🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வரலாற்றில் முதன்முறையாக இராஜகம்பளத்தார்க்கு வாய்ப்பு வழங்கிய பாஜக!

தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்தல் மேலாண்மைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 37 துறைகளுக்கு 116 நபர்கள் அடங்கிய குழுவை நியமித்து, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள இப்பட்டியலில் முக்கிய மாநில பாஜக தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இதில் பாஜக மாநில இளைஞரணி துணைத்தலைவரும், இராஜகம்பள சமுதாயத்தைச் சேர்ந்த இளம் தலைவர்களில் ஒருவருமான இராஜேஷ் குருசாமி பெயரும்  இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபற்றிய மேலதிக விவரம் வருமாறு,

17வது தமிழக சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் எந்தநேரமும் வெளியாகவுள்ள நிலையில், அரசியல் வட்டாரங்கள் மிகுந்த பரபரப்புடன் இயங்கிவருகிறது. பிரதமர், உள்துறை அமைச்சர், தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என அனைவரும் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டனர். ஆளும்கட்சியான திமுக மண்டலம் தோறும் பிரமாண்ட மாநாடுகளை நடத்தி வரும் நிலையில், பிரதமரின் தமிழக வருகைக்கான அடுத்தடுத்த தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒருபுறம் கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு வார்த்தையை நடத்திக்கொண்டே, தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்களையும் கட்சிகள் வகுத்து வருகின்றன. 

கடந்த ஒருவருடங்களாகவே கீழ்மட்ட அளவிலான நியமனங்களில் கவனம் செலுத்திவந்த அரசியல் கட்சிகள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் முதல் மேல்மட்டம்வரை நிர்வாகிகள் வரை அனைத்து நியமனங்களையும் செய்து முடித்துள்ளன. இதன் அடுத்தகட்டமாக சட்டமன்றத் தேர்தலை முழுவீச்சில் எதிர்கொள்ளும் வகையில் தேர்தல் பணிகளைக் கையாள்வதற்கான பொறுப்பாளர்களை அரசியல் கட்சிகள் நியமனம் செய்யத் தொடங்கியுள்ளன. 


அந்தவகையில், தேர்தல்பணிகளை 37 வகைகளாகப் பிரித்துள்ள தமிழக பாஜக, முக்கியத் தலைவர்கள் 116 பேர்களை உள்ளடக்கிய மாநிலத் தேர்தல் மேலாண்மைக் குழுவை நியமனம் செய்துள்ளது.மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ள இக்குழுவில், கட்சியின் முக்கியத் தலைவர்களான தமிழைசை சௌந்திரராஜன், சக்கரவர்த்தி, கரு.நாகராஜன், குமாரவேல், பால்.கனகராஜ், கே.டி.ராகவன், அர்ஜுனமூர்த்தி, நாராயணம் திருப்பதி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இதில் சிறப்பம்சமாக, பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவரும், இராஜகம்பள சமுதாயத்தைச் சேர்ந்த இளம் தலைவர்களில் ஒருவருமான இராஜேஷ் குருசாமி பெயரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் அறிக்கை தயாரிப்பு, ஊடக ஒருங்கிணைப்பு, தேர்தல் பிரசுரங்கள் விநியோகம், தேர்தல் சுற்றுப்பயணங்கள் திட்டமிடல் உள்ளிட்ட 37 பணிகளை இக்குழு ஒருங்கிணைக்க உள்ளது. இதில் மாநிலத்திலுள்ள பல்வேறு சமுதாயத் தலைவர்களைத் தொடர்புகொண்டு கட்சிக்கு ஆதரவாக ஒருங்கிணைக்கும் பணியில் இராஜேஷ் குருசாமி இடம்பெற்றுள்ள குழுவினர் ஈடுபட உள்ளனர்.

75 ஆண்டுகால சுதந்திர இந்திய வரலாற்றில் தெலுங்குமொழி பேசும் இரண்டாவது பெரிய சமூகமான இராஜகம்பளத்து தொட்டிய நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மாநில அளவிலான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது கம்பளத்தாரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பெரும் அரசியல் கனவுகளோடு பல கட்சிகளிலும் இராஜகம்பள சமுதாயத்தினர் பயணித்துவரும் நிலையில், 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இச்சமூகத்திற்கு எந்தவொரு கட்சியும் உரிய  அங்கீகரம் அளிக்கவில்லை என்பது பெரும்பான்மை மக்களின் வருத்தமாக உள்ளது. காங்கிரஸ் காலத்தில் ஒருசில ஜமீன்தார்கள் மட்டுமே சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்துள்ளனர். 

தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் கோலோச்சத் தொடங்கியபின், 1977-இல் திமுக சார்பில் வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் க.சுப்பு அவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை சுமார் அரைநூற்றாண்டுகாலமாக அக்கட்சியில் கம்பளத்தார்க்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேபோல் அதிமுகவில் விருதுநகர் தொகுதியில் அதிமுக சார்பில் 1980,1984, 2011 ஆகிய தேர்தல்களில் சுந்தரராஜன் மற்றும் கலாநிதி ஆகியோர்க்கும், மதிமுக சார்பில் 2006-இல் அதே தொகுதில் மதிமுக சார்பில் வரதராஜனுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதிலிருந்து மூன்று தேர்தல்களாக அதிமுகவிலும் இராஜகம்பளத்தார்க்கு வாய்ப்பு வாங்கப்படவில்லை.

தேர்தல் வாய்ப்புகளைத் தாண்டி, தேர்தல் மேலாண்மைக்குழு போன்ற எந்தப்பொறுப்புகளிலும், எந்தக்கட்சியிலும் இராஜகம்பளத்தார்கள் நியமிக்கப்பட்டதே இல்லை என்பதே பெருங்குறையாகப் பார்க்கப்படுகிறது. தேர்தல் சமயங்களில், தேர்தல் பணிகளை  ஒருங்கிணைப்பதற்காக, ஒவ்வொரு கட்சியிலும் தொகுதி வாரியாகத் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவது வாடிக்கை. அந்த வகையில், 234 தொகுதிகளுக்கு நூற்றுக்கணக்கானோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகின்றனர். இதில்கூட 40 லட்சம் மக்கள்தொகை ஒண்ட இராஜகம்பள சமுதாயத்தில் யாருக்கும் இடமில்லை என்பதே இன்றைய தேதிவரையிலான நிலை. எனவே நெடுங்காலமாக சமுதாய மக்களுக்கு இருந்துவரும் மனக்காயத்திற்கு தேர்தல் மேலாண்மைக்குழுவில் இராஜேஷ் குருசாமியை நியமித்ததின் மூலம் மருந்திட்டுள்ளது தமிழக பாரதிய ஜனதா கட்சி. 

கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக இராஜகம்பள சமுதாயம் மிகவும் பின் தங்கிய நிலையில்  இருந்தாலும், இந்திய வரலாற்றில் நீண்ட பாரம்பரியமுடைய சமூகம் என்ற வகையில் 'அரசியல்' என்பது ஒவ்வொரு குடும்பத்திலும் ஆழமாக வேறூன்றியுள்ளது. முதல்முறையாக  கம்பளத்தாரின் வலிமையும், உண்மையும் உணர்ந்து, இளம் தலைவர் ஒருவருக்கு மாநிலத் தேர்தல் மேலாண்மைக்குழுவில் இணைத்துள்ளதற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவருக்கு இராஜகம்பள சமுதாய மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved