🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அமெரிக்கவாழ் இராஜகம்பளத்தார்!

தமிழகத்திலுள்ள தெலுங்குமொழி பேசும் மக்களையும், இராணி மங்கம்மாள், திருமலை நாயக்கர், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டு தமிழகத்தில் ஆட்சி செய்த மன்னர்களையும் அரசியல் களத்தில் கடுமையாக விமர்சித்து வருவது சீமான் தலைமையில் இயங்கும் நாம் தமிழர் கட்சி. இக்கட்சி சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர் அறிமுகக் கூட்டம் கடந்த வாரம் மாற்றத்திற்கான மக்களின் மாநாடு என்ற பெயரில்  திருச்சியில் நடைபெற்றது. இப்பட்டியலில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட இராஜகம்பள சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயரும் இடம்பெற்றுள்ளது என்கிற சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. இதன் விவரம் வருமாறு,

நாமக்கல் மாவட்டம் ஆவல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் எஸ்.இராஜசேகர். இவர் தற்போது அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். உணவு பதப்படுத்துதல் துறையில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வரும் இராஜசேகர், திருச்சி ஜமால் முகமது கல்லூரில் இளங்கலைப் பட்டம்பெற்றவர். இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பல்வேறு படங்களில் பணியாற்றியவர். பாரதிராஜா இயக்கி1991-இல் வெளிவந்த 'புது நெல்லு புது நாத்து' படத்தில் நடிகர் நெப்போலியன் தமிழ்திரையுலகிற்கு அறிமுகமானபொழுது இராஜசேகரின் நெருங்கிய நண்பரானார் நெப்போலியன். அமெரிக்காவில் குடியேறும் வரையில் தமிழ் திரைப்படத் துறையினரோடு நெருங்கிய தொடர்பில் இருந்த இராஜசேகர், 2024-இல் நெப்போலியன் மகன் தனுஷ் திருமணம் ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகரில் பிரமாண்டமாக நடைபெற்றபோது அவரின் குடும்ப நண்பராக திருமண வேலைகளைப் பகிர்ந்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதும் அமெரிக்கா செல்லும் தமிழ் சினிமா பிரபலங்கள் இராஜசேகரின் இல்லத்தில் விருந்தினராக வந்துசெல்வது வாடிக்கை.


பாரதிராஜாவுடன் பணியாற்றும் போது அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்த சீமானோடு நெருங்கிய நட்பு கொண்டிருந்தவர் இராஜசேகர். அமெரிக்காவில் குடியேறிவிட்டாலும் சீமானோடு நெருங்கிய தொடர்பின் காரணமாக, அந்நாட்டில் நாம் தமிழர் கட்சிப் பணிகளில் இராஜசேகர் ஈடுபட்டுவந்ததாகச் சொல்லப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் இராஜகம்பள சமுதாயத்தைச் சேர்ந்த இராஜசேகர்.   

234 தோகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வேட்பாளர்களை அறிவித்துள்ள நாம் தமிழர் கட்சியில் பெண்களுக்கு சரிசமமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு வண்ணார், நாவிதர், ஆசாரி போன்ற சாதி சிறுபான்மையினருக்கும், நாயுடு, நாயக்கர், ரெட்டியார், 24 மனை தெலுங்கு செட்டியார் போன்ற மொழி சிறுபான்மை சாதியினருக்கும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் என்னதாம் தெலுங்குமொழி பேசுபவர்களை வந்தேரிகள் என்று மேடைதோறும், பேட்டிகள் தோறும், விவாதங்கள் தோறும் இழித்தும், பழித்தும் பேசினாலும், தமிழகத்தில் தெலுங்கர்களின் வாக்கு வங்கி எந்தக்கட்சியாலும் புறக்கணிக்கமுடியாதது என்பது நிரூபனமாகியுள்ளது. 

நாம் தமிழர் கட்சியைப் பொருத்தவரை சீமானின் மனைவியே தெலுங்கர் என்ற விமர்சனம் ஒருபுறம் இருந்தாலும், தெலுங்கர்களை எதிரிகளாகக் கட்டமைப்பதின் மூலம் ஒரு வாக்கு வங்கி தங்கள் கட்சியை நோக்கி வருவதாக அக்கட்சியினர் நம்புகின்றனர். ஒரு கட்சி தனக்கான வாக்குவங்கியை ஒரு எதிரியைக் காட்டி கட்டமைத்துக்கொள்வது அரசியலில் ஒன்றும் புதிதல்ல. நாம் தமிழர் கட்சியின் அடிப்படைக் கொள்கை முழக்கத்தை, தெலுங்கர்களுக்கு எதிரான கடுமையான போக்கை ஏற்றுக்கொள்வதும் புறக்கணிப்பதும் பொதுமக்களின் உரிமை. ஆனால் எதார்த்தமான நடைமுறை அரசியலில் தொட்டிய நாயக்கர் போன்ற குறிப்பிடத்தக்க அளவில் மக்கள்தொகை மொழி மற்றும் சாதி சிறுபான்மையினர் அரசியல் அங்கீகாரத்திற்காக ஏங்கிக்கொண்டிருக்கும் நிலையில் சீமான் தனது கட்சி சார்பில் இராஜகம்பளத்தாருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது பாராட்டுக்குரியதே.  

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved