திமுக வேட்பாளராகப் போட்டியிட ஆர்வம் காட்டும் இராஜகம்பளத்தார்!
தமிழ்நாட்டின் 17-வது சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் சார்பில் சட்டமன்ற வேட்பாளராகப் போட்டியிடவிரும்பும் கட்சியினர்களுக்கு விருப்பமனு விநியோகம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே, டிசம்பர் மாதம் அதிமுக விருப்பமனு விநியோகத்தின் போது, தமிழகம் முழுவதிலுமிருந்து 10 க்கும் மேற்பட்ட இராஜகம்பள சமுதாய அரசியல் பிரமுகர்கள் விருப்பமனு அளித்திருந்தனர். இந்நிலையில், தற்போது திமுக சார்பில் சட்டமன்ற வேட்பாளராகப் போட்டியிட இராஜகம்பள சமுதாயத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர்கள் முன் எப்போதும் இல்லாத அளவில் மிகுந்த ஆர்வம் காட்டி வருவது தெரியவருகிறது. இதுபற்றிய முழுவிவரம் வருமாறு,
தமிழக சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளைத் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்ட நிலையில், பிரதான அரசியல் கட்சிகளான திமுக-வும், அதிமுக-வும் வேட்பாளர்களின்றியே முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, தொகுதிப்பங்கீடு சம்மந்தமாக கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம், தங்கள் கட்சிகளின் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினருக்கு விருப்பமனு விநியோகமும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

ஏற்கனவே அதிமுக, தேமுதிக, தவெக, பாமக (இரா), அமமுக போன்ற கட்சிகள் விருப்பமனு வினியோகத்தை முடித்திருக்கும் நிலையில், அதிமுக விருப்ப மனு அளித்தவர்களை அழைத்து நேர்காணலையும் நடத்தி முடித்துள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சியோ கடந்த வாரம் ஒரே மேடையில் அனைத்து தொகுதிகளுக்குமான வேட்பாளரை அறிவித்து தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டனர்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆளும்கட்சியான திமுக-வில், கடந்த பிப்.20 இல் தொடங்கிய விருப்பமனு விநியோகம் இன்றுடன் (மார்.2) நிறைவடைவதாக இருந்தது. இந்நிலையில் கட்சித் தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று மார்ச்'6 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒருவார காலமாக விருப்பமனு விநியோகிக்கப்பட்டு வரும்நிலையில், நேற்று அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, விருப்பமனு விநியோகம் உச்சத்தைத் தொட்டது. விருப்பமனு பெற அக்கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அலைமோதும் திமுக தொண்டர்களின் கூட்டத்தால், அப்பகுதியே திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. நேற்றுவரை 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்பமனு அளித்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விருப்பமனு அளிக்க இன்னும் நான்கு நாட்கள் உள்ளநிலையில் இந்த எண்ணிக்கை 12 ஆயிரத்தைத் தாண்டும் என்று நம்பப்படுகிறது.

இதற்கிடையே, முன் எப்போதும் இல்லாத அளவில் இராஜகம்பள சமுதாயத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் இந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அதிக ஆர்வம் காட்டி வருவது தெரியவந்துள்ளது. ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் அதிமுகவில் விருப்பமனு வினியோகம் நடைபெற்றபோது 10-க்கும் மேற்பட்ட இராஜகம்பளத்தார் விருப்பமனு வழங்கியிருந்தனர். தற்போது திமுக விருப்பமனு விநியோகத்திலும் இதே 'டிரண்ட்' நீடிக்கும் என்று தெரிகிறது. ஒன்றியச் செயலாளர்கள், பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் என நூற்றுக்கணக்கான கம்பளத்தார்கள் திமுக-வில் இருந்தாலும், உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் ஆர்வம் போல் சட்டமன்றத் தேர்தல்களின் போது இருப்பதில்லை.
இதற்கு முக்கியக் காரணமாக சாதி-மொழி சிறுபான்மையினரால் சொல்லப்படுவது யாதெனில், பொருளாதார பலம், சாதி பலம் என்பதையெல்லாம் தாண்டி, மாவட்டச் செயலாளர் / அமைச்சர் அனுமதியின்றி விருப்பமனு அளித்தால், எங்கே கட்சியில் 'கட்டங்கட்டி' விடுவார்களோ என்ற பயமே பிரதானமாக உள்ளது. அனுமதி என்பதைத்தாண்டி மாவட்டச் செயலாளர்களிடம் விருப்பத்தைத் தெரிவித்தாலே அவர் எப்படி எடுத்துக்கொள்வார் என்று தெரியாது என்பதால், பெரும்பான்மை சமுகத்தைச் சேர்ந்த கட்சியினரே அடக்கி வாசிக்கும் போது, இராஜகம்பளத்தார் போன்ற மொழி-சாதி சிறுபான்மையினர் நிலை கேட்கவே தேவையில்லை என்கின்றனர். ஒருவழியாகத் தங்கள் ஆசைக்காக விருப்பமனு அளித்தாலும் கூட, பணத்தைக்கட்டிவிட்டு மாவட்டச் செயலாளர் / அமைச்சரைச் சென்று சந்தித்து ரசீதைக்காட்டி ஆசிவாங்கிச் செல்வதையும் பார்க்கமுடிகிறது.

