உயர்சாதிகளுக்கு மட்டுமே உத்தரவதமான நீதிபதி பதவிகள்!
இந்திய அரசியல் சாசனம் 76-ஆவது ஆண்டில் அடிெயடுத்து வைக்கும் இந்த வேளையில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்தில் சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கான பிரதிநிதித்துவம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருவது தற்போது மீண்டும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
உச்சநீதிமன்றத்திலும் - உயர்நீதிமன்றங்களிலும் பல்வேறு சமூக குழுக்கள் போதிய பிரதிநிதித்துவம் இல்லாமல் உள்ளன. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனச் செயல்முறையில் வெளிப்படையான பாகுபாடு காணப்படுவதை திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான வில்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.
2021 முதல் 2026 வரையிலான காலக்கட்டத்தில், நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் OBC, SC மற்றும் ST சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது குறித்தான கேள்விக்கு ஒன்றிய சட்ட அமைச்சர் வழங்கிய தரவுகள் அதிர்ச்சி தருவதாக உள்ளது.
01.01.2021 முதல் 30.01.2026 வரை நியமிக்கப்பட்ட 593 நீதிபதிகளில், 125 கோடி மக்கள்தொகை கொண்ட எஸ்சி/எஸ்டி/ஓபிசி சமூகங்களில்
26 பேர் SC சமூகத்தையும் ,
14 பேர் ST சமூகத்தையும்,
80 பேர் OBC சமூகத்தையும் சேர்ந்தவர்கள் என்பது தெரியவருகிறது.
சதவீத அடிப்படையில் பார்த்தால்,
2021 - 2026 (மொத்த நீதிபதிகள்: 593)
• SC: 4.38% (26)
• ST: 2.36% (14)
• OBC: 13.49% (80)
• FC: 79.76% (473)
இதே மோசமான பாகுபாடுதான் 2018 முதல் 2024 வரையிலான நீதிபதிகள் நியமனங்களிலும் இருந்துள்ளதை 2024-இல் நாடாளுமன்றத்தில் சட்ட அமைச்சர் வழங்கிய தரவுகள் உறுதி செய்கின்றன. அதன்படி 2018 முதல் 30.10.2024 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 684 பேர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அதில்,
• SC: 3.07% (21)
• ST: 2.05% (14)
• OBC: 11.99% (82)
• FC: 82.89% (567)
இந்த தரவுகள் வாயிலாக, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் முறையாக பாதுகாக்கப்படாமல் உரிமைகள் பறிக்கப்படும் அபாயம் உள்ளதை வழக்கறிஞர் வில்சன் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், குறிப்பிட்ட சில சமூகங்களைச் சேர்ந்த, ஒருபடித்தான பின்புலம் கொண்ட நீதிபதிகள் மட்டுமே நீதித்துறையில் இருப்பது, சமூகத்தின் பன்முகத்தன்மை கொண்ட மதிப்புகளையும், விழுமியங்களையும் பிரதிபலிக்காது என்ற மக்களின் கவலையை வில்சன் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, கலாச்சாரம் மற்றும் தலைமுறை வேறுபாடு சார்ந்த விவகாரங்களில், அவர்கள் சட்டங்களைச் சமூகப் பார்வையோடு அணுகாமல் தங்களின் சொந்த சமூக - பண்பாட்டு பின்னணியை அடிப்படையாகக் கொண்டு அணுகும் சூழல் நிலவுவதையும், பன்முகத்தன்மை வாய்ந்த நீதித்துறையே இன்றியாதது என்பதை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வில்சன் பிரதமர் மோடிக்கு வைத்துள்ள வேண்டுகோளில், போதிய பிரதிநிதித்துவம் இல்லாத சமூகக் குழுக்களின் உரிமைகளுக்கு ஆபத்தும், அதனூடாக பாகுபாடு உருவாகும் வாய்ப்பும் அதிகரிக்கும். வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்களில் இருந்து நீதிபதிகள் இல்லாதிருப்பது என்பது, தகுதி இல்லாமையோ அல்லது ஆட்கள் கிடைக்காததாலோ ஏற்பட்ட பற்றாக்குறை அல்ல. மாறாக, அவர்களை நீதித்துறையிலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட திட்டமிட்ட பாரபட்சமான முடிவே. குறிப்பிட்ட சில சமூகப் பிரிவினரின் அதீதப் பிரதிநிதித்துவம், தற்போதைய கொலிஜியம் அமைப்பின் நடுநிலைமையை கேள்விக்குள்ளாக்குவதோடு, சமூகப் பிரிவினைகளைக் கடந்து நீதிபதிகளைத் தேர்வு செய்வதில் அந்த அமைப்பு தோல்வி அடைந்துள்ளதையும் வெளிக்காட்டுகிறது. உயர்நீதித்துறை என்பது முன்னேறிய வகுப்பினருக்கானது மட்டுமல்ல. எனவே, உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் OBC / SC / ST சமூகங்களுக்கு மக்கள் தொகை விகிதத்திற்கேற்ப பிரதிநிதித்துவம் கிடைக்கவும், அதன் மூலம் சமூகத்தின் பன்முகத்தன்மை உறுதி செய்யப்படவும், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளார்.

