைத்துவரும் நிலையில், இதுகுறித்த உண்மைநிலையைக் கடந்த மாதம் தமிழக அரசு வழங்கிய தகவல்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை முனைமழுங்கச் செய்ய, அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியைத் தனக்குச் சாதமாகப் பயன்படுத்திக்கொண்டது சிறந்த சான்றாக உள்ளது.
அதன்படி 2021 தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளின் தற்போதைய நிலை:
✅ நிறைவேற்றப்பட்டவை – 364; முழுமையாகச் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள். (உதாரணம்: மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம், ₹1000 மகளிர் உரிமைத் தொகை)
⏳ மத்திய அரசு / ஆளுநர் வசம் – 37; மாநில அரசு நடவடிக்கை எடுத்தும், மத்திய அரசின் அனுமதி அல்லது ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருப்பவை. (உதாரணம்: நீட் தேர்வு விலக்கு)
???? அரசின் பரிசீலனையில் – 40; திட்டமிடல், வரைவு தயாரித்தல் அல்லது ஆரம்பக் கட்ட ஆய்வில் உள்ளவை.
❌ நிலுவையில் உள்ளவை / பிற – 64; நிதிச் சூழல் அல்லது நடைமுறைச் சிக்கல்களால் இதுவரை தொடங்கப்படாதவை.
???? கூடுதல் தகவல் - தேர்தல் அறிக்கையில் இடம்பெறாத காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் போன்ற பல சிறப்புத் திட்டங்களையும் அரசு செயல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனினும், எதிர்க்கட்சிகள் சுட்டிக்காடுவதுபோள் கல்வி கடன் ரத்து, மாதம் ஒருமுறை மின் கட்டணம், அனைத்து மகளிர்க்கும் உரிமை தொகை, இடைநிலை ஆசிரியர் நிரந்தரம், செவிலியர்கள் நிரந்தரம், அனைவருக்கும் நகைக்கடன் ரத்து போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இவ்வாறான நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக மற்றுமொரு சிறந்த தேர்தல் அறிக்கையை வழங்க திமுக தலைவர் சிறப்புக்கவனம் செலுத்திவருவதாகச் சொல்லப்படுகிறது. இதற்காக 2025 டிசம்பர் 17-இல் திமுக துணைப்பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவருமான திருமதி.கனிமொழி கருணாநிதி தலைமையிலான 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள் நியமிக்கப்பட்டதின் மூலம், நிர்வாக ரீதியான உளவுத்துறை தகவல், கட்சியினர் மூலம் தனக்கு கிடைக்கும் தகவல்களைத் தாண்டி, பல்வேறு தரப்பட்ட சமுதாய மக்களின் தேவைகளை நுணுக்கமாக முதல்வர் தெரிந்துகொள்ள முயல்வதாகச் சொல்லப்படுகிறது. எல்லோராலும் எளிதில் அனுகப்படக்கூடியவர், எளியவர்களின் வேண்டுகோளையும் பரிவோடும், பாசத்தோடும் அணுக்கக்கூடியவர், எவ்விதப் பக்கச் சார்புமின்றி உள்ளதை உள்ளபடி மக்களின் தேவையை அறிந்துகொண்டு சேர்ப்பவர், "ஏல்லோருக்கும் எல்லாம்" என்ற தனது ஆட்சியின் தாரக மந்திரத்திற்கு வலிமை சேர்க்கக்கூடியவராக தனது தங்கை கனிமொழி இருப்பார் என்ற நம்பிக்கை முதல்வருக்கு எப்போதும் உண்டு.
கலைஞரைப்போல் தனக்கு பேச்சுத்திறமை, எழுத்துத்திறமை இல்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட முதல்வர், ஆட்சித்திறனில் "Stalin is more dangerous than Karunanidhi" என்று எதிரிகளே சொல்லும் அளவிற்கு, அப்பாவைத் தாண்டிய பிள்ளையாக இருப்பதாக மூத்த பத்திரிக்கையாளர்கள் பலர் பேசுவதைப் பார்க்கின்றோம். எனவே, ஸ்டாலின் 2.0 ஆட்சி "அனைவருக்கும் அனைத்தும்" என்ற இலக்கை அடைவதும், தமிழகத்தின் வளர்ச்சி வளர்ச்சியடைந்த நாடுகளோடு ஒப்பிடும்வகையில் வரலாறு படைக்க வேண்டும் என்பதே அவரின் விருப்பமாக உள்ளதாகச் சொல்லப்படுகிறது. மக்களின் எதிர்பார்ப்பையும், தமிழகத்தின் வளர்ச்சியையும் ஒரேகோட்டில் இணைப்பதன் மூலம் தனது கனவு நிறைவேற்றப்பட வேண்டுமென திமுக தலைவர் நினைக்கின்றார். இதற்கு திருமதி.கனிமொழி கருணாநிதி தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு சேகரிக்கும் தகவல்கள் முக்கியப்பங்காற்றும்.

கடந்த ஜனவரி 9 ஆம் தேதி மண்டல வாரியாக சுற்றுப்பயணைத்தைத் தொடங்கிய இக்குழுவினர் பொதுநலச் சங்கங்கள், வணிக அமைப்புகள் - இளைஞர்கள், விவசாய அமைப்புகள் - தொழிலாளர் அமைப்புகள், தொழில்துறையினர், பொதுமக்களின் நலன் விழையும் அமைப்புகள் ஆகியவற்றை நேரடியாகச் சந்தித்து அவர்களின் கருத்துக்களையும், தேவைகளையும் கேட்டுவருகின்றனர். இதனடிப்படையில் திமுக தலைமை சார்பில் பல்வேறு அமைப்புகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டு வருகிறது. நேற்று (04.02.2026) திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில், பல்வேறு சமுதாய அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளைச் சந்தித்த தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவினர், அவரவர் சமுதாயம் சார்ந்த தேவைகளைக் கேட்டுப்பெற்றுக்கொண்டனர்.

இக்கருத்துக்கேட்புக்கூட்டத்தில் இராஜகம்பள தொட்டிய நாயக்கர் சமூகம் சார்பில் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழக பொதுச்செயலாளர் க.இராமகிருஷ்ணன் தலைமையில் அதன் நிர்வாகிகளும், வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் செ.இராதாகிருஷ்ணன் தலைமையில் அதன் நிர்வாகிகளும், தேர்தல் தயாரிப்புக்குழுவிடம் தங்கள் கோரிக்கைகளின் தேவையை எடுத்து வைத்தனர். அதனைத்தொடர்ந்து எழுத்துப்பூர்வமான கோரிக்கைகளை குழுத்தலைவர் திருமதி கனிமொழி கருணாநிதியிடம் வழங்கினர். இதில் தொட்டிய நாயக்கர் நலவாரியம், உள் இடஒதுக்கீடு, டிஎன்டி சாதிச்சான்றிதழ் பிரச்சினை, இராஜகம்பளத்தார் கோயில் நிலங்கள் சம்மந்தப்பட்ட பிரச்சினை, வனப்பகுதிக்குள் கால்நடை மேய்ச்சலுக்கு நீதிமன்றம் வித்தித்துள்ள தடையை அகற்றுவது உள்ளிட்ட பிரதான கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பண்பாட்டுக்கழக பொதுச்செயலாளர் க.இராமகிருஷ்ணன் "இராஜகம்பள சமுதாய மக்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள் எவை என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்து, தமிழக முதல்வர் கம்பளத்தார்களின் கோரிக்கைகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்" என்று நம்பிக்கை தெரிவித்தார். சந்திபின்போது இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் செ.இராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் ஆர்.பெருமாள், அமைப்புச்செயலாளர் ஆர்.சுந்தர்ராஜ், துணைச்செயலாளர் ஏ.முருகன், ஆர். ஆறுமுகச்சாமி, பண்பாட்டுக்கழக இளைஞரணி நிர்வாகி தாதா நாயக்கர், திருப்பூர் தொழிலதிபர் ஜெய்கணேஷ், கோபாலகிருஷ்ணன்ஆகியோரோடு சமூகநீதிக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி.இராமராஜ் உடனிருந்தார்.