இந்த வாய்ப்புகூட திமுக-வில் ஸ்டாலின் அவர்கள் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பின்புதான் இந்த அளவுக்காவது சுதந்திரத்தைப் பெற்றுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அரசியல் விமர்சகர் இரவீந்திரன் துரைசாமி சொல்வதுபோல், முழுமையாக கலைஞர் போலவும் இல்லாமல், ஜெயலலிதா போலவும் இல்லாமல், இரண்டுபேரின் கலவையாக மு.க.ஸ்டாலின், தனக்கே உரிய தனி பாணியை வகுத்துக்கொண்டு செயல்படுகிறார். குறிப்பாக 'எடுத்தேன்-கவிழ்த்தேன்' என்று இல்லாமல், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் நிதானம் கட்சியினர் மத்தியில் ஆர்வமும், நம்பிக்கையும், துணிச்சலும் வந்துள்ளது. அதன் எதிரொலிப்பு தான் அண்ணா அறிவாலயத்தில் கூடும் கூட்டம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
இந்தப்போக்கு இராஜகம்பள சமுதாயத்திலும் எதிரொலிக்காமல் இல்லை. அம்மையார் இருந்த காலத்திலேயே அதிமுகவில் எதாவது ஒரு இராஜகம்பள சமுதாயத் தலைவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட நிச்சயம் விருப்பமனு வழங்குவார்கள். ஆனால், திமுகவில் அப்படி யாரும் விருப்பமனு வழங்காதநிலையே நீண்டகாலமாக இருந்துவருகிறது. எப்போதாவது அத்திபூத்தாற்போல் மாவட்டச் செயலாளர் அனுமதி பெற்று விருப்பமனு வழங்குவதுண்டு. அப்போதைக்கு மாவட்டச் செயலாளர் 'ஒகே' சொல்லிவிட்டாலும் அதற்கடுத்து அவருக்கு கட்சியில் இறங்குமுகம் தான்.

இவ்வாறான அரசியல் சூழலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளான நேற்று கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ள விவரம் தற்போது தெரியவந்துள்ளது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த க.மாசிலாமணி மற்றும் ந.தேவராஜ் ஆகிய இருவரும் நேற்று (01.03.2026) அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு அளித்துள்ளனர்.
கோவை தெற்கு மாவட்ட திமுக கழகத்தைச் சேர்ந்த இவ்விருவரும் 'கிணத்துக்கடவு' சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்திருப்பது தெரியவந்துள்ளது. சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இராஜகம்பள சமுதாய மக்களும், ஒரு லட்சம் வரையிலான தெலுங்குமொழி பேசும் சமுதாய மக்களும் வசிக்கும் இத்தொகுதியானது ,கோவை மாநகரை ஒட்டி கேரள மாநிலத்தை எல்லையாகக் கொண்டுள்ளது.

மதுக்கரை ஒன்றிய முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினரான க.மாசிலாமணி பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர், 30 வருடங்களுக்கு மேலாக திமுகழகத்தில் அடிப்படை உறுப்பினராகவும், பல ஆண்டுகளாக கிளைக்கழக செயலாளராகவும் இருந்துவருகிறார். ஈச்சனாரியை அடுத்த மாசேகவுண்டன்பாளையத்தில் வசிக்கும் க.மாசிலாமணி, 2019 முதல் 2024 வரை ஒன்றியக் குழு உறுப்பினராகத் திறம்படப் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே ஊரைச்சேர்ந்த ந.தேவராஜ், 25 ஆண்டுகளாக திமுகழகத்தில் அடிப்படை உறுப்பினராக உள்ளார். தற்போது கோவை தெற்கு மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளராகப் பொறுப்பு வகித்துவரும் தேவராஜ், திமுகழகம் அறிவித்த அனைத்துப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களிலும் பங்கெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு வழங்கி, தங்கள் அரசியல் பொதுவாழ்வில் அடுத்த பரிணாமத்தைத் தொடங்கியுள்ள இராஜகம்பள சமுதாயத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களை வாழ்த்தி, அரசியலில் பல உயரங்களைத் தொட உறுதுணையாக இருப்போம்.

